இளம் வயதில் உடல் பருமனாக இருந்தால், கர்ப்பம் தரிக்கும்போது பல்வேறு பிரச்சனைகளை தரும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் சர்க்கரை வியாதி உண்டாகிவிடும். உயர் ரத்த அழுத்தம், மிக அதிக உடல் பருமன் ஆகியவை உண்டாகக் கூடும் என எச்சரித்துள்ளனர்.
உடல் பருமனானவர்கள் கர்ப்பமாகும்போது, குழந்தைக்கும், அம்மாவிற்கு வாழ் நாள் முழுவதும் பாதிப்புகள் உண்டாகலாம். அதேபோல், உடல் பருமனானவர்களுக்கு சிசேரியன் செய்யும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. கர்ப்ப காலத்தில் பிரச்சனை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், குழந்தை பெற்ற பின்னும் தாய் – சேய் இருவர் உடல் நலனும் பாதிக்கும் எனவும் கூறுகிறார்.
ஆகவே உடல் பருமனை கட்டாயம் குறைக்க பெண்கள் முற்படவேண்டும். கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்ததை எப்போதும் கட்டுக்குள் வைப்பதற்கு உடற்பயிற்சிகள் மிக அவசியம். உடல் பருமனானவர்கள் என்றில்லாமல் எல்லா பெண்களும் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்று கூறுகின்றார்.
குறிப்பாக பிரசவமான பெண்கள் உடலின் உள் ஆரோக்கியத்தை மட்டும் பார்க்காமல், வெளி ஆரோக்கியத்தையும் அதாவது உடற்பயிற்சி மூலம் உடல் அமைப்பையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தாம்பத்தியமும் தடுமாறாமல் செல்லும்.
உடற்பயிற்சிகள் செய்தால்தான் ஹெர்னியா, கர்ப்பப்பை சரிதல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க முடியும். அறுவைசிகிச்சை பிரசவம் எனில் 2 மாதத்துக்கு அப்புறம்தான் உடல் நார்மலுக்கு வரும். அதற்குப் பின் உடற்பயிற்சிகள் செய்யலாம்.
கருவுற்ற ஆரம்பத்திலேயே ஹீமோகுளோபின், தைராய்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு போன்ற அடிப்படை டெஸ்ட்களை அவசியம் செய்து கொள்ள வேண்டும். கருவுற்ற தாய்மார்களுக்கு ரத்தசோகை ஏற்படுவது இயல்பு. இதனால், காய்கறிகள், கீரை மற்றும் பழ வகைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். ஆரம்பத்திலிருந்தே இரும்பு, கால்சியம் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். கருவுற்ற காலத்தில் கட்டாயமாக மூன்று முறை ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும்.
கருவுற்ற ஆரம்ப காலத்தில் கரு சரியாக கர்ப்பப்பையில் உள்ளதா என தெரிந்துகொள்ள வேண்டும். 18-20 வாரத்தில் முழுமையாக வளர்ந்த கரு, பிறவிக் குறைபாடு இல்லாமல் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். கருவுற்ற கடைசி மாதங்களில் கர்ப்ப காலத்திற்கு ஏற்ற வளர்ச்சி உள்ளதா என்றும், பனிக்குடம் நீர் சரியாக உள்ளதா என்றும் தெரிந்துகொள்ளும் ஸ்கேன் அவசியம் செய்துகொள்ள வேண்டும்.
கருவுற்ற காலங்களில் அமைதியான மனநிலையில் இருப்பது அவசியம். தினமும் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும். மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். 40 நிமிடங்கள் மிதமான நடைப்பயிற்சி செய்தல் வேண்டும்.