Home ஆரோக்கியம் பிலோனிடல் சைனஸ் (Pilonidal Sinus)

பிலோனிடல் சைனஸ் (Pilonidal Sinus)

1254

பிலோனிடல் சைனஸ் என்பது பிட்டத்தின் பிளவுப் பகுதியில் சருமத்தில் உருவாகும் சிறிய துளையாகும்.

இந்தத் துளையில் பெரும்பாலும் முடி நிறைந்திருக்கும். இதில் கட்டி போல் ஏதேனும் உருவாகும்போது அது பிலோனிடல் சிஸ்ட் (கட்டி) எனப்படுகிறது.

தோலுக்கு அடியில், ஒன்றுக்கு மேற்பட்ட துளைகள் குழாய் போன்ற அமைப்பால் இணைந்திருக்கலாம்.

காரணங்கள்

பிலோனிடல் சைனஸ் உருவாவதற்கான காரணம் என்ன என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. எனினும், பிட்டங்களின் நடுப்பகுதியில் தோலில் முடி உள்நோக்கி வளர்வது இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பின்வரும் நபர்களுக்கு பிலோனிடல் சைனஸ் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது:

அதிக உடல் எடை கொண்டவர்கள்
அந்தப் பகுதியில் அடிபட்டவர்கள், அல்லது எரிச்சல் உள்ளவர்கள்
உடலில் அதிக முடி உள்ளவர்கள், குறிப்பாக சிக்கலான சுருட்டை முடி உள்ளவர்கள்
அறிகுறிகள்

பிலோனிடல் சைனஸ் இரண்டு பிட்டங்களுக்கும் இடைப்பட்ட பிளவுப் பகுதியில், தோலின் மேற்பகுதியில், துளை அல்லது குழாய் போன்று காணப்படும். விரல்களுக்கு இடையிலும், தொப்புளிலும் இது உண்டாகலாம்.

நோய்த்தொற்று பாதிக்கும் வரை, அறிகுறிகள் எதுவும் காணப்படுவதில்லை. நோய்த்தொற்று ஏற்பட்டதும், சீழ் நிறைந்த கொப்புளம் போன்ற கட்டி உருவாக்கி (வலி நிறைந்ததாக இருக்கும்) பின்வரும் அறிகுறிகள் ஏற்படலாம்:

வலி
தோலுக்கு அடியில் மென்மையான வீக்கம்
தோல் சிவத்தல்
துளையிலிருந்து சீழ் வருதல்
சைனஸ் பகுதியிலிருந்து இரத்தம் வருதல்
அரிதாக, காய்ச்சல் இருக்கலாம்
இந்த அறிகுறிகள் ஒரு சில நாட்களில் வேகமாகத் தீவிரமடையலாம். வலி மிக அதிகமாக இருக்கலாம், சிகிச்சையளிக்காவிட்டல் மிகவும் மோசமாகலாம். நிம்மதியாக உட்கார முடியாது, படுக்க முடியாது, தூங்குவதிலும் சிரமம் இருக்கலாம். உங்கள் தினசரி செயல்களைச் செய்ய முடியாத அளவிற்கு வலி அதிகமாக இருக்கலாம்.

நோய் கண்டறிதல்

பிலோனிடல் சைனஸ் வழக்கமாக உருவாகும் இடத்தை வைத்தும், அதன் தோற்றத்தை வைத்தும் மருத்துவர் அதனை உறுதிப்படுத்த முடியும். சிலசமயம், இந்தப் பிரச்சனையை உறுதிப்படுத்த, தோல் திசுப்பரிசோதனை செய்ய வேண்டியிருக்கலாம்.

சிகிச்சை

சில சமயம், பிலோடினல் கட்டி தானாகவே சரியாகிவிடும். அதனால் எதுவும் பிரச்சனை இல்லையெனில், அதற்கு சிகிச்சை தேவையில்லை. அந்தப் பகுதியை சுத்தமாகவும், முடியில்லாமலும் பார்த்துக்கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்துவார். 2-3 வாரங்களுக்கு ஒரு முறை ஷேவிங் செய்து அகற்றலாம் அல்லது அதற்கான ஹேர் ரிமூவல் தயாரிப்புகளைப் பயன்படுத்தி அகற்றலாம்.

நீண்டநாட்களாக, அழற்சியுடன் காணப்படும் கட்டிகளை (சீழ் நிறைந்தவை) அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுகின்றன. இதன்மூலம் வலியும் அழற்சியும் குறைக்கப்படுகிறது. சில சமயம், சீழ்க் கட்டியை முழுதுமாகத் திறந்து, ரோமங்களும் தோல் துணுக்குகளும் முழுவதுமாக அகற்றப்படுகின்றன.

சிக்கலான, பல காலமாக நீடித்திருக்கின்ற அல்லது மீண்டும் மீண்டும் வருகின்ற பிலோடினல் சைனசாக இருந்தால், அறுவை சிகிச்சை மூலமே அதனை அகற்ற வேண்டியிருக்கும். முதலில் சைனஸ் குழியை சுரண்டி ரோமங்களை அகற்றுகின்றனர். பிறகு வழக்கத்திற்கு மாறாக இருக்கும், புண் ஆறிய தோல் துணுக்குகளும் அகற்றப்படுகின்றன. அதன் பிறகு, காயம் ஆறி தோல் கூடுவதற்காக, கட்டு போடப்படும் அல்லது ஸ்கின் ஃப்ளாப் அணிவிக்கப்படும்.

தடுத்தல்

பிட்டங்களுக்கு இடைப்பட்ட பிளவுப் பகுதியை தினமும் மென்மையான சோப்பு போட்டு கழுவதன் மூலம் பிலோநிடல் சைனஸ் மீண்டும் மீண்டும் வருவதைத் தடுக்கலாம். அதே சமயம் கழுவும்போது சோப்பு முழுவதும் போகும்படி கழுவ வேண்டும், பிறகு நன்கு உலரவிட வேண்டும். நீண்ட நேரம் உட்காருவதைத் தவிர்க்க வேண்டும்.

சிக்கல்கள்

பிலோனிடல் சைனசால் ஏற்படக்கூடிய சிக்கல்களில் சில:

காயத் தொற்று
அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பிலோனிடல் சைனஸ் வருவது
அடுத்து செய்ய வேண்டியவை

உங்களுக்கு பிலோனிடல் சைனஸ் இருப்பதாக உறுதியானால், என்னென்ன சிகிச்சைகள் உள்ளன என்பது பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து, அவரது அறிவுரையின்படி கவனமாகச் செயல்படவும். தேவையற்ற ரோமங்களை அடிக்கடி அகற்ற வேண்டும், மென்மையான சோப்பு போட்டு கழுவ வேண்டும்.