Home பெண்கள் பெண்குறி பெண்ணுறுப்பின் நோய்த்தொற்று பற்றி அறிந்துகொள்ள

பெண்ணுறுப்பின் நோய்த்தொற்று பற்றி அறிந்துகொள்ள

43

ட்ரைக்கோமோனியாசிஸ் என்பது என்ன?
ட்ரைக்கோமோனியாசிஸ் என்பது ஒரு பால்வினை நோயாகும். இது ட்ரைக்கோமோனாஸ் வேஜினலிஸ் எனப்படும் ஒரு செல் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய்த்தொற்றாகும். இதை “ட்ரிச்” என்றும் அழைக்கப்படுகிறது. இதை சிகிச்சையால் குணப்படுத்த முடியும்.
இந்த நோய்த்தொற்று ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக வருகிறது. இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில், பெண்களின் பல்வேறு பிரிவினரில் 1.2% முதல் 28.5% பேருக்கு இந்த நோய்த்தொற்று இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

காரணங்கள்
ட்ரைக்கோமோனாஸ் வேஜினலிஸ் ஒட்டுண்ணியானது பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து பாலியல் தொடர்பின் மூலம் மற்றவருக்குப் பரவுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ளும் மற்ற பெண்களுக்கும் இது பரவலாம்.
ஆபத்துக் காரணிகள்
பலருடன் உடலுறவு வைத்துக்கொள்ளுதல்
இதற்கு முன்பு பால்வினை நோய்களால் பாதிப்படைந்திருப்பது
ஆணுறையைப் பயன்படுத்தாமல் உடலுறவில் ஈடுபடுதல்
அறிகுறிகள்
பாதிக்கப்பட்ட நபர்களில் 70% பேருக்கு, இந்த நோய்த்தொற்று வந்தால் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை.
பெண்களுக்கு பின்வரும் அறிகுறிகள் தென்படலாம்:
யோனியில் அரிப்பு
பெண்ணுறுப்பு இதழ்களில் அரிப்பு
யோனி நாற்றம் (துர்நாற்றம்)
வெள்ளைப்படுதல் (பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் நுரை கலந்த திரவம்)

சிறுநீர் கழிக்கும்போது அல்லது உடலுறவின்போது வலி
ஆண்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டு, அறிகுறிகள் இருந்தால் பின்வரும் அறிகுறிகள் தென்படலாம்:
சிறுநீர் கழித்த பிறகு அல்லது விந்து வெளியேறிய பிறகு ஆணுறுப்பிற்குள் எரிச்சல்
ஆண்குறியிலிருந்து ஏதேனும் (திரவ அல்லது ஜெல் நிலையில்) வெளியேறுதல்
மொட்டுத் தோலழற்சி
சில சமயம், புரோஸ்டேட் சுரப்பி வீக்கமடைதல் (புரோஸ்டேட்டைட்டிஸ்)
எப்பிடிடிமிஸ்: விந்தணுக்களைக் கொண்டு சென்று சேகரிக்கும் குழாயில் ஏற்படும் அழற்சி
நோய் கண்டறிதல்
ட்ரைக்கோமோனியாசிஸ் நோய்த்தொற்று பின்வரும் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது:
கீழ் இடுப்புப் பகுதி பரிசோதனை: பெண்களில், கருப்பை வாய்ப் பகுதியிலோ பெண்ணுறுப்பின் சுவர்ப்பகுதியிலோ சிவப்புத் திட்டுகள் ஏற்படலாம்.
ஆண்களுக்கு, ஆண்குறியில் அழற்சியின் அறிகுறிகள் அல்லது அடையாளங்கள் ஏதேனும் உள்ளதா என்றும் ஏதேனும் வெளிவருகிறதா என்றும் மருத்துவர் ஆய்வு செய்வார்.
காட்டன் ஸ்வேப்: பெண்ணுறுப்பில் வெளியேறும் திரவத்தைப் பகுப்பாய்வு செய்தால் நோய்த்தொற்று இருப்பதை உறுதிப்படுத்த முடியும். இந்த மாதிரியில் ஒட்டுண்ணி இருப்பதைக் கண்டறிய ஒரு வாரம் வரை ஆகலாம்.
புதிய ஆன்டிஜென் மற்றும் துரித சோதனைகளும் செய்யப்படலாம்.

பெண்களுக்கு ட்ரைக்கோமோனியாசிஸ் இருந்தால், அவர்களுடைய இணையர்களுக்கும் சோதனை செய்யப்படலாம். உங்களுக்கு ட்ரைக்கோமோனியாசிஸ் இருப்பதாக சோதனையில் தெரியவந்தால், மற்ற பால்வினைநோய்கள் இருக்கிறதா என்றும் பரிசோதனை செய்யப்படலாம்.
சிகிச்சை
ட்ரைக்கோமோனியாசிஸ் நோய்த்தொற்றுக்கு வழக்கமாக அளிக்கப்படும் சிகிச்சையில், வாய்வழி எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் (மெட்ரோனிடசோல் அல்லது ட்ரினிடசோல்) பரிந்துரைக்கப்படும். ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகு 24-72 மணி நேரத்திற்கு மது அருந்தக்கூடாது என்று மருத்துவர் அறிவுறுத்துவார். ஏனெனில் இந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகு ஆல்கஹால் எடுத்துக்கொண்டால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படலாம், அவற்றில் சில:
குமட்டல்
வாந்தி
அடிவயிற்றில் வலி
தடுத்தல்
ட்ரைக்கோமோனியாசிஸ் நோய்த்தொற்றைத் தடுக்க உதவும் சில வழிமுறைகள்:
பாலியல் செயல்பாடுகளைத் தவிர்த்தல்
உடலுறவின்போது லேட்டக்ஸ் ஆணுறைகளைப் பயன்படுத்துதல்
உங்களுக்கும் உங்கள் இணையருக்கும் பால்வினை நோய்கள் எல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுதல்
சிக்கல்கள்
இந்த நோய்த்தொர்றினால் பிற பல்வேறு பால்வினை நோய்கள் ஏற்படலாம். இந்த நோய்த்தொற்றால் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் அழற்சியால் HIV தொற்றும் அபாயமும் அதிகரிக்கிறது.
ட்ரைக்கோமோனியாசிஸ் நோய்த்தொற்றும் கர்ப்பமும்
கர்ப்பமாக இருக்கும் காலத்தில் ட்ரைக்கோமோனியாசிஸ் நோய்த்தொற்று ஏற்பட்டால், பல அபாயங்கள் நேரலாம், அவற்றில் சில:

குறைப்பிரசவம்
குழந்தை குறைந்த எடையுடன் பிறத்தல் (<2.5 கிலோ / 5.5 பவுண்டு) நீங்கள் கர்ப்பமாக இருந்து, உங்களுக்கு ட்ரைக்கோமோனியாசிஸ் நோய்த்தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும். அடுத்து செய்ய வேண்டியவை உங்களுக்கு ட்ரைக்கோமோனியாசிஸ் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால், உங்கள் இணையருக்கும் அதே நோய்த்தொற்று உள்ளதா என பரிசோதனை செய்துகொள்ளவும், அத்துடன் மருத்துவர் அறிவுறுத்தும்படி சரியான தேதிகளில் தொடர்ந்து மருத்துவரைச் சந்தித்து அவரது அறிவுறுத்தலின்படி செயல்படவும்.