பாகிஸ்தானில் லாகூர் நகரை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பில் படித்து வந்தான். இந்தநிலையில் அவனுக்கும் அங்குள்ள ஒரு பெண்ணுக்கும் தவறான உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது அந்தப் பெண்ணின் பெற்றோர் கவனத்துக்கு தெரிய வந்தது. ஆத்திரம் அடைந்த அவர்கள் அந்த சிறுவனுக்கு தகுந்த பாடம் கற்றுக்கொடுக்க முடிவு செய்தனர்.
சம்பவத்தன்று அந்த சிறுவன் படித்து வந்த பள்ளிக்கூடத்துக்கு, அந்தப் பெண்ணின் தந்தை, சில அடியாட்களுடன் சென்றார். அந்த சிறுவன் வெளியே வந்தபோது அவர்கள் அவனை அங்குள்ள ஆற்றின் அருகே ஒரு ஒதுக்குப்புறமான இடத்துக்கு கடத்திச்சென்றனர். அங்கு வைத்து கத்தியால் அந்த சிறுவனின் ஆணுறுப்பை துண்டித்தனர். அத்துடன் அந்த சிறுவனின் கண்களையும் தோண்டி எடுத்து விட்டு ரோட்டில் போட்டு விட்டு சென்று விட்டனர்.
ரோட்டில் அந்தச் சிறுவன் அலறியவாறு துடிதுடித்துக் கொண்டிருந்தான். அதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் சிகிச்சை அளித்து அவனது உயிரைக் காப்பாற்றி விட்டனர். ஆனால் பறிபோன பார்வையைத் திருப்பித் தரமுடியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சி எம்.எல்.ஏ., ஒருவர் அந்தப் பெண்ணின் தந்தைக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்ற சிறுவனின் தந்தை, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக லாகூர் மூத்த போலீஸ் அதிகாரி ஹைதர் அஷரப் தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.