நீங்கள் உடல் பருமன் ஆனவர், கர்ப்ப கால நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவராக இருந்திருந்தால், உங்கள் மகள் மிக விரைவாகப் பருவமடைதலுக்கு நீங்களும் ஒரு காரணமாக இருப்பீர்கள்.
கர்ப்ப காலத்தின் போது அதிகரிக்கும் எடையும் நீரிழிவு நோயும் கருப்பையைச் சென்று தாக்குவதால், பிறக்கும் குழந்தைகள் சிறுவயதிலேயே பருவமடைவதற்கு தாய் காரணமாகிறார் என சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
சிறுவயதிலேயே பருவமடைந்த பெண்களைப் பற்றிய ஆய்வு ஒன்று நிகழ்த்தப்பட்டது. அதற்கான காரணம் என்னவென்று ஆராயப்பட்டபோது, சிறுவயதிலேயே பருவமடையும் பெண்களின் தாய்மார்கள் அவர்களுடைய கர்ப்ப காலத்துக்கு முன்பு அதிக எடையுடனும் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்பது கண்டறியப்பட்டது.
அதேசமயம், கர்ப்ப காலத்துக்கு முன்பு சராசரி எடையுடன் இருக்கும் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு இத்தகைய பிரச்னை அதிகமாக இல்லை. அவர்களுக்கு அவர்கள் வாழும் சூழல், வீட்டின் பொருளாதார நிலை, சுதந்திரமான செயல்பாடுகள், இவர்களுடைய குடும்ப மரபு மற்றும் தாயின் முதல் மாதவிலக்கு சுழற்சி ஆகியவை அடிப்படையாக அமைந்திருந்தது தெரிய வந்தது.
இதுபோன்ற, முன் பருவமடைதலால் நிறைய உடல் ரீதியான பிரச்னைகள் தோன்றுகின்றன. குறிப்பாக, உடல்பருமன், நீரிழிவு, கர்ப்பப்பை கோளாறுகள், புற்றுநோய் போன்றவற்றிற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றன.
இதுபற்றி அமெரிக்க சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஐ குபே கூறுகையில், பெண்கள் கர்ப்ப காலத்துக்கு முன்பாகவே திட்டமிடல், கர்ப்ப காலத்தில் தங்கள் உடல்எடை மற்றும் நீரிழிவு பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இல்லாவிடில் எதிர்காலத்தில் அது அவர்களுடைய குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், வடக்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த 421 பெண்களைக் கொண்டு இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.
6 முதல் 8 வயதுக்குட்ட பெண்களைக் கடந்த 2005 முதல் 2012 வரை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் அவர்களுடைய உயரம், எடை ஆகியவை முறையாக அளவிடப்பட்டு ஆராயந்த பின்னரே, இத்தகைய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது என்றும் கூறினார்.