பெண்கள் நலம்:பெண்களின் வாழ்வில் மிக முக்கியமான கால கட்டம் என்று கர்ப்ப காலத்தை கூறலாம்; தாய்மையும் மிகமுக்கியமான காலகட்டம் தான். ஆனால் தாய்மையின் பொழுது குழந்தையை நேருக்கு நேராக பார்க்கின்றனர், நேரடியாக பிரச்சனைகளை புரிந்து கொள்கின்றனர். இதுவே கர்ப்ப காலத்தின் பொழுது தனக்குள்ளே எப்பொழுது என்ன நடக்கிறது என்பதை கர்ப்பிணியால் அவ்வளவு எளிதில் உணர முடிவதில்லை.
இது மட்டுமன்றி கர்ப்பகாலத்தின் இறுதியில் பெண்கள் வாழ்வா? சாவா? என்ற சூழ்நிலையை சந்தித்து அதிலிருந்து மீண்டு வருகின்றனர்.
குழந்தையின் நலம்! பெண்களின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியது கர்ப்பகாலம் என்று கூறுவதற்கு பெண்ணின் நலம் ஒரு காரணமாக இருந்தாலும், அவர்களுள் வளரும் குழந்தை மிக முக்கிய காரணமாக விளங்குகிறது. கர்ப்ப காலத்தில் பெண்ணின் ஆரோக்கியம் அவளின் உள்ளாக வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையம் சேர்த்து குறிக்கிறது.
ஆண்களுக்கும் பங்கு உண்டு! இத்தகு முக்கியத்துவம் வாய்ந்த பெண்ணின் கர்ப்ப காலத்தின் பொழுது, ஆண்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. பெண்ணை மணந்து அவள் வயிற்றில் குழந்தையை அளித்து விட்டு, எனெக்கென்ன என்று மனைவியை பார்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்ல ஆணுக்கு அழகல்ல. ஒரு பெண்ணை மணந்த நாள் முதல் எல்லா நேரத்திலும் அவளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது கணவரின் கடமை; இதே கடமை மனைவிக்கும் உண்டு. இப்பொழுது மனைவியின் கர்ப்ப காலத்தின் பொழுது கணவர்கள் என்னென்ன பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் கணவர்களுக்கு என்னென்ன கடமைகள் உள்ளன என்று இந்த பதிப்பில் பார்க்கலாம்.
படித்து அறிந்து கொள்ளவும்! மனைவி கர்ப்பம் அடைந்த செய்தியை கேட்டவுடனேயே மனைவியை அடுத்து வரும் நாட்களில் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும், அவளின் உடலில் மற்றும் மனதில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழும், அவள் வயிற்றில் வளரும் குழந்தையின் நிலை எப்பொழுது எப்படி மாறும், எப்படி வளரும் என்ற தகவல்கள் குறித்த முழு புரிதல் கணவர்களிடத்தில் இருக்க வேண்டியது அவசியம். மேலும் மனைவிக்கு என்னென்ன உணவுகள் அளிக்க வேண்டும், அளிக்கக்கூடாது போன்ற தகவல்களையும் கணவன்மார்கள் படித்து அறிந்து வைத்திருந்து, அதன்படி மனைவியை கவனமாக பார்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.
கூடவே இருக்க முயலுங்கள்! பெண்கள் கர்ப்பம் தரித்த பின், அவர்களின் கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம். அந்த சமயங்களில் கணவன்மார்கள் மனைவியின் கூடவே இருந்து அவர்களை கவனித்துக் கொள்ளுதல் அவசியம். மனைவி வாந்தி எடுக்கும் நேரங்களில், மனைவிக்கு காலை பலவீனம் எடுக்கும் நேரங்களில் என மனைவி சோர்வுறும் தருணங்களில் எல்லாம் உடன் இருந்து அவளுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது கணவரின் முக்கிய கடமை!
பிடித்ததை செய்யவும்! மனைவியின் கர்ப்ப காலத்தின் பொழுது அவள் விரும்பும் உணவுகள், பழங்கள், காய்கள், நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை உங்களால் முடிந்த அளவு வாங்கித்தந்து அவர்களை மகிழ்விக்க முயல வேண்டும். மனைவி செல்ல விரும்பும் இடங்களுக்கு அழைத்து செல்வது, அவர்கள் பார்க்க விரும்பும் நபர்களை சந்திக்க செய்வது என மனைவியின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்ற முயல வேண்டும்.
தீங்கு நெருங்க கூடாது! ஆனால், அவர்கள் ஆசைப்படும் பொருட்கள், இடங்கள், பார்க்க நினைக்கும் மனிதர்கள் என அனைத்தும் உண்மையிலேயே உங்கள் மனைவிக்கு ஆரோக்கியம் மற்றும் சந்தோஷத்தை அளிப்பதாக இருந்தால் மட்டும் செய்யவும்; அவர்களை கஷ்டப்படுத்தும் எந்தவொரு விஷயமும் அவர்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் கர்ப்ப காலத்தில் பெண்கள் உளமாற மகிழ்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்
மனைவியை ஊக்குவியுங்கள்! கர்ப்ப காலத்தின் பொழுது பல உடல் உபாதைகள், பாதிப்புகளை பெண்கள் சந்திக்க நேரிடும் அந்த சமயங்களில் அவர்கள் மனம் தளர்ந்து போக நேரிடலாம். அந்நேரங்களில் கணவன்மார்கள் மனைவியை, “உன்னால் முடியும்” என்று கூறி ஒவ்வொரு செயலிலும் ஊக்குவித்து மனைவியை நேர்மறையான எண்ணங்கள் சூழ்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்ணின் சந்தோஷமான மனமும், திடமான மற்றும் நேர்மைறையான குணமும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம்!
மனநிலையை புரிந்து கொள்ளுங்கள்! பெண்களின் கர்ப்ப காலத்தின் பொழுது அவர்களின் உடலில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களால் பெண்கள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு மாதிரியாக நடந்து கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே கணவன்மார்கள் மனைவியின் மனநிலை எப்படி மாறினாலும் கோபமோ வருத்தமோ கொள்ளாது, அந்த மாற்றங்கள் மனைவியாக செய்யவில்லை – மனைவியினுள் நிகழும் ஹார்மோன் மாற்றங்கள் அவளை செய்ய வைக்கின்றன என்று புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல செயல்பட முயல வேண்டும். மனைவிக்கு உறுதுணையாக இருந்து, அவளுக்கு முழுமையான ஆதரவு அளித்து உதவுதல் வேண்டும்.
சரியான நேரம்! மனைவி எங்கு செல்ல விரும்பினாலும் அவளுடனேயே இருந்து உதவுதல் வேண்டும்; மனைவியால் சமைக்க முடியவில்லை எனில் அவளுக்கு சமைத்து கொடுப்பது, அவளால் முடியாத தருணங்களில் வீட்டு வேலைகளை செய்து முடிப்பது போன்ற சிறு சிறு உதவிகளை மனைவிக்காக கணவன்மார்கள் செய்தால் அதைவிட பெரிய சந்தோஷம் மனைவிக்கு வேறு எதுவும் இல்லை. தான் எத்துணை நல்ல கணவரை பெற்று இருக்கிறோம் என்பதை மனைவிக்கு உணர்த்த இந்த கர்ப்ப காலம் தான் மிகவும் சரியான நேரம்.
மருத்துவர் சந்திப்பு! மருத்துவரை ஒவ்வொரு மாதமும் சந்தித்து சோதனை மற்றும் சிகிச்சை பெரும் சமயங்களில் தவறாது மனைவியுடன் கணவன்மார்கள் உடன் செல்ல வேண்டியது அவசியம்; அமருத்துவரை சந்திக்க மனைவி மறந்தாலும் கட்டாயமாக அவளை மருத்துவனைக்கு அழைத்து செல்ல வேண்டியது கணவரின் பொறுப்பு. மருத்துவர் கூறும் அனைத்து விஷயங்களையும் தெளிவாக கேட்டு அதன்படி மனைவியை கவனித்துக் கொள்ள வேண்டும்.
பிரசவத்திற்கான ஏற்பாடு! கர்ப்ப காலம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே மனைவியின் பிரசவத்தின் பொழுது தேவைப்படும் விஷயங்கள் மற்றும் பொருட்களை முன் கூட்டியே திட்டமிட்டு வாங்கி வைத்திருத்தல், பிரசவத்திற்கு பின் மனைவியையும் குழந்தையையும் பார்த்துக் கொள்ள ஒரு நம்பிக்கையான ஆளை முடிவு செய்து வைப்பது போன்ற விஷயங்களை கணவன்மார்கள் செய்தல் வேண்டும்.
ஆண்மகன் – கணவன் – அப்பா முக்கியமாக பிரசவம் நடக்கும் பொழுது கண்டிப்பாக மனைவியுடன் கணவன்மார்கள் இருந்து நம்பிக்கை அளித்து, குழந்தை பிறப்பு நல்ல முறையில் நடந்து தாயும் சேயும் நலமாக இருக்க தனது ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
இந்த அனைத்து விஷயங்களையும் மிகச்சரியாக செய்து முடிக்கும் நபர் மட்டுமே ஒரு நல்ல கணவராக, நல்ல அப்பாவாக, நல்ல மனிதராக, ஒரு நல்ல ஆண்மகனாக இருக்க முடியும்.!