திருமணம் என்பது உங்களது தனிப்பட்ட உலகின் நுழைவாயில். இதற்குள் இருக்கும் அனைத்து அறைகளிலும் மகிழ்ச்சியும், இன்பமும் நிறைந்திருக்கும். ஆனால், அந்த கதவுகளை திறப்பதற்கான சாவி (குணாதிசயங்கள்) உங்களிடம் இருக்கிறதா என்பது தான் கேள்வி. எல்லா மனிதர்களிடமும் நல்லவன், கெட்டவன் என்ற இருமுகம் இருக்கும். எதை நாம் அதிகம் வெளிக்காட்டுகிறோமோ அவ்வாறு தான் இவ்வுலகம் நம்மையும் காணும்.
இதில், இல்லறத்தில் இன்பத்தை கொண்டாட ஓர் கணவனாக நீங்கள் எவற்றை எல்லாம் கொண்டிருக்க வேண்டும் என்பது பற்றி இனிக் காணலாம்….
அன்பை உணர்தல்! அன்பை வெளிப்படுத்தினால் மட்டும் போதாது, அன்பை உணரவும் தெரிந்திருக்க வேண்டும். பெரும்பாலும், ஆண்களுக்கு பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள மட்டும் தான் தெரியுமே தவிர, பெண்கள் தங்கள் மீது வைத்திருக்கும் / காட்டும் அன்பை உணர மாட்டார்கள். எனவே, ஓர் ஆணாக, கணவனாக, காதலனாக பெண்கள் வெளிப்படுத்தும் / காட்டும் அன்பை உணர தெரிந்துக் கொள்ள வேண்டும்.
அன்பால் தழுவுதல்! அன்பை உணர்வதோடு மட்டும் நின்று விடாமல், நியூட்டனின் மூன்றாம் விதியை போல எதிர் விசையாக நீங்களும் அன்பால் உங்கள் துணையை தழுவ வேண்டும். இரு கைகள் தட்டினால் தான் ஓசை இருவரும். இருவரும் அன்பை பரிமாறிக் கொண்டால் தான் உறவில் ஆசை வரும்.
உண்மையை ஒப்புக்கொள்தல்! உங்கள் மனைவி நன்றாக யோசிக்கிறார், சமைக்கிறார், மேலாண்மை அறிந்திருக்கிறார், இல்லறத்தை நடத்துகிறார், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறார் என உங்கள் மனைவி சின்னதோ, பெரியதோ எந்த ஒரு காரியம் செய்தலும், அதை ஒப்புக்கொண்டு, குறை கண்டுப்பிடிக்கமால் பாராட்ட தெரிந்திருக்க வேண்டும்.
அவரவர் வழியில் பயணிக்க அனுமதித்தல்! கணவன், மனைவி என்ற “நாம்” எனும் வாழ்க்கை இருக்கிறது. அதேபோல, திருமணத்திற்கு முன்பிருந்து நாம் வாழ்ந்து வரும் “நான்” என்ற வாழ்க்கையும் இருக்கும். இவ்விரண்டும் இரு கண்களை போல. எனவே, ஒரு கண்ணுக்காக மற்றொரு கண்ணை இழந்துவிட வேண்டாம். இரண்டிலும் கண்ணும், கருத்துமாய் இருங்கள்.
நகைச்சுவை! நகைச்சுவை இல்லாத வாழ்க்கை, உப்பு இல்லாத உணவிற்கு சமம். நீங்கள் தான் சிரிக்க வைக்க வேண்டும் என்றில்லை. உங்கள் மனைவி சிரிப்பூட்டும் போது கூட முகத்தை உர்ர்ர் என்று வைத்துகொள்ள வேண்டாம்.
பேரார்வம்! உறவில் பேரார்வம் இருக்க வேண்டும். அது குறைந்துவிட்டால், ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலும், அன்பும் கூட குறைய ஆரம்பித்துவிடும். எனவே, சீரான இடைவேளையில் எங்கேனும் வெளியே சென்று வாருங்கள். இந்த பேரார்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
குற்றவுணர்வு! குற்றவுணர்வு ஏற்படாமல் இல்லறத்தை வழிநடத்தி செல்ல வேண்டும். எனவே, நீங்கள் தவறே செய்திருந்தாலும் கூட அதை வெளிப்படையாக கூறிவிடுங்கள். உங்கள் துணை தவறு செய்தால் அதை மன்னிக்கும் சுபாவம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.