அரசு சார்பற்ற அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில். இந்தியாவில் 41% பெண்கள் 19 வயது திரும்பும் முன்னர் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, பத்தில் நான்கு பெண்கள் ஏதோ ஒரு வகையில் ஆண்களின் பாலியல் வெறிக்கு இரையாகிப் போகிறார்கள். கற்பழிப்பு மட்டும் என்றில்லாமல், பேருந்தில், மார்க்கெட்டில், மால்களில், கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் பல இடங்களில் என தெரிந்தே நால்வர் முன்னிலையில் ஒரு பெண் பாலியல் ரீதியான தீண்டுதலுக்கு உள்ளாகிறார். வருடங்களோடு இந்த சம்பவங்களும் நாளுக்கு, நாளுக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது.
தொடர்கதை! சில நாட்களுக்கு முன்னர் ஏழு வயது குழந்தை ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அதற்கு முன்னர் 14 வயது சிறுமி. அதற்கும் முன்னர் 11 மாத பிஞ்சு குழந்தை டெல்லியில் கற்பழிக்கப்பட்டார். 12, 13 என ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு நாளும் இந்தியாவின் ஏதாவது மூலையில் மணிக்கு ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு வருகிறார்.
அண்ணா சாஹேப் மகர் சேரி! சில வாரங்களுக்கு முன்னர் புனேவாயில் அண்ணா சாஹேப் மகர் சேரி பகுதியை சேர்ந்த 10 – 14 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் 6 வயது பெண் குழந்தையை பக்கத்து ஏரியாவிற்கு கடத்தி சென்று கற்பழித்துள்ளனர். இந்த வழக்கு போலீஸில் பதிவாகியுள்ளது
பதின் வயதில்! கற்பழிக்கப்பட்ட பெண்ணும் சிறுமி, கற்பழித்த நபர்களும் சிறுவர்கள். பதின் வயதை எட்டும் முன்னரே சிறுவர்களுக்குள் இச்சை உணர்வு எட்ட எது காரணம். பெற்றோர் வளர்ப்பா? சமூக பார்வையா? இணையத்தின் ஊடுருவலா? கேள்விகள் பல எழுப்பப்பட்டாலும். அதற்கான பதில் மழுப்பல்களாகவே இருக்கின்றன. கண்டிப்பாக இந்த கற்பழிப்புக்கு அக்குழந்தையின் உடை காரணமாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்! சட்டங்கள் கடுமையாகாத வரை இது போன்ற சம்பவங்கள் நடந்துக் கொண்டே தான் இருக்கும். இது போன்ற கட்டுரைகள் எழுதப்பட்டுக் கொண்டே தான் இருக்கும். முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்ற நியதியை கற்பழிப்பு வழக்குகளில் சட்டமாக கொண்டு வர வேண்டும்.
கடுமையான தண்டனைகள்! கற்பழித்த நபர் மட்டும் இன்றி, மற்றவரும் கற்பழிக்க அச்சம் கொள்ளும் அளவிற்கு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். தெரிந்து செய்தாலும் சரி, போதையில் செய்தாலும் சரி. இனிமேல் அந்நபர் உடலுறவில் ஈடுபட முடியாத அளவிலான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
கல்வி! மனநலம் மேலோங்கும் படியான கல்வி முறைகளை உட்படுத்த வேண்டும். அறிவியல், கணிதம், கணினி போன்றவற்றுடன் வாழ்வியலையும், மனித உணர்வுகளையும் கல்வியில் சேர்க்க வேண்டும். மனிதர்களுள் மனிதம் இறந்து மிருகம் வளர்ந்துவிட்ட காரணத்தால் தான் தவறுகள் அதிகரிக்கின்றன.
முயற்சிகள்! நாம் முயற்சிகள் என்ன எடுத்தாலும் திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல. மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் கற்பழிப்பை ஒழிக்க முடியாது.