செக்ஸ் வெப்சைட்களை பார்க்கும் பழக்கம் வந்துவிட்டால், உறவுகளை, நட்பை, அலுவலகத்தில் வேலை செய்வதை அது கெடுத்துவிடும்! அமெரிக்காவில் உள்ள, சின்சினாட்டி பல்கலைக்கழக மனோதத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில், இது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, செக்ஸ் வெப்சைட் பார்ப்பது பலருக்கும் ஒரு வியாதியாக பரவி விட்டது. இதனால் தான் அங்கு வன்முறை போக்கும் அதிகமாக இருக்கிறது என்பது தான் நிபுணர்கள் கருத்து. 500 பேரிடம் இது பற்றி ஆய்வு செய்த இந்த நிபுணர்கள், செக்ஸ் புத்தகங்கள், செக்ஸ் “சிடி’க்கள், வெப்சைட்கள் பார்ப்பதால், ஒருவரின் வாழ்க்கை பல வகையில் கெடுகிறது என்று எச்சரித்துள்ளனர்.
ஆய்வு அறிக்கையில், நிபுணர்கள் கூறியதாவது: “இன்டர்நெட்’ பார்க்கும் பழக்கம், இப்போது பலரிடம் உள்ளது. குறிப்பாக, இளம் தலைமுறையினரிடம், “நெட் சேட்டிங்’ உட்பட பல வகையிலும், நெட் பழக்கம் அதிகரித்து வருகிறது. “நெட்’டில் இருந்து மொபைல் போனுக்கு படங்களை மாற்ற முடியும் தொழில்நுட்பம் உள்ளதால், அவர்களுக்கு “நெட்’ மூலம் நல்லதை விட தவறான பழக்கங்களை ஏற்பட வாய்ப்பு அதிகம்.
“இன்டர் நெட்டில்’ செக்ஸ் வெப்சைட்கள் பார்ப்பது, செக்ஸ் “சேட்டிங்’ செய்வது போன்றவை, அமைதியாக கொல்லும் வியாதி. ஒருவரின் மனநிலையை கட்டுக்கடங்காமல் கொண்டு சென்று, வாழ்க்கையை தலைக்குப்புற கவிழ்த்துவிடும். ஒருவர் செக்ஸ் வெப்சைட்களை பார்ப்பது போய், அவருடன் சேர்ந்த அத்தனை பேரும் அந்த தீய பழக்கத்துக்கு அடிமையாகி விடும் ஆபத்தும் உள்ளது.
செக்ஸ் வெப்சைட் பார்ப்பவரின் பழக்க வழக்கம் மாறுவதால், அவரிடம் இருந்து நல்ல நட்பு, உறவுகள் பிரிய வாய்ப்பு அதிகம். வீட்டில் அமைதி கெடுவதுடன், இந்த பழக்கம், அலுவலகத்தில் வேலை செய்ய விடாமல் தடுக்கும். மனநிலை பெரிதும் பாதிக்கப்படுவதால், அவர்களின் போக்கு மாறும். அதனால், அலுவலகத்தில் நல்ல பெயர் கெடும். வேலைக்கு ஆபத்து ஏற்படும். “இன்டர்நெட்’ டில் செக்ஸ் வெப்சைட்களை பார்ப்பது அளவுக்கு அதிகமாக போகும் போது, பார்ப்பவர்களின் நடவடிக்கைகள் மாறுவதால், அவர்களின் திருமண வாழ்க்கை பாதிக்கப்படுகிறது; உறவுகள் எல்லாம் அகலும் ஆபத்தும் உள்ளது.
முன்பை விட, இப்போது இளம் தலைமுறையினர் அதிக அளவில் “நெட்’டில் செக்ஸ் வெப்சைட்கள் பார்க்கின்றனர். திருமணமான தம்பதியரும் இப்படி பார்ப்பதால், அவர்களிடையே மன மாற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு. செக்ஸ் உறவு எப்படி வைத்துக்கொள்வது என்பதற்கெல்லாம் “நெட்’டில் விவரம் தேடும் இளம் தலைமுறையினர், பெரியவர்களின் ஆலோசனையையோ, ஆலோசகரிடமோ விளக்கம் கேட்பதில்லை. “நெட்’டில் பார்ப்பது என்பது தொற்று நோய் போல என்பதை அவர்கள் உணரவில்லை. இவ்வாறு நிபுணர்கள் , தங்கள் ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளனர்.