தாய் நலம்:கர்ப்ப காலத்தில் என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதனை ஒரு பட்டியல் இட்டு சொல்லலாம். ஏனெனில் அந்த அளவுக்கு கர்ப்ப காலத்தின் போது உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
அந்த வகையில் கர்ப்ப காலத்தில் சீரகத் தண்ணீரை அருந்துவது சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வைத்தியர்கள் கூட பரிந்துரைத்துள்ளார்கள். அப்படி என்ன தான் இந்த சீரகத் தண்ணீரில் உள்ளது எனக் கேட்கின்றீர்களா?
கருவுற்றுள்ள பெண் ஒருத்திக்கு வாந்தி, குமட்டல், மனநிலையில் மாற்றம், வயிறு ஊதுதல், மலச்சிக்கல், தூக்கமின்மை, கர்ப்பகால நீரிழிவு, உயர்இரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இருப்பினும் இது போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து மாத்திரைகள் மூலம் தீர்வு காண இயலாது. ஏனெனில் மருந்துகள் உட்கொண்டால் அதன் மூலம் ஏற்படும் பக்கவிளைவுகள் குழந்தையையும் பாதிக்கும்.
ஆனால் மருந்துகளுக்கு பதிலாக சீரகத்தை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரகமானது குழந்தைக்கு பாதுகாப்பாக இருப்பது மட்டுமல்லாது தாய் மற்றும் சேய் இருவரினதும் உடல் நலத்திற்கு சிறந்தாக உள்ளது.
இது கர்ப்பகாலத்தில் இரத்த சோகை ஏற்படுவதை குறைக்கின்றது. பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் இரும்புச் சத்துகுறைப்பாட்டால் பாதிக்கப்படுவர். சீரகத் தண்ணீரை அருந்துவதன் மூலம் ஹீமோகுளோபின் அளவுகள் அதிகரிக்கின்றது. இதன் மூலம் இரத்த சோகை ஏற்படுவது குறைக்கப்படுகின்றது.
சீரகத் தண்ணீரை அருந்துவதன் மூலம் அமிலத் தன்மை குறைக்கப்பட்டு உணவு சமிபாடடைவதும் இலகுபடுத்தப்படுகின்றது.
கர்ப்பகாலத்தில் நீரிழிவு ஏற்படுவது வழக்கம். இதன் போது சீரகத் தண்ணீரை அருந்துவதால் உடலில் உள்ள அதிகபடியான சீனி கட்டுப்படுத்தப்படும்.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் மன அழுத்தமானது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். இது குழந்தையின் நலனை பாதிக்கக் கூடியது. ஆனால் சீரகத் தண்ணீரை தொடர்ந்து பருகி வருவதன் மூலம், இரத்த அழுத்தம் சீராக பேணப்படுகின்றது.
இந்த சீரகத் தண்ணீரை எவ்வாறு தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
01. மூன்று மேசைக் கரண்டி சீரகத் தண்ணீர்
02. ஒன்றரை லீட்டர் தண்ணீர்
செய்முறை
சீரகத்தை தண்ணீருடன் கலந்து அதனை குறைந்தது ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். பின்னர் குறித்த தண்ணீரை வடிகட்டி எடுத்து அதனை ஆறவிட வேண்டும். ஆறிய தண்ணீரை போத்தலில் இட்டு அதனை குடிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிதாக சீரகத் தண்ணீர் தயாரித்து பருகுவது உத்தமம்.