இங்கு பிரசவத்திற்கு பின் ஏன் யோனி அதிகமாக வறட்சியடைகிறது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கர்ப்பம் பெண்களின் உடலில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தும். இக்காலத்தில் பெண்களின் உடற்பகுதி மாற்றங்களுடன், பல அழுத்தத்திற்கும் உட்படும். அதேப் போல் பிரசவத்திற்கு பின் ஏற்படும் திடீர் மாற்றங்களால் பெண்கள் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அப்படி பெண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் அந்தரங்க பகுதியில் ஏற்படும் வறட்சி. இப்பகுதியில் ஏற்படும் வறட்சி பெரும் பிரச்சனையாக இருக்காவிட்டாலும், துணையுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். இக்கட்டுரையில் இப்பிரச்சனைக் குறித்த சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உண்மை #1 கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் அளவுகள் அதிகமாக இருக்கும். பிரசவத்திற்கு பின் இந்த ஹார்மோன்களின் அளவு சட்டென்று குறைந்துவிடும். அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில், ஈஸ்ட்ரோஜென் அளவு இன்னும் குறையும்.
உண்மை #2 ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதற்கும், வறட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். பொதுவாக ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன், அந்தரங்க பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, யோனிப் பகுதியில் வறட்சி ஏற்படாமலும் தடுக்கும். எனவே தான் ஈஸ்ட்ரோஜென் அளவு குறையும் போது, வறட்சி, மிகுதியான உடல் சூடு போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது.
உண்மை #3 பிரசவத்திற்கு பின் பெண்களின் அந்தரங்க பகுதி அதிக வறட்சி அடைவதற்கு மற்றொரு காரணம், தைராய்டு சுரப்பியில் ஏற்பட்டுள்ள அழற்சி/காயம் தான் காரணம். தைராய்டு சுரப்பியில் அழற்சி ஏற்படும் போது, அது தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை பாதித்து, யோனி வறட்சி, மன இறுக்கம், எரிச்சல், உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்தும். உண்மை #4 எவ்வளவு காலம் இப்பிரச்சனை இருக்கும்? இந்த பிரச்சனையானது தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பின் போய்விடும்.
உண்மை #5 யோனியில் ஏற்படும் வறட்சிக்கு இயற்கை வழியில் தீர்வு காண நினைத்தால், உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். அதோடு, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரோட்டீன்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
உண்மை #6 போதிய அளவு கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளான சால்மன், டூனா, சூரியகாந்தி விதை, பூசணி மற்றும் எள் விதைகளை உட்கொள்வதன் மூலம், யோனியில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.
உண்மை #7 செலரி, நட்ஸ், ஆப்பிள், செர்ரி, சோயா, பருப்பு வகைகளில் உள்ள ஐசோ-ஃப்ளேவோன்கள் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை சீராக்கும். ஆகவே பிரசவத்திற்கு பின் பெண்கள் இந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.