கர்ப்ப நலம்:என் கணவருக்குப் புகைப் பழக்கம் உள்ளது. வீட்டிலேயே புகைப்பார். இந்த நிலையில் அவரோடு உடலுறவு கொண்டு கருத்தரித்தால் எனக்குக் குறைபாடு உள்ள குழந்தை பிறக்குமா? அல்லது இயல்பான குழந்தை பிறக்குமா?
புகை மற்றும் மதுப் பழக்கம் இரண்டும் உடல் நலத்துக்கு அச்சுறுத்தல் என்பது தெரிந்த விஷயம்தானே. உங்கள் கணவரின் புகைப் பழக்கம் கண்டிப்பாக உங்கள் கருவைப் பாதிக்கும்.
புகையில் உள்ள நச்சுப் பொருள்கள் அவருடைய உயிரணுக்களைப் பாதிப்பதால், அவருக்குக் குறைபாடான அணுக்கள் உருவாகி பிறவிக் குறைபாடு உள்ள குழந்தைப்பேற்றை உண்டாக்கும்.
பிறக்கும் குழந்தையும் எடை குறைவாகப் பிறக்க நேரிடும். புகையிலையின் பாதிப்பு உள்ளவர்களின் குழந்தை, அப்பழக்கம் இல்லாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைவிட இருநுாறு கிராம் எடை குறைவாகப் பிறக்க நேரிடும்.
உங்கள் கணவர் வெளிவிடும் புகையை உள்ளிழுக்கும்போது அதில் உள்ள நிக்கோட்டின் நச்சு கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும். சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு, உங்கள் ரத்த ஓட்டத்தில் கலப்பதால் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறையும்.
இதனால், குழந்தைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் குறையும். இதன் விளைவாக, குழந்தை குறைப் பிரசவத்தில் பிறக்கும் அபாயம் உண்டு. பிரசவத்தின்போது, நீங்களும் மிகப் பெரிய அபாயங்களைக் கடக்கவேண்டி இருக்கும்.