Home உறவு-காதல் செல்போனால் சீர்குலையும் உறவுகள்!

செல்போனால் சீர்குலையும் உறவுகள்!

17

தினமும் செல்போன்களைவிட்டு விலகி, குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் ஆனந்தமாக பேசவும், குடும்ப பிரச்சினைகளை தீர்க்கவும் நேரம் ஒதுக்க வேண்டும்.

உறவுகளை சீர்குலைக்கும் செல்போன்

தகவல் தொடர்பு சாதனத்தில் இன்றியமையாததாக இருப்பது செல்போன். இன்றைக்கு இதை பயன்படுத்தாதவர்களே இல்லை. சாதாரண செல்போன்கள், எக்கச்சக்க பயன்பாடுகளை தரும் ‘ஆன்ட்ராய்டு’ செல்போன்களாக உருமாறிவிட்டன.
ஒரு குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் செல்போன் வைத்து இருக்கிறார்கள். ஆண்களும், பெண்களும், கல்லூரி, மாணவ-மாணவிகளும் விலை அதிகமுள்ள செல்போன்களை யார் வைத்து இருக்கிறார்களோ அவர்களை பிரமிப்பாக பார்ப்பதால், புதியவரவு செல்போன்களை வாங்க கடைகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

முன்பு புதிய, புதிய நகைகள், புதிய ஆடைகள் அறிமுகம் ஆகும்போது அதனை வாங்குவதற்காக கடைகளுக்கு பெண்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் இப்போது நவீன செல்போன்களை வாங்குவதற்கு கடைகளில் கூட்டம் குவிகிறது.

ஏராளமான பயன்பாடுகளை தரும் செல்போன்களால், குடும்ப சிக்கல்களும் உருவாகி வருகிறது. ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் முகநூலிலும், வாட்ஸ்-அப்பிலும் வெளிநபர்களை தொடர்பு கொள்வதும், குடும்ப உறுப்பினர்களிடம் முகம்கொடுத்து பார்க்கவோ, பேசவோ இல்லாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்படுகிறது.

கணவன் ஒரு பெண்ணிடம் பேசினாலோ அல்லது மனைவி ஒரு ஆணிடம் பேசினாலோ சந்தேகம் வலுத்து விவாகரத்துவரை சென்றுவிடுகிறது. இதுஒருபுறம் இருக்க, குழந்தைகள் நள்ளிரவுவரை செல்போன்களை பயன்படுத்துவதால் அவர்களின் கல்வி கற்கும் திறன் குறைந்து வருகிறது. சிறுவயது குழந்தைகள் கூட ஆபாச படத்தை பார்க்கும் அவலநிலையும் நீடிக்கிறது.

ஏற்கனவே, நீல திமிங்கலம் என்ற விளையாட்டு, ஏராளமானோரை தற்கொலைக்கு தூண்டியது. இப்போது புதிதாக ‘போகிமேன் கேம்’ என்ற செல்போன் விளையாட்டு குழந்தைகளை பாதிக்க தொடங்கி இருக்கிறது. இந்த கேமை ஆன் செய்துவிட்டு வீட்டைவிட்டு வெளியில் எவ்வளவு தூரத்துக்கு செல்கிறோமோ அதற்கு தகுந்த புள்ளிகள் கிடைப்பதால் 10 வயது குழந்தைகள் பெற்றோரிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு தனியாக நீண்டதொலைவுக்கு செல்கிறார்கள். இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. சில குழந்தைகள் வழி தவறி சென்று வீட்டுக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் நிலையும் உருவாகிறது.

மது பழக்கத்துக்கு ஆளானவர்கள் மீள முடியாமல் தவிப்பதை போன்று செல்போன் என்ற போதையில் சிக்கி மக்கள் தவிக்கின்றனர். வீடுகளில் மட்டுமின்றி தெருக்கள், கடைகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் என்று அனைத்து இடங்களிலும் செல்போனில் பேசியபடி அல்லது செல்போனை பயன்படுத்தியபடி திரிகிறார்கள்.

சரி அப்படியானால் செல்போனை எப்படி பயன்படுத்த வேண்டும்? புத்தகத்தை குறிப்பிட்ட நேரம் படிப்பதைபோல் செல்போனை குறிப்பிட்ட நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். போன் பேசுவதை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீண்டநேரம் இரவில் செல்போனில் குடும்பத்தினர் மூழ்கி கிடக்காமல் குறைந்தது 7 மணிநேரமாவது தொடர்ச்சியான தூக்கத்துக்காக செல்போனை விட்டு விலகி இருக்க வேண்டும்.

தேவை ஏற்படும் வரை பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தேவையில்லாதவர்களின் படங்களையும், ஆபாச படங்களையும் பதிவிறக்கம் செய்து வைக்க கூடாது. ஏனென்றால், பெற்றோரின் செல்போனை பார்க்கும் குழந்தைகள் தேவையற்ற படங்களையும் பார்க்கும் நிலை ஏற்படலாம்.

முகநூல், வாட்ஸ்-அப்பில் வதந்திகள் ஏராளம் பரப்பப்படுவதால், தங்களுக்கு வரும் தகவல்களை உறுதி செய்யாமல் அப்படியே மற்றவர்களுக்கு பகிரக்கூடாது. தினமும் செல்போன்களைவிட்டு விலகி, குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் ஆனந்தமாக பேசவும், குடும்ப பிரச்சினைகளை தீர்க்கவும் நேரம் ஒதுக்க வேண்டும்.

‘கணவர் என்னிடம் பேசுவதில்லை. செல்போனில்தான் அதிகநேரம் பேசுகிறார்’ என்று மனைவி குற்றச்சாட்டு கூறும் நிலை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் செல்போனை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு திசைக்கு சென்றால், குடும்பமும் திக்கற்ற திசையை நோக்கி சென்றுவிடும். எனவே செல்போனை அளவோடு பயன்படுத்தி குடும்பத்தில் சிக்கல் வராமல் பாதுகாப்போம்.