புதிதாக ஜிம்முக்குப் போகிறவர்கள். உடற்பயிற்சி செய்பவர்கள் செய்யும் தொடக்கநிலைத் தவறுகள் என்னென்ன? என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
புதியவர்கள் செய்யும் வொர்க் அவுட் தவறுகள்
ஜிம்முக்குப் போகிறோம். வொர்க்அவுட் செய்யத் தொடங்கிவிட்டோம் என்ற உணர்வு கொடுக்கும் பெருமிதம் அற்புதமானது. புதிதாக ஜிம்முக்குப் போகிறவர்கள். உடற்பயிற்சி செய்பவர்கள் செய்யும் தொடக்கநிலைத் தவறுகள் என்னென்ன? அவற்றை எப்படிக் களைவது என்று பார்க்கலாம்.
1. சிலர் உடற்பயிற்சிக்குள் நுழையும்போதே ‘நான் 15 கிலோ எடையைக் குறைக்க வேண்டும்’ என்றும், ‘நான் 10 கிலோ எடையைக் கூட்டி உடலை வலுவாக்க வேண்டும்’ என்றும், ‘தினமும் மூன்று வேளை உடற்பயிற்சி செய்ய வேண்டும்’ என்று பெரிய திட்டங்களோடு மிகுந்த ஆர்வமாகச் செயலில் இறங்கி, விரைவில் சோர்ந்துபோய் உடற்பயிற்சியையே கைவிடும் நிலைக்குப் போகிறார்கள்.
உங்கள் இலக்குகளைச் சிறிது சிறிதாகப் பிரித்துக்கொள்ளுங்கள். தொடக்கத்தில், இந்த மாதம் இரண்டு கிலோ குறைய வேண்டும். இந்த வாரம் கால் மணி நேரம் நடக்கத் தொடங்க வேண்டும். அடுத்த வாரம் முதல் ஐந்து ஐந்து நிமிடங்களாகக் கூட்ட வேண்டும். என இலக்குகளைச் சிறிதாக்கும்போது அதில் கிடைக்கும் வெற்றி தொடர்ந்து முன்னேற ஊக்கமாக இருக்கும்.
2. வொர்க்அவுட் செய்யத் தொடங்கும் புதிதில் சிலர் தங்கள் உடற்பயிற்சி தொடர்பாக எதையுமே குறித்து வைத்துக்கொள்வது இல்லை. இப்படி இருந்தால், உங்கள் பயிற்சியில் ஏற்படும் முன்னேற்றம், சிக்கல்கள், குறைபாடுகள், சறுக்கல்கள் பற்றிய முழுமையான சித்திரம் உங்களுக்குக் கிடைக்காது.
என்ன பயிற்சி செய்தீர்கள், எவ்வளவு நேரம் அல்லது எத்தனை முறை செய்தீர்கள், எவ்வளவு எடையைத் தூக்கினீர்கள், எவ்வளவு தூரம் நடந்தீர்கள், எவ்வளவு கலோரி உட்கொண்டீர்கள், எவ்வளவு எரித்தீர்கள், பயிற்சியின்போது என்ன பிரச்னை ஏற்பட்டது, அன்றைய எடை எவ்வளவு, உடலின் அளவு என்ன என அனைத்தையும் பதிவுசெய்யுங்கள். இது உங்களின் முன்னேற்றத்துக்கும், அடுத்தமுறை தவறு செய்யாமல் இருப்பதற்கும், தொடர்ந்து இயங்குவதற்கான கமிட்மென்ட்டுக்கும் பெரிதும் உதவும்.
3. சிலர் உடற்பயிற்சி செய்கிறோம் அதிகப் பலன் கிடைக்கவேண்டும் என மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்வார்கள். இன்னும் சிலர் முதல் நாள் இரவு பீஸா, பரோட்டா என வெளுத்துவாங்கிவிட்டு, மறுநாள் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வார்கள். மோசமான டயட்டுடன் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வது நல்ல பலனைத் தராது. எனவே, ஆரோக்கியமான, சமச்சீரான டயட், தேவையான அளவு புரோட்டின் போன்றவற்றுடன் மருத்துவர் பரிந்துரைப்படி அவசியமானால் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.