சூடான செய்திகள்:இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் பயன்பாடு என்பது மிகவும் அதிகமாகி விட்டது; சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் எந்நேரம் பார்த்தாலும் இந்த போனுடனேயே தான் திரிகின்றனர். இவர்கள் தான் இப்படி என்றால், இன்றைய காலத்தில் பிறக்கும் குழந்தைகள் கூட, பிறந்த அடுத்த நிமிஷம் ஸ்மார்ட் போனை தான் தூக்குகின்றனர்.
இப்படியே விட்டால், இனி பிறக்கும் பொழுதே ஸ்மார்ட் போனுடன் அல்லது கருவறையிலேயே ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் அளவிற்கு நாகரீகம் நம்மை இட்டு சென்று விடுமோ என்ற அச்சமும் வியப்பும் மனதில் ஏற்படுகின்றன.
மலட்டுத்தன்மை! இன்றைய காலத்தில் தம்பதியர் பலர் சந்திக்கும் பெரிய பிரச்சனையாக இருப்பது மலட்டுத்தன்மை தான். மலட்டுத் தன்மை என்னும் விஷயம் ஆண்கள் மற்றும் பெண்களின் உடலில் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், பொதுவாக பெரும்பாலான தம்பதியர்கள், அவர்கள் அன்றாட பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்களால் மலட்டுத் தன்மை பிரச்சனையை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் குறிப்பாக ஸ்மார்ட் போன் பயன்பாடு, மடியில் வைத்து கணினியில் வேலை பார்த்தல் போன்றவை அடங்கும்.
ஸ்மார்ட் போன்! போன் என்பதை தொலைவில் உள்ள மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு, தங்களது அன்பை, ஆதரவை, தகவலை தெரிவித்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட சாதனம். அது படிப்படியாக பல நிலைகளில் வளர்ச்சி அடைந்து இன்று உலகத்தையே உள்ளங்கையில் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது. நாமும் பல தகவல்களை, நேரம் செலவிட அதாவது பொழுதுபோக்க என்று எல்லா விதத்திலும் பயன்படும் விதமாக உள்ளது, இன்றைய கால ஸ்மார்ட் போன்.
சமூக வலை தளங்கள்! ஸ்மார்ட் போன் மோகம் அதிகரிக்க மிக முக்கிய காரணமாக இருப்பது சமூக வலை தளங்கள் என்று கண்டு அறியப்பட்டு உள்ளது. சமூக வலை தளங்கள் மக்களை அதில் நேரம் செலவிட வைத்து, அவைகள் நன்கு பணம் சம்பாதித்துக் கொள்கின்றன. இந்த தகவலை அறிந்தும் மக்கள் வேறு வழியின்றி ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளவும், தகவல்கள் அறிந்து கொள்ளவும், நேரம் செலவிடவும் இந்த சமூக வலைத்தளங்களில் தெரிந்தே தன்னை தொலைத்து கொள்கின்றனர்.
கருத்துக் கணிப்பு! இன்றைய கால இளைய தலைமுறையினர் ஒரு நாளின் 24 மணி நேரத்தில், கிட்டத்தட்ட 18 மணி நேரத்தை ஸ்மார்ட் போனில் செலவிடுவதாகவும், அதில் 10 மணி நேரத்திற்கும் மேலாக சமூக வலை தளங்களில் அவர்கள் நேரம் செலவிடுவதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஸ்மார்ட் போன் பயன்பாடு இருந்தால், மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் நேராக பேசிக்கொள்வதும் பழகுவதும் எப்படி நடைபெறும்.? தம்பதியர்கள், குடும்பம், குழந்தை இவற்றின் நிலை என்ன ஆகும் என்று சிந்தித்து பாருங்கள்!
தம்பதியர் வாழ்க்கை! முந்தைய காலத்தில் தம்பதியர்கள் பேசி கொள்ளும் நேரமும், பழகும் நேரமும் அதிகமாக இருந்தது; அதனால் விவாகரத்து என்ற சொல்லே இல்லாமலும், குடும்ப அமைப்பு என்பது மிகவும் பலமானதாகவும் இருந்தது. ஆனால், இப்பொழுது எதற்கெடுத்தாலும் விவாகரத்து என்று கூறுவதுடன், பிரிந்தும் தனித்தும் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
நேரம் தொலைந்தது! போனில் தன்னையே தொலைத்துக் கொள்வதால், அருகில் இருக்கும் துணை, குடும்பம், குழந்தை போன்றவை இரண்டாம் பட்சமாக மாறி விடுகின்றன; இந்த நிலை உண்டாகி வருவதை கண்டிப்பாக மறுக்க இயலாது. விழாக்களின் பொழுது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்ந்த நாம், இன்று உலகத்திற்கே போன் மூலம் வாழ்த்து சொல்கிறோம்; மேலும் போனில் தான் குடும்பத்திற்கே வாழ்த்து கூறுகிறோம்.
உறவு தொலைந்தது! போனை எந்நேரமும் பயன்படுத்தி, பயன்படுத்தி பாத்ரூம், படுக்கை அறை என எங்கும் பயன்படுத்துகிறோம்; இதனால் தம்பதியர்களின் வாழ்க்கையில் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள ஈடுபாடும், பாசமும் குறைந்து போகிறது. இவ்வளவு ஏன் தம்பதியர்களை இணைத்து வைக்கும் முக்கிய தனிப்பட்ட விஷயமான உடல் உறவு என்பதே மறைந்து – மறந்து, அதில் விருப்பம் குறைந்து போகும் நிலை உண்டாகிறது.
குழந்தை – குடும்பம் தொலையும்! இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், தம்பதியர்களுக்கு பெற்றோர் ஆக வேண்டும் என்ற எண்ணம் குறையலாம்; குழந்தை பிறந்தாலும் போனில் நேரம் செலவிடுவது தான் முக்கியம் என்று தோன்றி, குழந்தையின் மீதான கவனம் குறையலாம். இந்த காரணங்கள் காரணமாக விரைவில் நம்மிடையே குடும்பம் என்ற அமைப்பே தொலைந்து மறைந்து போய் விடும் வாய்ப்பு உண்டு.
குருடு – மலடு! அன்றாடம் நடக்கும் மாற்றங்களை பார்த்தும் பார்க்காதது போல, உணர்ந்தும் உணராதது போல இப்படியே விட்டுக்கொண்டு போனால், கண்கள் இருந்தும் குருடனாகி, நாம் செய்யும் செயல்களை நாமே கவனிக்க மறந்து போனால், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டு தன்மை மட்டும் அல்ல; எல்லா வித பிரச்சனைகளும் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
உண்மையை உணர்வோம்! எல்லாம் நம்மை விட்டு நீங்கும் முன், நாம் அனைத்தையும் மாயை காரணமாக தொலைத்து விடும் முன் நமது வாழ்க்கையை மீட்டு எடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஸ்மார்ட் போனே வேண்டாம், சமூக வலைத்தளங்களே வேண்டாம் என்று கூறவில்லை; அதனை பயன்படுத்தும் வீதத்தை குறைத்து, கொஞ்சம் குடும்பம், பிள்ளை குட்டிகளுக்கு நேரத்தையும் நேசத்தையும் கொடுப்போமாக!