காதல் உறவு:என் பேரு, நிச்சயமா உங்க வாழ்க்கையில நீங்க பல இடத்துல கேட்ட ஒரு பொண்ணோட பேரு தான். என் வாழ்க்கை ஒன்னும் புதுசு இல்ல, உங்க தெருவுல, ஆபீஸ்ல, உறவுக்காரர் மத்தியில, ஏன் உங்க வீட்டுலையே கூட என்ன நீங்க பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு.
நூறு வருட சினிமாவுல நீங்க இப்படியான காட்சிகள் நிறையவே பார்த்திருக்கலாம். இருக்கிறதுலேயே என்னோட கதை தான் ஆதரபழசு. ஆனா, க்ளைமேக்ஸ் கொஞ்சம் புதுசா இருக்கும்னு நினைக்கிறன்…
கள்ளக்காதல்…
எங்கயாச்சும் கள்ள நட்பு, கள்ள மாமா, கள்ள பெரியப்பா, கள்ள ஆசிரியர், கள்ள அப்பா, அம்மான்னு நீங்க கேட்டிருக்கீங்களா? இல்லையே.. அப்பறம் எப்படி காதல்ல மட்டும் கள்ளக்காதல் வந்துச்சு. காதல்ங்கிறது உண்மை அவ்வளோ தான். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் மத்தியில காதல் இல்லாத உறவுக்கு வேற எத்தனையோ பேர் இருக்கு. அதனால காதல் இல்லாத உறவ கள்ளக்காதல்னு சொல்றத முதல்ல நிறுத்தனும்.
பெரியோர்களால்…
எனக்கு கல்யாணம் ஆகும் போது வயசு 21. பெத்தவங்க ரெண்டு வருஷமா தேடிப்பிடிச்ச சீமையில இல்லாத புருஷன தான் நான் கட்டிக்கிட்டேன். கல்யாணத்துக்கு அப்பறமும் நான் வேலைக்கு போவேன்னு பிடிவாதமா இருந்தேன். என் மாமியார் வீட்டுலயும் அதே பிடிவாதத்தோட தான் இருந்தாங்க. அவங்க வேண்டியதும் வேலைக்கு போற ஒரு மருமகள் தான்.
இந்த காலத்துல யார் வேலைக்கு போகாத மருமகள எதிர்ப்பாக்குறாங்க. நாட்டுல இஸ்ரோ விடுற ராக்கெட்டுக்கு நிகரா விலைவாசியும் எகிறிட்டுல்ல இருக்கு
பிரியர்!
என் ஹஸ்பெண்டுக்கு என்மேல அம்புட்டு பிரியம். ஒரு ராத்திரி கூட நான் இல்லாம அவரால தூங்க முடியாது. மாசத்துல மூணு நாள் கூட என்ன பிரிய முடியாத அளவுக்கு அவருக்கு என் மேல அவ்வளோ பாசம். லஸ்ட் ஸ்டோரீஸ்னு ஒரு படம் சமீபத்துல வெளியாச்சு… அத பார்த்திருக்கீங்களா? இந்தி தெரியாட்டியும் பரவால்ல இங்க்லீஷ் சப்டைட்டில் எல்லாம் வரும் கண்டிப்பா போய் பாருங்க. ஒரு பொண்ணோட இல்லற தாம்பத்திய தேவைகள் பத்தி அலசுற ஒரு படம்.
அதுல கெய்ரா அத்வானி நடிச்ச நாலாவது ஸ்டோரியோட பிரதிபலிப்பு என்னோட கதையிலையும் இருக்கும். ஆனா, அப்படியே இல்ல.. கொஞ்சம் மட்டும். ஏன்னா, அதுல கெய்ரா அத்வானிக்கு வாக்குப்பட்ட புருஷனும், என் புருஷனும் ஏறத்தாழ ஒன்னு தான்.
அடிக்ட்!
அவரொரு செக்ஸ் அடிக்ட். செக்ஸ் இல்லாம அவரால இருக்கவே முடியாது. அதுக்குன்னு அவர மோசமான ஆளுன்னு சொல்லிட முடியாது. ஏன்னா.. அதுக்கும் மேல கேட்டகிரி அவரு. ஆரம்பக் காலக்கட்டத்துல எல்லாருமே இப்படி தான் இருப்பாங்க போலனு நானும் பொறுத்துட்டு தான் போனேன். ஆனா, முதல் குழந்தை வயித்துல கருத்தரிச்ச பிறகு தான் தெரிஞ்சுது. அவருக்குள்ள இருக்கிறது ஒரு மிருகம்னு.
வலியுறுத்தல்!
குறிப்பிட்ட காலக்கட்டத்துக்கு மேல செக்ஸ்ல ஈடுப்பட கூடாதுன்னு டாக்டர் சொன்னத கூட கேட்காம என்ன செக்ஸ் வெச்சுக்கு வலியுறுத்தி கஷ்டப்படுத்தினார். ஒரு கட்டத்துல நான் சண்டைப் போட்டுட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டேன். நான் சண்டை போட்டுட்டு தான் வந்தேன்னு எங்க ரெண்டு பேரையும் தவிர வேற யாருக்கும் தெரியாது.
நடந்தது வேற…
ஆக்சுவலா சண்டைப் போட்டு வந்த பிறகு மனுஷன் திருந்திடுவாரு. என் மேல பாசமா நடந்துப்பாரு… நான் இல்லாத போதுதான், என்னோட அருமை அவருக்கு தெரியும்னு நான் நெனச்சேன். ஆனா, அந்த காலக்கட்டத்துல தான் அவருக்குள்ள இருக்க மிருகத்தோட பசி என்னன்னு தெரிய வந்தது. அவரு என்ன தேடி வராம… வேற ஒன்ன தேடி போனாரு.
ஆனா, அதுக்கு காரணம் அவரு இல்லையாம்.. நானாம்… நான் சண்டைப் போட்டு விட்டுட்டு வந்த காரணத்தால தான் அவரு இப்படியான ஒரு விஷயத்த தேடி போனாராம்.
அட்ஜஸ்ட்?!?!
இத எந்த வகையில பார்த்தாலும் நியாயப்படுத்த முடியாது. ஆனா, என் அம்மா, மாமியார், அவங்க வயசு ஒத்த பலரும்… கட்டிக்கிட்டவ தான் அனுசரிச்சு போகணும்ங்கிற மாதிரியான கண்ணோட்டத்துல பேசுனாங்க. (அவங்களுக்கு அவரு பண்ண தப்பு பத்தி தெரியாது. ஆனா, பொதுவா பேசினப்ப புருஷன் இப்படியான தப்பெல்லாம் பண்ணினாலும் நாம தான் அட்ஜஸ்ட் பண்ணி அவர திருத்தி குடித்தனம் நடத்தனும்.. அவங்க ஒரு கருத்த முன்வெச்சாங்க)
ரெடி இல்ல!
நாய குளிப்பாட்டி நடு வீட்டுல தான் வெக்க முடியும், அது பால் சோறு சாப்பிடாம.. கண்டத நக்க போனா… திரும்ப கூட்டிட்டு வந்து வாய கழுவிவிடவா முடியும். சாரி! அப்படி கழுவிவிட நான் ரெடியா இல்ல.
அவரு பண்ண தப்பு எனக்கு தெரியவரதுக்கு முன்னாடி என் குழந்தைக்கு தெரிஞ்சிடுச்சு போல. அதுவே இந்த பூமிக்கு அவரோட பிள்ளையா வர விரும்பாமா கலைஞ்சிடுச்சு. அவரு கொடுத்த வலியோட இந்த வலி எனக்கு பெருசா தெரியல.
ஊரு என்ன பேசும்?
நான் அவர டிவோர்ஸ் பண்ண போறேன்னு வீட்டுல சொன்னேன். அதுக்கான காரணத்தையும் மறைக்காம சொன்னேன். ஆனா, வீட்டுல இதெல்லாம் ஒரு காரணமா? இதெல்லாம் குடும்பத்துல நடக்குற தப்பு தான், போக, போக சரி ஆயிடும்னு சொன்னாங்க. எப்படி அந்தாளு எத்தன பேருக்கூட வேணாலும் போயிட்டு வருவாரு, அத நான் பொறுத்துக்கணும். இதெப்படி சரியாகும்.
இங்க, இந்த சமூகத்துல இன்னும் புருஷன் இறந்த பிறகு ஒரு விதவ பொண்ணு ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறதே முழுசா ஏத்துக்க முடியல. ஆனால், பொண்டாட்டி புள்ளத்தாச்சியா இருக்க அந்த ஏழெட்டு மாசம் கூட பொறுத்துக்க முடியாம ஊர் மேயிற புருஷன பொண்ணுங்க பொறுத்துக்கணுமா?
ஆறு மாசம்!
எல்லாரையும் போல கருத்து வேறுபாடுன்னு சொல்லி தான் விவாகரத்துக்கு அப்ளை பண்ணேன். அவரு இதுக்கு ஒத்துக்காட்டி, இல்ல அவங்க வீட்டாளுங்க ஏதாவது பிரச்சனை பண்ணா, அவரு பண்ண தப்ப ஊரு முழுக்க சொல்லிடுவேன். அத காரணம் வெச்சே விவாகரத்து கேட்பேன்னு சொன்னதால அவரும் ஒத்துக்கிட்டாரு.
எங்களுக்கு விவாகரத்து கிடைக்க ஒரு வருஷம் ஆச்சு. இதுக்கு நடுவுல தான் என் வாழ்க்கையில என்னோட முதல் காதல் பயணம் ஆரம்பம் ஆச்சு.
வேற ஒரு வாழ்க்கை…
விவாகரத்து அப்ளை பண்ணி ரெண்டு, மூணு மாசம் இருக்கும். புதுசா ஒரு வேலையில ஜாயின் பண்ணி இருந்தேன். அங்க தான் அவன் கூட அறிமுகம் ஆச்சு. அவனுக்கு லவ் ஃபெயிலியர், எனக்கு வாழ்க்கையே ஃபெயிலியர். ஒரு வீக்கென்ட் ஆபீஸ்ல எல்லாரும் ட்ரிப் போனப்ப தான் முதல்முறையா நாங்க ரெண்டு பெரும் ஒருத்தர் கூட ஒருத்தர் மனசுவிட்டு பேசுறதுக்கு வாய்ப்பு அமைஞ்சது.
நிறைய மாற்றங்கள்… அவன் மூலமா வாழ்க்கை மேல எனக்கு ஒரு புது பர்செப்ஷன் கிடைச்சது. இந்த உலகத்துல இன்னும் சமூகம் என்ன சொல்லும், அந்த நாலு பேரு என்ன பேசுவாங்கன்னு எல்லாம் யோசிச்சு வாழ முடியாது. இது நம்ம லைப், அதுவும் ஒரே ஒருமுறை தான் வாழ போறோம். அத நமக்கு பிடிச்ச மாதிரி வாழனும்னு சொல்லிக் கொடுத்தான்.
இம்பேக்ட்! எங்களுக்கு ஒருத்தர் மேல ஒருத்தருக்கு எப்போ காதல் வளர்ந்துச்சுன்னு தெரியல. அதுப்பத்தி தெரிஞ்சுக்கவும் நாங்க முற்படல. ஆனா ஒன்னு, என்ன பத்தி அவனுக்கும், அவன பத்தி எனக்கும் முழுசா தெரிஞ்சுது. ஆறு மாசத்துல ஒருத்தர பத்தி இவ்வளோ தெரிஞ்சுக்க முடியும். இல்ல, ஒருத்தர் நம்ம லைப்ல இவ்வளோ இம்பேக்ட் ஏற்படுத்து முடியும்னு அவன் மூலமா தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்.
எப்படி? எனக்கு விவாகரத்து கிடைக்கிறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே நானும், அவனும் காதலிக்கிறது என்னோட எக்ஸ் புருஷருக்கு தெரிஞ்சுப் போச்சு. உடனே, அவளுக்கு இன்னொரு நபர் கூட தொடர்பு இருக்கு., இதனால தான் என் கூட அவளுக்கு வாழ பிடிக்கலன்னு பேச ஆரம்பிச்சாரு. ஆமா! எனக்கு ஒன்னொரு நபர் கூட தொடர்பு இருக்கு. ஆனா, அதனால தான் அவரு கூட வாழ பிடிக்கலன்னு சொன்னது பொய். என் புருஷன் எனக்கு துரோகம் பண்ணாம இருந்திருந்தா நான் ஏன் விவாகரத்துக்கு அப்ளை பண்ண போறேன்?னு நியாயம் கேட்டோ, பதில் பேசியோ நேரத்த வீணடிக்க எனக்கு விருப்பம் இல்ல. நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ… நீ பண்ண தப்புக்கு உனக்கான தண்டனை இந்த விவாகரத்துன்னு நெனச்சுட்டு… நகர்ந்து வந்துட்டேன்.
தைரியம் வேணும்! எல்லா பெண்களுக்கும் தைரியம் வேணும். புருஷன் என்ன தப்பு பண்ணாலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகணும்னு இருக்க கூடாது. நாம எதிர்ப்பு காமிக்கணும், எதிர்த்து நிக்கணும். அவங்க இல்லாட்டி நம்மனால வாழ முடியாதுங்குற தைரியம் தப்பு பண்ற அவங்களுக்கே இருக்கும் போதும். நீ இல்லாட்டியும் என்னால வாழ்ந்து காட்ட முடியும்ங்கிற தைரியம் நமக்கும் வேணும். ஏன் ஆம்பளைங்க மட்டும் தான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கனுமா? பொண்ணுங்க பண்ணிக்கிட்டா என்ன?