Home உறவு-காதல் உண்மையான காதல் என்றால் என்னனு தெரியனுமா இதை படிங்க!!

உண்மையான காதல் என்றால் என்னனு தெரியனுமா இதை படிங்க!!

49

அனைவரும் காதலில் ஆரம்ப காலங்களில், ஒருவரை ஒருவர் கவர, பிறர் விரும்பும் வகையில் உள்ள நேர்மறை பண்புகளை மட்டுமே காண்பிப்பர்; காதல் கை கூடி, உறவு உறுதியடையும் நேரத்தில் பிறர் விரும்பா வண்ணம் இருக்கும் எதிர் மறை பண்புகளையும், உரிமையில் காண்பிக்கக்கூடும். அப்போதும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள காதலால், அந்த எதிர்மறை குணங்களை சகித்து கொண்டு ஏற்றுக்கொள்வதே உண்மையான காதல்.”

எத்தனை சத்தியமான வார்த்தை!!
பிறர் விரும்பத்தகாத எதிர்மறை பண்புகளை காண்பித்ததும், காதல் கசந்து பிரிவு ஏற்படுகிறது. ஏனெனில் காதலிக்க ஆரம்பித்த புதிதில் பார்க்கப்பட்ட மனிதராகவே எப்போதும் ஒருவர் இருக்க வேண்டும் என நினைப்பது ஏமாற்றத்தையேத் தரும் எதிர்பார்ப்பு. இந்த மசாலா சினிமாக்களும், பதின்பருவ வயதும், நடைமுறைக்கு ஒத்து வராத உருவங்களையே வாழ்க்கை துணையாக எதிர்பார்க்க சொல்கிறது.

பதின்பருவத்தில் உள்ள அனைவருக்கும் அதிகமாக கண்ணில் படுவது அப்படிப்பட்ட காதல் ஜோடிகளே! சமுதாயத்தில் மற்றவர் முன் எந்த ஒரு காதல் ஜோடியும் சமுதாய அங்கீகாரத்தை பெறும் பொருட்டு, தங்களது எதிர்மறை குணங்களை காண்பிக்கவே மாட்டார்கள். அவர்களின் எதிர்மறை குணங்கள் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் உடனிருப்பவர்களுக்கு மட்டுமே தெரிய வரும். மசாலா திரைப்படங்கள் கடைசி வரை நேர்மறை பண்புகளை கொண்டவர்களாகவே கதாநாயகனையும், கதாநாயகியையும், அவரது காதல்களையும் உருவகிக்கிறது.

கார்ல் ரோஜர்ஸ் என்ற உளவியலாளர் “மனிதனின் குண நலன்கள்/ஆளுமை மாறிக்கொண்டே இருக்கிறது, ஏனெனில் அவர்கள் மாறிக்கொண்டே இருக்கும் உலகத்தில் வாழ்கிறார்கள்” ஆகவே ஒருவரின் குண நலன்கள் உலகத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ மாறுவது இயல்பே!

அப்படி உலக சூழ்நிலை மாற்றத்தினால் ஒருவரின் குண நலன்களில் ஏற்படும் மாற்றங்களை தவறாக புரிந்து கொண்டு, என்றும் மாறாத, நேர்மறை குணங்களை மட்டுமே கொண்ட ஒருவரே எனக்கு வாழ்க்கைத்துணையாய் அமைய வேண்டும் என கருதுவது ஏமாற்றத்தையே ஏற்படுத்தும்.

கெஸ்டால்ட் தெரபி எனும் உளவியல் கோட்பாடு சொல்கிறது, “மனிதர்கள் நல்லவர்களும் அல்லர்; கெட்டவர்களும் அல்லர்.” எத்தனை பெரிய நல்லவர்களும், சிலருக்கு கெட்டவர்கள் தான்; எத்தனை பெரிய கெட்டவர்களும், சிலருக்கு நல்லவர் தான். ஆகவே மனிதர்கள் அனைவரும் நேர்மறை குணங்கள் மற்றும் எதிர்மறை குணங்கள் ஆகியவற்றின் கலவையே! முழுமையாக நேர்மறை குணங்கள் மட்டுமே கொண்டவரை இந்த உலகத்தில் எங்குமே காண முடியாது. அப்படி ஒரு மனிதரை தேடி அலைந்தால் வெறுப்பு தான் ஏற்படும். அப்படி ஒருவர் வேண்டுமென்றால் செய்து தான் கொண்டு வர வேண்டும்.

இதனை என்னால் உறுதியாக சொல்ல முடியும். இதற்கு சாட்சி என் உளவியல் ஆலோசனையின் போது நான் பார்க்கும் பலரும்!

மேலளவில் நேர்மறை குணங்களை மட்டுமே கொண்டவர்கள் என் நீங்கள் நினைப்பவருடன் நெருங்கிப் பழகினால் மட்டுமே உங்களால் அவர்களின் எதிர்மறை குணங்களை காண முடியும்.

மற்றவர்களை கவர வேண்டுமானால், நம்முடைய நேர்மறை குணங்களை மட்டுமே நாம் காண்பிக்க வேண்டும் என்ற விதி நம்மையறியாமல் நம் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இதை நாம் அனைவரும் எந்த ஒரு பிசிறும் இல்லாமல் மிகச் சரியாக கடைபிடிக்கிறோம்.

காதல் திருமணங்களாகட்டும் அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களாகட்டும். எதுவாயினும் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் போது ஒருவர் மற்றொருவரின் நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்கள் என இரண்டையுமே தெரிந்திருக்க வேண்டும். அதற்கு பிறகே உறுதியான உறவிற்குள் செல்ல வேண்டும். அவ்வாறு தெரியாமல் திருமணம் செய்து அல்லது பாலுறவில் ஈடுபட்டு பின்னர் ‘ஒத்து வராது’ என பிரிய நினைத்தால் அது பலருக்கும் பல சங்கடங்களை ஏற்படுத்தும், முக்கியமாக அவ்விருவருக்கும் மிகுந்த மன உளச்சலை உண்டாக்கும்!

ஆகவே என்னைப்பொருத்தவரை, பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்படும் திருமணத்தில் பேசி முடிக்கும் முன்பே, மண மக்கள் இருவரும் தங்கள் நேர்மறை மற்றும் எதிர் மறை பண்புகளை உண்மையாக, வெளிப்படையாக தெரியப்படுத்திக்க் கொள்ள வேண்டும். இருவரும் மனம் விட்டு பேசி, குறைந்த பட்சம் ஒரு மாதம் பழகிப்பார்த்து பின்னர் உறுதியாக இருவரும் இணையாலாம் என முடிவு எடுத்தால் மட்டுமே பெற்றோர்கள் பேசி முடிக்க வேண்டும்.

இன்றைய நவீன யுகத்தில் விவாகரத்து என்பது சர்வ சாதாரணம் ஆகி விட்டது. சட்ட நெறிமுறைகளும் மிகக் கடுமையாய் இல்லாது, எளிதில் விவாகரத்து பெற வழி செய்கிறது. மேற்சொன்னாற் போல் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாது, திருமணம் முடிந்த பின் அத்தம்பதிகள் தங்களுக்குள் ஒத்து வராது என எண்ணினால் எளிதில் அவர்களால் குடும்ப நீதி மன்றத்தை நாடி விவாகரத்து பெற்றுக்கொள்ள முடியும்.

விவாகரத்து அதிகரித்து விட்டதே என்று அங்கலாய்க்கும் பெரியவர்கள், காலம் மாறி விட்டதை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள் என்றே நினைக்கிறேன். இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு, “கல்லா/ள்ளானாலும் கணவன், ஃ/புல்லானாலும் புருஷன்” என்று பெண்கள் சகித்துக்கொண்டிருந்தார்கள். அதனை தனக்கு சாதகமாய் பயன்படுத்தி ஆண்களும் இஷ்டத்துக்கு ஆடிக்கொண்டிருந்தார்கள்.

இப்போதெல்லாம் அவ்வாறு செய்ய முடியாது. பெண்களும் ஆண்களுக்கு நிகராய் முன்னேறி இருக்கிறார்கள். இந்த உண்மை இந்த காலத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் நன்றாகத் தெரியும். அவர்களை பெரியவர்கள் வழி நடத்துகிறேன் என்ற பெயரில் ‘பத்தாம் பசலி’ ஆக்க முற்பட்டு அவர்களின் வாழ்க்கையை கெடுத்துவிட வேண்டாம்.

எனவே உலகம் மாறி விட்டதை கருத்தில் கொண்டு, திருமண முறைகளில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதே விவாகரத்துகளை குறைக்கவும், மகிழ்ச்சியான திருமண வாழ்வை வாழவும் வகைசெய்யும்!