மகப்பேறு மருத்துவம் குறித்த அன்னூர் என்.எம் மருத்துவமனையின் துணை நிர்வாகி மற்றும் மகளிர் நலம் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் மஞ்சுளா நடராஜன் பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல் நல மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து பற்றி விழிப்புணர்வு அளித்து வருகிறார். இந்த வாரம் கர்ப்பகாலத்தில் முதல் மூன்று மாதங்கள் நிகழும் மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு முறைகளைப்பற்றி விளக்கம் அளிக்கிறார்.
கருவுற்றதற்கான அறிகுறிகள்:
மாத விலக்கு ஆகாமலிருத்தல், குமட்டல் இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல், வாசனையைக் கண்டால் நெடி, மார்பகம் பெரிதாவது, மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு, புளி, ஐஸ், மாங்காய் ஆகியவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை போன்ற அறிகுறிகள் கருத்தரிப்பதை உணர்த்துகிறது. கர்ப்பத்தின் மூலம் 3 மாதங்களில் உடல் சோர்வு மற்றும் காலை அசவுகரியங்கள் ஏற்படும். பெண்களுக்கு பொதுவாக கர்ப்பத்தின் அறிகுறிகள் அவர்களது முதல் தவறிய மாதவிடாய் காலத்திலிருந்தே தெரிய ஆரம்பிக்கும். உடலில் கர்ப்ப ஹார்மோன் அளவு அதிகரிப்பதால் இந்த அறிகுறிகள் தென்படுகின்றன.
ஏன் பாதுகாப்பு அவசியம்:
முதல் 3 மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்த காலத்தில் கருவின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் மற்றும் அனைத்து உறுப்புகளையும் உருவாகின்றன. எனவேதான், இந்த காலகட்டத்தில் மகப்பேறு மருத்துவரின் அனுமதியின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது. சில மருந்துகள் கருவை ஊனமாகவோ, கலையவோ செய்ய வாய்ப்பிருக்கிறது. மேலும் முதல் 3 மாதங்களில் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு ஆகியவை நம்மை அணுகாமல் பாதுகாப்பாக இருத்தல் வேண்டும். மேலும் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.
செய்ய வேண்டிய பரிசோதனைகள்:
கர்ப்பகால அறிகுறிகள் சிலருக்கு வேறு சில காரணங்களாகவும், வேறு சில வியாதிகளாகவும்கூட ஏற்படலாம். அதனால், அறிகுறிகள் வைத்து கர்ப்பத்தை கண்டறிவதைவிட நம்பகமான அறிவியல் முறை பரிசோதனைகளை மேற்கொள்வது சிறந்தது. பெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் 2 அல்லது 3 மாதங்களில் கருதரிப்பதை உறுதி செய்துகொள்ள முடியும் என்றாலும் சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் பரிசோதனை ஆகியவற்றின் மூலமே கர்ப்பம் தரிப்பதை நிச்சயமாக உறுதி செய்ய முடியும். மேலும், கர்ப்பம் கருப்பைக்குள்ளேதான் உள்ளது என்பதையும் கட்டாயம் ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். கருப்பைக்கு வெளியே கூடியிருந்தால் அது தாயின் உயிருக்கே ஆபத்தாய் அமைந்துவிடும்.
உணவுக்கட்டுப்பாடு, உணவு முறைகள்:
வழக்கமாக 3 வேளை உணவு உன்பதை தவிர்த்து 5 அல்லது 6 வேளை சிறிய உணவுகளாக எடுத்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உண்ணும் உணவு எளிதாக ஜீரணம் ஆகிவிடும். அதிக வாசனை உள்ள உணவுகளை தவிர்க்கவும். அடிக்கடி உலர்ந்த பழங்கள் அல்லது நட்ஸ் சாப்பிடுங்கள். உடனடியாக படுக்கையை விட்டு எழுந்து செல்ல வேண்டாம். சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து எழுங்கள். நிறைய பாணம் குடிப்பதை தவிர்க்கவும். சமையலறையில் அதிக நேரம் செலவிட வேண்டாம். மிக கடுமையான குமட்டல் மற்றும் தொடர்ச்சியான வாந்தி இருந்தால் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை அணுகவும்.