காதலி அணியும் `ஆடை’ தான் முக்கிய காரணம். அந்த ஆடையில் குடும்ப பாங்கான தோற்றம் தெரிந்தால், காதலன் எல்லை மீற மாட்டான்…
நண்பகல் ஆரம்பமாகி இருந்தது. சுனாமி எச்சரிக்கையை தவிர்த்து காலையிலும், மாலையிலும் பரபரப்பாக காணப்படும் மெரீனா கடற்கரையில் ஆங்காங்கே காதலர்கள் முளைத்திருந்தார்கள்.
சிலர் உச்சி வெயிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த படகுகளின் நிழலில் தங்களது காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர். சிலர் வெயிலுக்கு பயந்து அலைகளில் கால் நனைத்து விளையாடி மகிழ்ந்தனர்.
– இப்படியாக மெரீனாவில் காதல் ஜோடிகள் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருக்க, முதன் முதலாக காதலை வெளிப்படுத்திய வேகத்தில் அங்கே காலடி எடுத்து வைத்தார்கள் அவனும் அவளும்.
கையோடு கொண்டு வந்திருந்த குடையை விரித்து பிடித்துக்கொண்டாள் அவள். அந்த சின்ன லேடீஸ் குடைக்குள் வெயிலுக்கு பயந்து அடைக்கலம் புகுந்து கொண்டான் அவன்.
அந்த சின்னக்குடை தந்த சிறிய நிழலில் கையோடு கை உரசிக்கொண்டு நடந்தார்கள் இருவரும். இதற்கு முன்பு இப்படி நெருங்கிய உரசலோடு இருவரும் சென்ற அனுபவம் கிடையாது என்பதால், அவர்கள் தொண்டைக்குள் இருந்து வெளியே வராமல் மவுன போராட்டம் நடத்தின வார்த்தைகள்.
சிறிது தூரம்தான் நடந்திருப்பார்கள். காற்று வேகமாக வீசியதால் அவளது மென்மையான பிடியை விட்டு விலகி தனியாக பறந்தது குடை. அதை பிடிக்க இருவரும் ஓடினர். சிறிதுதூரம் ராக்கெட் வேகத்தில் பறந்த குடை, பயனற்று கிடந்த ஒரு படகின் மீது மோதிக்கொண்டு நின்றது.
கை நழுவிபோன குடையை எடுத்துவிட்டு அவர்கள் நிமிர்ந்தபோதுதான் படகுக்கு அடுத்த பக்கத்தில் அந்த காட்சியை கண்டார்கள். தனது மடியில் பூத்திருந்த காதலியை முதுகை வளைத்து தலையால் முடி காதல் ஆராய்ச்சியில் ழுழ்கியிருந்தான் காதலன்.
அதை பார்த்த மாத்திரத்தில் இவர்கள் இருவரும் பேச்சு வராமல் தவித்தனர். அந்த தவிப்புக்கு விடை கொடுக்க, அங்கே கிடந்த இன்னொரு படகின் சிறிய நிழலில் அமர்ந்து கொண்டனர். இருவரும் தோளோடு தோள் உரசி இருந்தனர்.
இருவரது மனதிலும், காதல் ஆராய்ச்சியில் இறங்கியிருந்த ஜோடியின் காட்சியே பலமாக பதிவாகி இருந்ததால், அவர்களது மனமும் எதையோ எதிர்பார்த்து ஏங்கித் தவித்தது. அந்த குரங்கு மனதிற்கு அணைபோட வேகமாக ஓடி வந்து கரையை முத்தமிட்டுச் சென்ற கடல் அலைகளை வெறித்து பார்த்துக் கொண்டனர்.
மெல்ல அவளை திரும்பி பார்த்தான் அவன். துப்பட்டா இல்லாத அவளது டாப்சும், அமர்ந்ததால் இன்னும் இறுக்கமாகிபோன அவளது டைட் ஜீன்ஸ் பேண்ட்டும் அவனை என்னமோ செய்தன. அவள் மீது கணபொழுதில் மோகம் கொண்டவன், எதிர்பாராதவிதமாக அவளது உதட்டில் இச் மழை பொழிந்து விட்டான்.
அவன் இப்படி நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்காத அவள் சட்டென்று எழுந்துவிட்டாள். அவளது கண்களில் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது. அடிக்க வருவதுபோல் கையை தூக்கினாள்.
” இப்படி நடந்துக்குவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. ஐ லவ் யூ சொன்ன முதல் நாள்லயே இப்படின்னா, நிச்சயம் நம் காதல் ஜெயிக்காது. இப்பவே, ஏன்… இந்த நிமிஷமே பிரிஞ்சுக்குவோம். இனி நீ யாரோ, நான் யாரோ…” என்று படபடவென்று வார்த்தைகளை வெடிக்க விட்டவள், அங்கிருந்து வேகமாக அகன்றாள்.
இப்போதைய பெரும்பாலான காதலர்கள் மோதிக்கொள்வது இந்த விஷயத்தில்தான். `என்னை பார்த்து அவன் காதலிக்கவில்லை… என் உடலை பார்த்துதான் காதலித்து இருக்கிறான்…’ என்று இந்த விஷயத்தில் காதலிகள் குற்றம்சாட்டினால், அது சற்று யோசிக்க வேண்டிய விஷயம்தான். காதல் என்பது அன்பும், காமமும் நிறைந்ததுதான்.
நெய் வேண்டும் என்றால் பாலை முதலில் நன்கு காய்ச்ச வேண்டும். பின்பு, அதை மோர் ஆக்க வேண்டும். அந்த மோரை கடைந்தால் வெண்ணை திரண்டு வரும். அந்த வெண்ணையை உருக்கினால்தான் நாம் விரும்பும் நெய் கிடைக்கும்.
காமமும் அப்படியே! காதலி கிடைத்துவிட்டாள் என்பதற்காக அவள் மீது சட்டென்று மோகம் கொண்டுவிடக்கூடாது. பொறுமையாக காதலை வளர்த்து காதல் கைகூடி திருமணத்தில் முடிந்த பிறகுதான் அதை அரங்கேற்ற வேண்டும். அதுதான் உண்மைக் காதலுக்கு அழகு.
அதற்கு என்ன செய்யலாம்? முக்கியமாக, காதலர்கள் மனதில் காமம் எழ சூழ்நிலைகள் மட்டுமின்றி காதலிகளும் மற்றொரு வகையில் காரணமாக அமைகின்றனர். அதற்கு, அவர்கள் அணியும் ஆடை தான் காரணம். ஆடையில் குடும்ப பாங்கான தோற்றம் தெரிந்தால், காதலன் எளிதில் எல்லை மீற மாட்டான். காதல் மொழி பேசுவதில் முக்கிய இடம் கண்களுக்குத்தான். அந்த கண்களின் பார்வையில் திருமணம் கை கூடும் வரையில் ஆபாசம் வெளிபடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. காதலியிடம் நேருக்கு நேராக நின்று பேசும்போது அவளது கண்களை பார்த்தே பேச பழகிக் கொள்ளுங்கள். அந்த `கண்ணோடு கண்ணான பார்வை’ உங்கள் கண்ணியத்தை மேம்படுத்தும். காதலி அணிந்திருக்கும் உள்ளாடை அப்பட்டமாக தெரிந்தால், கண்ணியமாக சுட்டிக் காட்டுங்கள். அவள் உண்மையை புரிந்து கொள்வாள். உங்கள் மீதான நல்ல எண்ணமும் அவளிடம் அதிகரிக்கும். ஒரு நிமிடம் பேசினாலும், மணிக்கணக்கில் `கடலை’ போட்டாலும் காதலியிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். அப்போது, அவளை அழகாக வர்ணிக்கலாமே தவிர, ஆபாசமாக வர்ணிக்கக்கூடாது. காதலியுடன் தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, அவளுக்குத் தெரியாமல் அவள் அழகை ரசிப்பது நாகரீகம் அல்ல. பார்க், பீச், ஹோட்டல்… என்று ஊர் சுற்றும் காதலர்கள் மனதில் லாட்ஜில் ரும் போடும் ஆசை மட்டும் எழுந்து விடக்கூடாது. இந்த எண்ணத்தை காதலன் காதலியிடம் மறைமுகமாக ஏற்படுத்தினால், அச்செயல் அவனை தவறானவனாகவே அடையாளம் காட்டும்.