Home பாலியல் பாலியல் சித்ரவதை (Sexual Harassment) : இன்றைய நிலை

பாலியல் சித்ரவதை (Sexual Harassment) : இன்றைய நிலை

24

பாலியல் சித்ரவதை (Sexual Harassment) தொடர்பாகத் தற்போது நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

ஒரு பத்திரிகையாளார் பிரபல மீடியா நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். சுதந்திரமாக வளர்க்கப்பட்டவள். தெளிவான பார்வையும், நோக்கும் கொண்டவள். ஒருமுறை நாட்டின் பிரபல திரைப்பட விழாவுக்கு அலுவலகம் சார்பில் சென்றிருந்தாள். அந்தத் திரைப்பட விழாவுக்கு அவள் வேலை பார்க்கும் நிறுவனத்தின், துணைநிறுவனத்தைச் சேர்ந்த நடுத்தர வயது ஆண் நிருபரும் வந்திருக்கிறார். இருவரும் வெவ்வேறு ஊரில் வேலை பார்ப்பதால், நேரடி அறிமுகம் இல்லை. அந்த ஆணும் நட்பான தன்மையை வெளிப்படுத்துபவராக, என் தோழிக்குத் தோன்றவில்லை. பத்திரிகையாளர்களுக்கு ஒரே ஹோட்டலில் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

பல நாட்கள் நடக்கும் திரைப்பட விழாவின் ஒரு நாள் நிகழ்ச்சியின் முடிவில் இரவு உணவை முடித்துக்கொண்டு களைப்புடன் அறைக்குத் திரும்பியிருக்கிறாள். அப்போது அந்த ஆண் நிருபர், திடீரென என் தோழியின் அறைக்குள் நுழைந்து, தோழியை நெருங்கியிருக்கிறார். சட்டென்று சுதாரித்துக்கொண்டு கோபமடைந்த என் தோழி, சத்தமாகக் கத்தி அந்த நபரை வெளியேறச் சொல்லி, வெளியே பிடித்துத் தள்ளிவிட்டிருக்கிறாள். பிறகு படாரெனக் கதவையும் அடைத்திருக்கிறாள். பெரிய அதிர்ச்சி அடையாத அந்த ஆண் நிருபர், தன் அறைக்குத் திரும்பியிருக்கிறார்.

முதல் நாள் இரவு இப்படியொரு நிகழ்ச்சி நடந்திருக்க, அடுத்த நாள் காலையில் பத்திரிகையாளர்களுக்கான ஒரு விவாத நிகழ்ச்சி நடந்தது. அதில் மேடையில் அவள் அமர்ந்திருக்க, பின்னால் அந்த ஆள் உட்கார்ந்து இருந்திருக்கிறார். விவாதம் தீவிரமாக இருந்த நேரத்தில், திடீரென என் தோழியைக் காலால் நிமிண்ட ஆரம்பித்த அந்த ஆள், சட்டென்று தோழியின் உடலில் கையையும் வைத்துள்ளார்.

ஆண்களின் மன வக்கிரங்கள் எந்த நேரத்தில் எப்படி வடிவெடுக்கும் என்பதைக் கற்பனை செய்தே பார்க்க முடியாது போலிருக்கிறது. ஒரு பொது மேடையில் சுற்றிப் பலர் இருக்க, எதிரே பார்வையாளர்களும் இருக்கும் நிலையிலும்கூட, சில ஆண்களின் செயல்பாடுகள் இப்ப டித்தான் இருக்கின்றன. முந்தைய நாள் தைரியமாக அந்த ஆளை வெளியே தள்ளி கதவைச் சாத்திய என் தோழியால், இரண்டாவது நாள் எதையும் செய்ய முடியாத நெருக்கடியான சூழ்நிலையில் அவள் இருந்திருக்கிறாள்.

நிர்வாகம் தந்த அதிர்ச்சி விவாத நிகழ்ச்சி முடிந்தவுடன் இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகத் தனது எடிட்டரைப் போனில் தொடர்புகொண்டு அவள் புகார் செய்தாள். உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டாலும், அவள் அதைப் பேசாமல் விட்டுவிடத் தயாராக இல்லை. தன் புகாரை விரிவான ஒரு மின்னஞ்சலாக எடிட்டருக்கு அனுப்ப, எடிட்டரும் அந்தப் புகாரை முறைப்படி நிர்வாகத்துக்கு அனுப்பியிருக்கிறார்.

ஆனால், நிர்வாகத்திடம் இருந்து கிடைத்த பதிலோ மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தன. முதலில் “குறிப்பிட்ட அந்த ஆண் நிருபர், பொதுவாகவே அப்படி நடந்துகொள்பவர் இல்லை. தன் துறையில் அனுபவஸ்தர். ஏதோ ஒரு நிலையில், இந்தத் தவறைச் செய்துவிட்டார். எங்கள் ஊரில் வேலை பார்த்தபோது, அவரைப் பற்றி ஒற்றைப் புகார்கூடக் கிடையாது” என்றார்கள்.

துணை நிறுவனத்தின் எடிட்டரும் , “இதைப் பெரிய விஷயமாக்க வேண்டாம். நீங்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டீர்கள், அவர் ரொம்ப நல்லவர்” என்றிருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக நிர்வாகத்தின் எண்ணம் எல்லாம், நீ எந்த வகையிலும் பாலியல் தாக்குதலுக்கோ, பாலியல் பலாத்காரத்துக்கோ உள்ளாகவில்லை. அப்புறம் ஏன் பிரச்சினையைப் பெரிதாக்குகிறாய் என்பதுதான்.

கடைசியாக “ஆண் நிருபருக்கு இப்போது வாய்மொழி எச்சரிக்கை கொடுத்துள்ளோம். மீண்டும் ஒரு முறை தவறு செய்தால், அவருக்கு மெமோ கொடுப்போம். அவரது செயலுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று நிறுவனத்தின் சி.இ.ஓ. மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்தின் வெளிப் பிம்பத்துக்கு நேரெதிராக நிர்வாகத்தின் அணுகுமுறை இருந்தது. அந்த ஆண் நிருபரின் செயலை அந்த நிர்வாகம் கடைசிவரை ஒழுங்கீனமாகக் கருதாமல், பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் கைகழுவிவிட்டது.

சுதந்திரத்துக்கு ஆபத்து இந்த விவகாரத்தில் அந்த ஆள் எல்லை மீறியா நடந்துகொண்டார் என்றுகூடச் சிலருக்குத் தோன்றலாம். ஒரு பெண்ணின் அறைக்குள் அத்துமீறி நுழைவதும், ஒரு பெண்ணைத் தொடுவதும் நிச்சயம் அத்துமீறலே. ஒரு நபரைத் தாக்கினால்தான் வன்முறை என்பதில்லை. பாலியல் சித்ரவதையும், ஒரு வன்முறைதான். பாலியல் தொல்லைகள், ஒரு பெண்ணின் சுயத்தையும் சுதந்திரத்தையும் கேள்விக்கு உட்படுத்தி, அவளை அவமானத்தில் தள்ளுகின்றன.

பல சம்பவங்கள் இதைவிட பெரிய அதிர்ச்சியை அளிப்பவையாக இருந்தும், அவை எதுவும் அலுவலகத்தின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்களிடமோ, குறைந்தபட்சம் ஹெச்.ஆர். துறையினரிடமோகூட புகாராகப் பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்யப்படும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ, காவல்துறையோ, அரசோ உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்பதும் புகார் பதிவைக் குறைக்கிறது.