காதல் உறவுகள்:காதல் ஒரு அஞ்சறைப் பெட்டி. இது அனைத்து விதமான உணர்வுகளையும் சரி பங்கு கலவையாக கொண்டிருக்கும். ஆனால், சிலர் ஒருசில சுவையை மட்டும் எடுத்துக் கொண்டு… ஒரு சில சுவைகள் வெளிப்படும் போது அந்த அஞ்சறைப் பெட்டிசரியல்ல.. மோஷம் என்று கூறி பிரிந்து விடுகிறார்கள். சிலர் காரம் மட்டும் வேண்டுகிறார்கள், சிலர் இனிப்பு மட்டும் போதுமென்கிறார்கள்… ஆனால் உண்மையில் கசப்பு தான் சிறந்த சுவை. கசப்பை உணராமல் வேறு எந்த ஒரு சுவையையும் முழுமையாக உணர முடியாது. கசப்பு ஒரு மருந்தும் கூட. அழகான உணர்வுகள், பாவங்கள் கொண்ட காதலை நம் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முயற்சிப்பது தான் நாம் செய்யும் முதல் தவறு. காதல் காற்றை போல என்பார்கள்… அதை சுவாசித்தால் மட்டும் தான் உணர முடியும். மேலும், காற்றை எதிலும் அடைக்கவும் முடியாது, அதற்கு உருவமும் இல்லை. உருவமில்லாத ஒன்றை, உங்களுக்கு விருப்பாமான உருவத்திற்குள் அடைக்க முற்படும் போதுதான் தோல்வியை எதிர்கான வேண்டி இருக்கிறது.
காதல், சேர்ந்திருக்க வேண்டியது… சோதித்து பார்க்க வேண்டியது அல்ல. காதல் ரசித்து பார்க்க வேண்டியது… ருசித்து பார்க்க வேண்டியது அல்ல… காதலில் இருவேறு பாதைகள் இருக்கலாம் ஆனால், சேரும் இடம் ஒன்றாக இருக்க வேண்டும். சரி! இப்படியான ஒரு கடினமான போட்டியாக நிலவும் ரிலேஷன்ஷிப்ல சாம்பியன்ஷிப் வாங்கணும்னா இந்த ஆறு ரூல்ஸ் தெரிஞ்சுக்கங்க…
தனிப்பட்ட சுதந்திரம்!
காதலை ஏற்கும் வரை முழு சுதந்திரம் கொடுத்துவிட்டு… காதலை ஏற்றவுடன் என்னமோ உயில் எழுதி கொடுத்தது போல… விலைக்கு வாங்கிய நாய் குட்டி போல துணையை முற்றிலும் ஆராய்வது, செல்லும் இடம் எல்லாம் நோட்டமிடுவது, சொல்லாமல் சென்றால் கோபத்தை காட்டுவது என ஒருவர் மற்றொருவருடைய சுதந்திரத்தை பறிப்பது தான் காதலில் பலரும் ப்ரேக் செய்யும் முதல் ரூல். மேலும், துணை நண்பர்களுடன் வெளியே செல்லும் போதுதான்… நீ என்கூட மட்டும் வெளியில வரதே இல்ல, எப்ப பார்த்தாலும் பிரெண்ட்ஸ் கூடவே இருக்க என்று புலம்புவது. இதை எல்லாம் முதலில் விட்டொழிய வேண்டும்.
பொறாமை!
முன்பெல்லாம் காதலி, காதலன் மீதான பொறாமை வேறு ஆணோ, பெண்ணோ அவர்கள் மீது ஆசைப்பட்டால் தான் வந்தது. ஆனால், இப்போதோ… தனது துணையின் ஃபேஸ்புக் புகைப்படம் அல்லது ஸ்டேட்ஸ்களுக்கு வேறு யாராவது லவ் ஸ்மைலி போட்டாலும்… புகழ்ந்து கமெண்ட் செய்தாலுமே கூட பொறாமை படுகிறார்கள். அழகை அழகு என்று யார் கூறினால் என்ன? இந்த பொறாமையில் சந்தேகமும் நிறைந்திருக்கிறது என்பது தான் கவலையே. பொறாமையும், சந்தேகமும் எப்போது உறவில் தலை தூக்குகிறதோ… அப்போதே காதல் மெல்ல, மெல்ல மறைய ஆரம்பித்துவிடும்.
இடைவேளை!
எந்த ஒரு விஷயத்திலுமே இடைவேளை விட்டால் தான்… அதை முழுமையாக உணர முடியும், உள்வாங்க முடியும். வேலை, உணவருந்துதல், உறக்கம் என எதுவாக இருந்தாலுமே இடைவேளை வேண்டும். இல்லையேல் அது போரடித்துவிடும். படிக்க கூறினால் இடைவேளை கேட்கும் நாம்.. காதலில் மட்டும் இடைவேளை இல்லாமல் எந்நேரமும் ஒட்டியே இருக்க வேண்டும் என்பது இயற்கைக்கு மாறானது. நேரில் எத்தனை மணி நேரம் பேசி கதைத்தாலும்… பை சொல்லி நகர்ந்ததும் மெசேஜில் உடனே ரிப்ளை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் நன்கு உணருங்கள்… இடைவேளை தான் காதலை வலுவாக்கும் பெரும் சக்தி.
விட்டுக்கொடுத்து போவது
பலரும் செய்யும் பெரிய தவறு இதுதான். நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும். அவன் / அவள் விட்டுக் கொடுத்து போனால் என்ன? என்று ஒரு ஈகோவில் கடைசி வரை யாருமே விட்டுக் கொடுக்க மாட்டார்கள். காதலில் இணைந்த ஆரம்பத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு விட்டுக் கொடுத்தவர்கள். ஓரிரு வருடங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு வீம்புடன் சுற்றி திரிவார்கள். அதே போல எல்லா சமயத்திலும் ஒருவரே விட்டுக் கொடுத்து போவது என்பதும் தவறு தான். ஒரு காதலை ஒருதலைப்பட்சமானதாக மாற்றிவிடும்.
மாற்றங்களை ஏற்பது
மனித வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கும். வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் நாம்… காதலில் மட்டும் மாற்றத்தை ஏற்பது அல்ல. நீ முன்ன இப்படி இல்ல… இப்போ எல்லாம் நீ நிறையவே மாறிட்ட என்று புலம்பாத காதலர்களே இல்லை. அது எப்படி வாழ்க்கை முழக்க ஒரே மாதிரி இருக்க முடியும். முதிர்ச்சி அதிகரித்திருக்கும், கடமைகள், வேலைகள் அதிகரித்திருக்கும். நாம் எதிர்கொள்ளும் சூழல் கடினமானதாக மாறி இருக்கும். இத்தனைக்கும் நடுவே காதல் மட்டும் மாற்றம் அடையாமல் சிறுப்பிள்ளை தனமாகவே இருக்கும் என்று கருதுகிறீர்களா?
உண்மை!
காதலில் மட்டும் தான் நிஜமாவே லவ் பண்றியா. கள்ளக் காதல் என சில வார்த்தைகள் பயன்பாட்டில் இருக்கிறது. நாம் யாருமே அவன் நிஜமாவே உன் பிரெண்டா… கள்ள நட்பு என்று வார்த்தைகள் பயன்படுத்துவதில்லை. காதலும் அப்படி தான்… உண்மையாக இல்லை என்றால்… அது காதலாகவே இருக்காது. அதற்கு கள்ளக் காதல்… ஃபேக் லவ் என்றெல்லாம் பெயர் சூட்டாதீர்கள். காதல் என்றாலே உண்மை தான்… அதில் போலியாக நடித்து ஏமாற்றாதீர்கள். நீங்கள் துணையை மட்டும் ஏமாற்றவில்லை… உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆறு ரூல்ஸ் சரியாக கடைப்பிடிக்க தெரிந்த ஒவ்வொருவருமே காதலில் சாம்பியன் தான்.