Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப காலத்தில் உண்டாகும் காலைநேர சோர்வை போக்கும் வீட்டு வைத்தியம்

கர்ப்ப காலத்தில் உண்டாகும் காலைநேர சோர்வை போக்கும் வீட்டு வைத்தியம்

66

அளவில்லா ஆனந்தம், மட்டற்ற மகிழ்ச்சி, பூரிப்பு, இனம் புரியாத சந்தோஷமும் கூடவே கொஞ்சம் பயமும், ஓரே ஆச்சரியம் இப்படி சொல்லி கொண்டே போகலாம். ஓரு பெண் தான் கருவுற்று இருக்கிறாள் என்று கர்ப்ப பரிசோதனையில், கர்ப்பமென்று உறுதி செய்யப்பட்டவுடன். ஆம் அந்த பரவசத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியுமா? உண்மை தான் ஆனால் கூடவே அந்த மசக்கையும் வருமே….அது கரு உருவாகும் போது ஹார்மோன்களின் மாற்றத்தால் ஏற்படும் வாந்தியும், குமட்டலும் கொஞ்சம் படுத்தி எடுக்கும் தான். பொதுவாக, கர்ப்பமடைந்த பெண்களில் 65% பெண்களுக்கு காலை எழுந்தவுடன் வாந்தியும், குமட்டலும் இருக்கும். ஆனால் ஒரு சில பெண்களுக்கு நாள் முழுதும்…

கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில்,குறிப்பாக 6வது வாரம் முதல் 12 வது வாரம் வரை கொஞ்சம் ஓவராக இருக்கும். ஒரு சில பெண்கள் கர்ப்பகாலம் முழுவதிலுமே வாந்தி எடுத்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் கர்ப்ப காலங்களில், சும்மா மருந்தகத்திற்குப் போய் வாந்திக்கு மாத்திரை வாங்கி சாப்பிடவே கூடாது. தப்பி தவறி கூட அந்த தவற்றை செய்து விடாதீர்கள். அப்போ என்ன தான் செய்ய என்று கேட்கிறீர்களா….. இருக்கவே இருக்கு நம் வீட்டு வைத்திய முறைகள்.

1.இஞ்சி
மசக்கையினால் ஏற்படும் குமட்டல்/வாந்திக்கு இஞ்சி ஒரு சிறப்பான மருந்து. புதிதாக தயாரிக்கப்பட்ட இஞ்சி சாறு டீ, இனிப்புக்கு தேன் அல்லது வெல்லம் சேர்த்து குடித்தால் நல்லா சுகம்மா இருக்கும். வாந்தியும் கட்டுப்படும். இஞ்சி மரப்பா கூட சாப்பிடலாம். இஞ்சியுடன் எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து சாப்பிடால் குறிப்பிட்ட இடைவேளைகளில் சாப்பிட்டுவதும் குமட்டல்/வாந்திக்கு ஒரு நல்ல மருந்து. ஆனால் இஞ்சியை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்வதும் நல்லதல்ல.

2. மிளகு கீரை
மிளகுகீரை டீயின் நற்குணங்களை பார்க்கும் போது, வாந்தி/ குமட்டலுக்கு மட்டுமல்லாமல், வயிறு பிடிப்புக்கும் அருமருந்தாகின்றது. உங்களுக்கு நெஞ்சு எரிச்சல் பிரச்சனை இருந்தால், மிளகுகீரை டீ சாப்பிவதில் கவனம் தேவை. மிளகுகீரை மிட்டாய் ஆகவும் சாப்பிட்டலும் நன்றாக இருக்கும், ஆனால் அதில் உள்ள சர்க்கரை அளவையும் கருத்தில் கொள்ளவும்.

3. சிகப்பு ராஸ்பெர்ரி இலை டீ
சிகப்பு ராஸ்பெர்ரி இலை டீ, மசக்கையினால் ஏற்படும் வாந்தி/ கும்மட்டலுக்கு மருந்தாவது மட்டுமில்லாமல், உடலின் இரத்த ஓட்டத்தையும் சீராக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சிகப்பு ராஸ்பெர்ரி இலை டீ, அடிவயிற்று தசைகளையும், சிறுநீராக தசைகளையும் பலப்படுத்துவதால், உங்களது உடம்பை மகப்பேறுக்கு தயார் ஆக்கும் பணியையும் செய்கிறது. மேலும் தாய்பாலின் தரத்தையும் மேம்படுத்துவும் உதவுகிறது. ஆகையால் முதல் மூன்று மாத கருதரிப்பின் போது 1 (அ) 2 கப் சிகப்பு ராஸ்பெர்ரி இலை டீயும், மூன்றாவது மூன்று மாதத்தின் போது 4 (அ) 5 கப் டீ குடிப்பது நல்ல பலனை தரும்.

4. மணி அடிச்ச சோறு, மாமியாரு வீடு
கர்ப்பகாலத்தின் போது சரியான நேரத்திற்கு சாப்பிட்டு விடுங்கள். தயவு செய்து பட்டினி கிடக்காதீர்கள். வெறும் வயிறு குமட்டலை அதிகரிக்கும். 3 வேளை சாப்பாட்டுக்கு பதிலாக 5 (அ) 6 வேளை கொஞ்சமா சாப்பிடுங்கள். ஏனென்றால் கொஞ்சமான உணவை ஜீர்ணிப்பது வயிற்றுக்கு சுலபம். பழங்கள் மற்றும் சத்தான உணவையே சாப்பிடுங்கள்.

5. எண்ணெயில் பொரித்த உணவுகள்
கர்ப்பகாலத்தின் போது திடீரென்று, எதையாவது கன்னபின்னனு சாப்பிட தோன்றும். இரவு 12 மணிக்கு எழுந்து உட்கார்ந்து கொண்டு, சமோசா, ப்ரென்ச் ப்ரை சாப்பிடனும் போல மனம் ஏங்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் உங்கள் உடலுக்கு உகந்தது அல்ல. அப்படியே ஆசைப்பட்டு சாப்பிட்டீர்கள் என்றாலும், எலுமிச்சையை முகர்ந்து கொள்ளவும். வெந்நீர் குடிப்பது நல்லது.

6. காபிக்கு முடிந்தளவு வேண்டாம் சொல்லுங்கள்!!!
6. காபிக்கு முடிந்தளவு வேண்டாம் சொல்லுங்கள்!!!
காபி / டீ க்கு கர்ப்பகாலத்தின் போது குடிப்பது தவறில்லை தான். ஆனால் ஓரு லிமிட்டில் வைத்து கொள்ளுங்கள். “கொட” “கொட” என்று வாந்தி எடுத்து விட்டு “அப்பாடா” என்று வந்து உட்காரும் போது, ஒரு கப் காபி குடித்தால் நல்ல ப்ரஷ்ஷா இருக்கும். உண்மைதான். ஆனால் காபியில் உள்ள கபைன் மீண்டும் வாந்தியை தூண்டும் தன்மை உள்ளது. மேலும், ஒரே நாளில், 300 mgக்கு அதிகமாக கபைன் சேரும் போது, அது கருவில்லுள்ள குழந்தைக்கு பாதிக்கும் என்பதால் அது நல்லதல்ல. அதையும் கவனத்தில் கொள்ளவும்.

7. லெமன் சோடா
7. லெமன் சோடா
எத்தனை பேர் ஏற்று கொள்வீர்களோ தெரியவில்லை. எனது, இருமுறை கர்ப்பகாலத்தின் போதும் லெமன் சோடா நல்லபலனை தந்தது. எலுமிச்சம் பழத்தை பிழிந்து உப்பு போட்டு, கொஞ்சம் சோடா சேர்த்து கப் கப் என்று அடித்தால் சூப்பரா இருக்கும். ஒரு ஏப்பம் வரும் பாருங்க… குமட்டல் ஒடியே போய் விடும்.

8. இனிப்பு – கொஞ்சம் பார்த்து சாப்பிடுங்க!!!
8. இனிப்பு – கொஞ்சம் பார்த்து சாப்பிடுங்க!!!
எண்ணெயில் செய்யப்பட்ட இனிப்பு பலகாரமா!! அது வாந்தியை தூண்டுமே. ஐஸ் கிரிம் கூட வாந்தியை தூண்டும். ஆனால் இது எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது. கொஞ்சம் பார்த்து சாப்பிடுங்க!!!

9. சுடு தண்ணீர் குடிங்க!!!
9. சுடு தண்ணீர் குடிங்க!!!
கர்ப்பகாலங்களில் வயிறு சீக்கிரமே அப்செட் ஆயிடும். அதுவும் மசாலா தூக்கலா உணவு சாப்பிட்டிங்கனா அவ்வளவு தான். அப்போ சுடு தண்ணீர் குடிங்க. வயிறு கடபுட எல்லாம் சரியாயிடும்.

10. பெருஞ்சீரகம்
10. பெருஞ்சீரகம்
பெருஞ்சீரகம் சிறிதளவு மயக்கதன்மையை கொடுக்கக்கூடியது. இதன் வாசனை ஒரளவு, அதிமதுரம் போல இருக்கும். சாப்பிட்டவுடன், ஒரு டீஸ்பூன் வாயில் போட்டு மென்று தின்பது வயிறுக்கு இதம் தரும். குமட்டலையும் குறைக்கும் அல்லது 1 டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை 225 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து, டீக்கஷன் போல இறக்கி, அதனுடன் தேனும், எலுமிச்சை சாறும் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் தரும்.

11. கறிவேப்பிலை
11. கறிவேப்பிலை
நமது பராம்பரிய ஆயூர்வேத மருத்துவர்களின் பரிந்துரையின்படி , 20 கறிவேப்பிலை எடுத்து நீர் சேர்த்து பிழிந்து சாறு எடுத்து, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறும், தேனும் சேர்த்து, தினமும் மூன்று வேளை சாப்பிட்டுவது மசக்கையினால் ஏற்படும் வாந்தி/ குமட்டலுக்கு அருமருந்து.

12. எலுமிச்சை
எலுமிச்சை துண்டை முகர்ந்து பார்த்தால் குமட்டல் குறையும். லெமன் ஜுஸ்டன் சிறிதளவு இனிப்பு மற்றும் இஞ்சி துண்டை சேர்த்து தினமும் குடிங்க .. அல்லது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு , புதினா சாறு, இஞ்சி சாறு கலந்து தேன் சேர்த்து ஒரு நாளைக்கு 2 (அ) 3 முறை சாப்பிட்டு பாருங்கள்.. குமட்டல்/ வாந்தி குறையும். இல்லையா இருக்கவே இருக்கு கடைகளில் புளிப்பு மிட்டாய். அது அப்படியே வாயில் கரையும் சுகமே சுகம்.

13. யூகளிப்டஸ் எண்ணை
யூகளிப்டஸ் எண்ணையை ஒரு சில துளிகளை கைக்குட்டையில் விட்டு , வைத்துகொள்ளுங்கள். லைட்டா குமட்டிசின்னா, கைக்குட்டையை முகர்ந்து பாருங்கள். குமட்டல் கட்டுப்படும். யூகளிப்டஸ் எண்ணையின் வாசனை நல்ல புத்துணர்ச்சியை தரும்.

14. தலைவலி/ ஜலதோஷ தைலம்
தலைவலி/ ஜலதோஷ தைலங்களில் யூகளிப்டஸ் எண்ணை, கற்பூரம், புதினா வைத்தே தயாரிக்கப்படுவதால், அதனை முகர்வதின் மூலம் வாந்தி/ குமட்டலில் இருந்து, நல்ல சுகம் கிடைக்கும். இவை மிக சுலபமாக எல்லா கடைகளிலும் கிடைப்பதால், எப்போதும் கைவசம் வைத்திருங்கள். லைட்டா குமட்டும் போது, அப்படியே எடுத்து முகர்ந்து பாருங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும்.

15. பிடிக்காத வாசனை /திரவியங்கள்
ஓரு சிலருக்கு ஒரு சில வாசனைகளை முகர்ந்தால் சாதாரணமகவே வாந்தி வர்றமாதிரி இருக்கும். குறிப்பாக சொன்னால், பூண்டு, வெங்கயம் வதக்கும் வாசனை, பெயிண்ட், பெட்ரோல், லாண்டரி கடை வாசனை, சில சோப்புகள், ஷாம்புகள், தரை துடைக்க உதவும் கிளினங் பொருட்கள் முதலியவை. அதுவும் கர்ப்பகாலங்களில், அவற்றை தவிர்த்து விடுங்கள்.

16. சீரகம்
வாந்தி / குமட்டல் பிரச்சினைக்கு நம்ம பாட்டி வைத்தியத்தில் சீரகத்திற்கு தான் முதலிடம். 1/2 டீஸ்பூன் சீரகத்தை போட்டு குடி நீரை கொதிக்க வைத்து கொள்ளுங்கள் அல்லது ஒரு லிட்டர் நீரில் 1 ஸ்பூன் சீரகத்துடன் கடுக்காய் பொடியையும் ஒரு சிடிகை சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்க வைத்து வடிகட்டி வைத்து கொள்ளுங்கள். அதை தேவைப்படும் போது குடியுங்கள். அதே போல் அரை ஸ்பூன் சீரகத்துடன் 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி, தேன் சேர்த்து குடித்தால் சுவையாகவும் இருக்கும், மருந்தாகவும் இருக்கும்.

17. உறைந்த நிலை உணவுகள்
குமட்டல்/வாந்தி வந்தால், இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் ஐஸ் கிரீம் சாப்பிடுங்கள். இரண்டு/மூன்று ஸ்பூன் தான் இரண்டு/மூன்று கப் அல்ல. பழங்களில் செய்யப்பட்ட ஐஸ் வகைகளில் இனிப்பு அதிகம் என்பதில் கவனமாக இருங்கள். எதுவுமில்லை என்றால், வெறும் ஐஸ் குயுப்பை எடுத்து, மெதுவாக சப்பி சாப்பிடுங்கள். குமட்டல்/வாந்தி கட்டுபடும்.

18. கிராம்பு
கிராம்பு ஒரு இன்ச் நீளத்திற்கு ப்ரெளன் நிறத்தில் இருக்கும், கொஞ்சம் மயக்க மருந்து குணமும், கொஞ்சம் கிருமி நாசினி குணமும் உடையது. 2 (அ) 3 கிராம்பு எடுத்து சாப்பாட்டிற்கு பிறகு டீயில் கலந்து குடிக்கலாம்.

19. புதினா
மசக்கையினால் ஏற்படும் வாந்தி/குமட்டலுக்கு புதினா டீ ஒரு சிறந்த மருந்து என்பது நாம் அனைவரும் அறிந்தது தானே. ஒரு ஸ்பூன் உலர்ந்த பொதினா இலைகளை 225மிலி தண்ணீரில் போட்டு, 20-30 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம். அல்லது புதினா இலைகளை அப்படியே பச்சையாகவே, உங்களுக்கு குமட்டல் ஏற்படுகிறது என்றால், சாப்பிடலாம். அதே போல் புதினா, எலுமிச்சை கலந்து தயாரிக்கப்பட்ட ஜுஸ் கூட நல்லது தான்.

20. உருளைக்கிழங்கு சிப்ஸ்
என்னது உருளைக்கிழங்கு சிப்ஸா? என்னங்க இது, நீங்க தான் எண்ணெய்யில் பொரித்த உணவு வேண்டாம்னு சொன்னீங்க? ஆனா இப்ப!!! ஆமாம். ஆனால் 5-10 உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டா ஒண்ணும் ஆகி விடாது. உருளைக்கிழங்கு சிப்ஸ் நமது நாக்கில் எச்சிலை ஊரும்படி தூண்டும். இது வாந்தி/குமட்டலை குறைக்கும். லிமிட்டா உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடணும். இப்போது தான், உருளைக்கிழங்கு சிப்ஸின் பல்வேறு அவதாரங்கள் மார்கெட்டில் கிடைக்கிறதே.. அதில் காரம், மசாலா, சீஸ் தடவிய வகைகளை தவிர்த்து விட்டு உப்பு தடவிய வகைகளை எடுத்து கொள்ளலாம்.

21. அர்த்த ராத்திரி தீனி!!
அர்த்த ராத்திரி தீனி மற்றவர்களுக்கு ஆகாது, ஆனால் மாசமான பெண்களுக்கு மட்டும் இது நன்மை பயக்கும். இரவில் கலோரி குறைந்த அயிட்டங்களை சாப்பிடுவது நல்லது. பொதுவாக சூடான பால், கலோரி குறைந்த யோகர்ட் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் பால் பொருட்களில் இயற்கையிலேயே உள்ள அமிலநீக்கி தன்மை, இரவில் தூங்கும் போதே வயிற்றை சம நிலை படுத்தும். அதேபோல் சிறிதளவு பழங்கள், முந்திரி, பாதாம் போன்றவற்றையும் சாப்பிடலாம். இதனால் காலையில் எழுந்தவுடன் வரும் மசக்கை பிரச்சினையை தவிர்க்கலாம்.

22. அதிமதுரம்
அதிமதுர டீ கொஞ்சமா குடிப்பது நல்லது. ஆராய்ச்சிகள், அதிமதுர டீ பலவிதமான வயிறு கோளாறுகளை சரிசெய்யவல்லது என்கிறது. ஆகவே உங்கள் விருப்பம் போல அதிமதுர டீ லைட்டாகவோ ஸ்ட்ராங்கவோ குடியுங்கள். அதே போல் அதிமதுர சாக்லேட், அதிமதுர ஜுஸ் கூட சாப்பிடுவது நல்லது.

23. பிஸ்கெட்டுகள்
ஆமாம். மசக்கை குமட்டலை தவிர்க்க பிஸ்கெட்டுகள் கூட சாப்பிடலாம். பிஸ்கெட்டுகள் மிக எளிமையாக ஜீரணமாவதுடன் பசியையும் கட்டுபடுத்தும். 2 (அ) 3 பிஸ்கெட்டுகளுடன் இஞ்சி/தேன் கலந்த டீ சாப்பிடுவது மிகவும் நல்லது. பிஸ்கெட்டுகளை கைவசம் எப்போது வைத்திருங்கள். எப்போது வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். இதில் கலோரி குறைந்த பிஸ்கெட்டுகளை தேர்ந்தெடுங்கள். உப்பு பிஸ்கெட்டுகள், கோதுமை பிஸ்கெட்டுகளும் சிறந்தவையே.

24. மாங்காய்
ம்ம்ம்ம். மசக்கைக்கு மாங்காய், நாம் தலைமுறை தலைமுறையாக கண்டுவந்த சிறந்த தீர்வு. அப்படியே மரத்திலேர்ந்து மாங்காயை பரித்து, பத்த போட்டு உப்பு போட்டு சாப்பிட்ட….அட அட அட நினைக்கும் போதே நாக்கில் நீர் ஊர்கிறதே.. உங்களுக்கு அது பிடிக்காது என்றால் புளிப்பு மிட்டாய் மாங்காய் சுவையில் கிடைக்கிறதே.. அதை சாப்பிட்டு பாருங்கள்.. ஆனால் டாக்டர் அறிவுரைபடி சாப்பிடுங்கள்.அதிகமாக சாப்பிடாதீர்கள்.
25. மாதுளை
மாதுளை காண்பதற்கு மட்டுமல்ல, சுவையிலும் அதற்கு நிகரில்லை அல்லவா!! மாதுளையை ஜூஸாக குடிக்கலாம் அல்லது ஒரு கை மாதுளை முத்துகளை தேனுடன் கலந்தும் சாப்பிடலாம். அது போக மாதுளை முத்துகளை அப்படியே ஒரு பாத்திரத்தில் போட்டு , பக்கத்திலேயே வைத்து கொள்ளுங்கள். அப்போ அப்போ கொஞ்சம் வாயில் போட்டு கொள்ளுங்கள். மசக்கைக்கு சிறந்த மருந்த அல்லவா?

மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளில் உங்களுக்கு எது சரிபட்டு வருமோ அதை எடுத்துகொள்ளுங்கள். ஏனெனில், ஒருவருக்கு சரிபட்டு வருவது, மற்றவருக்கு சரிபடாமல் போகலாம். அதானால், மசக்கையில் அவஸ்தை படாமல், கர்ப்பகாலத்தை ரசித்து வாழுங்கள்!! ஆணோ பெண்ணோ, நல்லபடியா குழந்தைகளை பெற்று இன்பம் அடைவீர்!!!