* எனது மகள், தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறாள். அவளாக பார்த்து ஒரு பணக்கார வாலிபரை காதலித்து, திருமணம் செய்து கொண்டாள். இப்போது அவனிடம் இருந்து விவாக ரத்து வாங்கி கொடுங்கள் என்று, எங்களிடம் கூறுகிறாள். காரணம்,அந்த வாலிபர் ஆண்மை அற்றவர் என்று கூறுகிறாள். இதற்கு உங்கள் ஆலோசனை என்ன?
* ஆண்மை இல்லாத ஒரு ஆணை, கணவராக பாவித்து குடும்பம் நடத்துவது மிகவும் முடியாத ஒரு காரியம்தான். எனினும், உங்கள் மகளை, ஒரு நல்ல குடும்ப நல வழக்கறிஞரிடம் அழைத்துச்சென்று, ஆலோசிப்பது நல்லது.
* நான் ஒரு வியாபாரி. வயது 38. திருமணமான எனக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள். எனது மனைவி, “எனது அப்பா வீட்டுக்கு வந்து விடுங்கள். அங்கேயே குடும்பம் நடத்துவோம். எனது அக்காளும், அக்காள் மாப்பிள்ளையும் கூட எங்கள் அப்பா வீட்டில்தான் வாழ்கிறார்கள். நாமும் அங்கே செல்வோம்” என்று என்னை கட்டாயப்படுத்துகிறாள். இதற்கு நான் மறுத்ததால், எனது மனைவி, 2 குழந்தைகளுடன் தனது அப்பா வீட்டுக்கு சென்று விட்டாள். நான் தனியே வசிக்கிறேன். இனி நான் என்ன செய்வது ?
* நீங்கள் உங்கள் வியாபாரத்தில் நன்றாக முன்னேற்றம் காணுவதை விட்டு விட்டு, மாமனாருடன் சேர்ந்து வசிக்க செல்வது உகந்தது அல்ல. உங்கள் மனைவியின் பெற்றோரும், உங்களுக்கு அப்பா- அம்மா மாதிரிதான். அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
* திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் உள்ள எனக்கு, மனைவியுடன் அடிக்கடி ஏற்படும் சிறு சிறு தகராறால் நிம்மதி இழக்க நேரிடுகிறது. பெரிய அளவில் பிரச்சனை ஏற்படா விட்டாலும், தேவையில்லாமல் என் மீது எனது மனைவி சந்தேகப்படும் போது, கூடுதல் எரிச்சல் ஏற்பட்டு விவகாரத்து செய்து விடலாமா? என்று கூட தோன்றுகிறது. உங்கள் ஆலோசனை என்ன?
* காரணம் இல்லாமல் உங்கள் மனைவி உங்கள் மீது சந்தேகப்படுகிறாள் என்றால், அது “சந்தேக நோயாக” கூட இருக்கலாம். எனினும் திருமணமான ஒரு ஆண், திருமணத்துக்கு முன்பு, பெண்களுடன் சகஜமாக பேசி பழகியது போல, திருமணத்துக்கு பிறகும் இருக்க கூடாது. ஒரு மரியாதையான இடைவெளியை, பெண்களிடம் மேற்கொள்ள வேண்டும்.
* நான் ஒரு கல்லூரி மாணவி. என்னுடன் படிக்கும் ஒரு மாணவர், என்னிடம் மிகவும் அன்பாக பழகுகிறார்., என் மீது அன்பை பொழிந்து, நான் சந்தோஷமாக இருக்கும் படியாக, என்னை புகழ்ந்து புகழ்ந்து பேசுகிறார். என் தோழியோ, “அவன் மிக மோசமானவன். ஜாக்கிரதையாக இரு” என்று கூறுகிறாள். அவன் என்னிடம் பழகும் விதத்தை பார்த்தால், எனது தோழியின் வார்த்தைகளை, என்னால் நம்ப முடிய வில்லை. உங்கள் ஆலோசனை என்ன?
* எந்த ஆண்களிடமும், திருமணத்துக்கு முன் இடைவெளி மேற்கொள்வது மிக மிக அவசியம். எனினும் அவர் உங்களிடம் மட்டுமே மிகவும் அன்பாக பழகுகிறார் என்றால், மனதின் ஒரு ஓரத்தில் அதை பதிய வைத்துக் கொள்ளலாமே தவிர, எல்லை மீறுவது ஒரு போதும் கூடாது.
* டாக்டரம்மா ! எனது நண்பன், சமீபத்தில் ஒரு இளம் விதவையை திருமணம் செய்து கொண்டான். அவளோ, அவனது முன்னாள் காதலி. அவளது கணவன் இறந்து விட்டதால், தனது காதலியை அவன் திருமணம்செய்து கொண்டான். ஆனால், இப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது. இதனால் பிரிந்து விடலாம் என்று அவன் நினைகிறான். உங்கள் ஆலோசனை என்ன?
* இளம் விதவையை திருமணம் செய்து கொள்வது, ஒரு உன்னத செயலாகும். மற்றவர்கள் பேசுவதை, ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இருவரும் மனம் விட்டு பேசி, பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள். பிரிவது நல்லது அல்ல.
* டாக்டர்! நான் ஒரு பிளஸ்-2 மாணவி. மாலையில் நான் டியூசன் சென்று வருகிறேன். திருமணமான டியூசன் ஆசிரியரின் குறும்பு தாங்க முடிய வில்லை. நான் என்ன செய்வது?
* வாழ்க்கையில், நல்ல ஒழுக்கமும்தான், விலையேறப்பெற்ற பெரிய சொத்து. அதனால், தவறான செயல்களுக்கு உள்படுத்தும் டியூசன் ஆசிரியர் பற்றி பெற்றோரிடம் கூறுவதுடன், வேறு ஒரு டியூசன் சென்டரில் டியூசனுக்கு செல்வது நல்லது.
* டாக்டரம்மா ! எனது தோழிக்கு , அவரது தாயார் மட்டுமே உள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் அவருக்காகவே என் தோழி, திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வாழ்கிறார். இப்போது அவளுக்கு 30 வயது ஆகி விட்டது. உங்கள் ஆலோசனை என்ன?
* திருமணத்தை தள்ளிப்போடுவது நல்லதல்ல. நேர்த்தியான வரன் அமையும் போது, தனது தாயாரின் நிலையை எடுத்துக்கூறி, அதற்கு சம்மதிக்கும் மணமகனை திருமணம் முடித்துக் கொண்டு, இரண்டு பேருமாக , நோய்வாய்ப்பட்ட அந்த தாயாரை கவனத்துக்கொள்வதே சிறந்ததாகும்.