சுய இன்பம் (பாலியல் இன்பநிலை அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதற்காக தானாகவே பிறப்புறுப்புகளைத் தூண்டுதல்) என்பது மனிதர்களின் அடிப்படையான ஒரு பாலியல் சார்ந்த செய்கையாகக் கருதப்படுகிறது. இருப்பினும் சுய இன்பம் என்பது சமூகக் களங்கமாகவும் கருதப்படுகிறது. பல மதங்கள் இதை ஏற்கத்தகாத ஒன்றாகவே பார்க்கின்றன.
வயது வந்த பருவத்தில் பெண்கள் பொதுவாக, தங்கள் கிளிட்டோரிஸ் அல்லது அருகில் உள்ள பகுதிகளைத் தேய்ப்பதன் மூலம் சுய இன்பம் அடைகிறார்கள். இளம்பருவத்தில் பெரும்பாலும் காணப்படுகிற ஒரு பாலியல் ரீதியான இரண்டாவது செயல்பாடாக உள்ளது.
பெண்கள் அவ்வப்போது சுய இன்பம் செய்கிறார்கள். பாலியல் ஆரோக்கியம் மற்றும் நடத்தை குறித்த தேசிய கருத்துக்கணிப்பின்படி (நேஷனல் சர்வே ஆஃப் செக்ஷுவல் ஹெல்த் அன்ட் பிஹேவியர் (NSSHB)), 14 முதல் 17 வயதுடைய இளம் பருவத்தினரில், 48% பெண்களும் 73% ஆண்களும் சுய இன்பம் செய்துள்ளனர்.
பெண்கள் சுய இன்பம் அடையும் முறை என்ன?
பெண்கள் சுய இன்பம் செய்வதற்கு பல வகையான முறைகளைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் கைகைளைக் கொண்டு பெண் குறியைச் சுற்றிலும் உள்ள மேட்டுப் பகுதிகளிலும் கிளிட்டோரிஸ் பகுதியிலும் முன்னோக்கியும் பின்னோக்கியும் தேய்த்தல், வட்ட வடிவத்தில் தேய்த்தல் அல்லது மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் தேய்த்தல் மூலம் சுய இன்பம் செய்கிறார்கள். சிலர் கிளிட்டோரிஸ் பகுதியில் தலையணை அல்லது மெத்தை போன்ற பொருள்கள் அழுத்தும்படி செய்வதன் மூலம் செய்கின்றனர். சில பெண்கள் இரண்டு தொடைகளையும் இறுக்கமாக ஒன்றின் மீது ஒன்றை அழுத்துவதன் மூலம், இடுப்பின் அடிப்பகுதித் தசைகள் இறுக்கமடையும்படி செய்வதன் மூலம் சுய இன்பம் செய்கிறார்கள். சிலர் பெண்ணுறுப்பிற்குள் விரல்கள் அல்லது பாலியல் சாதனங்களை (செக்ஸ் டாய்ஸ்) நுழைத்து தசைகளைத் தூண்டி சுய இன்பம் செய்கிறார்கள்.
சுய இன்பத்தின் நன்மைகள் என்னென்ன?
வளரிளம் பருவத்தினரின் உளவியல் ரீதியான வளர்ச்சியில் சுய இன்பம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. சுய இன்பம் செய்வதன் மூலம் தனக்கு எது திருப்தியளிக்கிறது என்பதை ஒருவர் தெரிந்துகொள்ள முடிகிறது. பெண்கள் தமது உடலைப் பற்றியும் பாலியல் தொடர்பான விருப்பங்கள் பற்றியும் அறிந்துகொள்ளவும் தமது இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளவும் இது பயன்படும் என்று பாலியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். தனது உடலில் பாலியல் தூண்டுதல்களுக்கான பதில் உணர்ச்சிகள் எப்படி உள்ளன என்பது பற்றியும் எந்தப் பகுதிகளைத் தூண்டுவதால் இன்பம் கிடைக்கிறது என்றும் அறிந்துகொள்ளவும் சுய இன்பம் உதவுகிறது.
வளரிளம்பருவத்தில் உள்ளவர்கள் வயது வந்தவர்களாக இருந்தாலும், மனதளவில் போதுமான முதிர்ச்சி இருக்காது என்பதால், இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பாலியல் உறவுக்கு பதிலான ஆரோக்கியமான மாற்றுத் தீர்வாக சுய இன்பம் இருக்கலாம். பாலியல் ரீதியான மன இறுக்கத்தில் இருந்து விடுபட ஒரு வடிகாலாகவும் சுய இன்பம் அமையக்கூடும். பலருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதால் தேவையற்ற கர்ப்பம், பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகள் போன்ற ஆபத்துகளுக்கு வாய்ப்புள்ளது இதற்குப் பதிலான மாற்றுத் தீர்வாகவும் சுய இன்பம் உள்ளது.
பெண்கள் தங்கள் உடலைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை அடைய சுய இன்பம் உதவக்கூடும். பெண்கள் தமது உடலைப் பற்றி நல்ல அபிப்ராயம் கொண்டிருப்பதற்கும், சுயமாக இன்பம் அடையும் செயல்களுக்கும் இடையே சாதகமான தொடர்பு இருப்பதாக சில ஆராய்ச்சிக் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. ஒருவர் தனது உடலைப் பற்றியும், தனக்கு எது இன்பமளிக்கிறது என்பது பற்றியும் தெரிந்துகொண்டதும் அவர்கள் எவரையும் சார்ந்திருக்காத நிலையையும் உடல் ரீதியான ஒரு முழுமைத் தன்மையையும் அடைகின்றனர். இதனால் அவர்களின் சுய மதிப்பும் அடையாளமும் மேம்படுகிறது.
சுய இன்பம் அடைவதற்கு ஒருவர் முயற்சி செய்வதற்கு, உடலுறவுக்கான துணை இல்லை என்பது மட்டுமே எப்போதும் காரணமாக இருப்பதில்லை. திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களில் சுமார் 70% பேர் சுய இன்பம் செய்கின்றனர், குறைந்தபட்சம் எப்போதாவது செய்கின்றனர். ஒருவருடன் உறவில் இருக்கும்போது, பாலியல் ரீதியான விருப்பங்கள் ஒத்துப்போகாத நிலையில் அதனால் ஏற்படும் உளைச்சல்களில் இருந்து விடுபடவும் சுய இன்பம் உதவக்கூடும். தம்பதியரில் ஒருவருக்கு பாலியல் உறவில் மற்றொருவரை விட அதிக ஆர்வம் இருக்கலாம் அல்லது சில நாட்களில் ஒருவருக்கு உடலுறவுக்கான மனநிலை இல்லாமல் போகலாம். இது போன்ற சூழ்நிலைகளில், சுய இன்பம் ஒரு வடிகாலாக அமையலாம். உறவில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் சுய இன்பம் அடைய உதவுவதால் அவர்களின் நெருக்கம் அதிகரிக்கலாம். ஒருவருக்கு உடலுறவுக்கான மனநிலை இல்லாதபட்சத்தில், மற்றொருவர் சுய இன்பம் செய்துகொள்ளும்போது அவரை வருடிக்கொடுக்கலாம், முத்தமிடலாம். இப்படியாக நெருக்கத்தை அதிகரிக்கவும் பாலியல் ரீதியான திருப்திக்கும் சுய இன்பம் உதவக்கூடும்.
சுய இன்பத்தால் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் கேடு விளையுமா?
சுய இன்பம் என்பது பாலியல் சார்ந்த ஒரு இயல்பான செயலே ஆகும், இது ஆரோக்கியத்திற்கு எவ்வித தீய விளைவுகளையும் ஏற்படுத்துவதாக இதுவரை அறியப்பட்டதில்லை.
சுய இன்பம் என்பது ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிப்பதல்ல. குற்ற உணர்ச்சி, பயம், மனக்கலக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதுண்டு. ஆனால் இவை இயல்பானவை அல்ல. “சுய இன்பம் என்பது தவறு” அல்லது “உடல் நலத்திற்குக் கேடானது” என்பது போன்ற எண்ணங்களாலேயே இது போன்ற உணர்வுகள் உருவாகின்றன. மதங்களும் பண்பாடுகளும் சுய இன்பம் என்பதைக் கண்டிப்பதுடன் அதனை ஒரு பாவமாக அல்லது குரூரமான செயலாகச் சித்தரித்துள்ளன. இதே போன்ற எண்ணங்கள் பெற்றோர் மனதிலும் பெரியவர்கள் மனதிலும் பதிந்து, குழந்தைகள் வளரும்போது, சுய இன்பம் பற்றி ஒருவர் குற்ற உணர்ச்சி அடைகிறார். இது பொதுவாக பலரிடம் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி, சுய இன்பம் செய்வதால் உடல் நலம் கெட்டுப்போகும், உடல் பலவீனமடையும் அல்லது பிற உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்பது போன்ற தவறான தகவல்களால் பயமும் மனக்கலக்கமும் ஏற்படக்கூடும். சுய இன்பம் சம்பந்தமாக நிலவிவரும் தவறான கருத்துகளையும் நம்பிக்கைகளையும் அகற்றி, சுய இன்பம் என்பது இயல்பான ஒரு செயல்தான் என்று வளரிளம் பருவத்தினருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும், அதற்கு பாலியல் கல்வி மிகவும் முக்கியம் என்று பாலியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அதிகமாக சுய இன்பம் செய்தல் என்பது மற்றொரு பொதுவான பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. அதீதமான சுய இன்பம் என்பதற்கான வரையறை எதுவும் இல்லை. ஒருவர் அளவுக்கு அதிகமாக முறை சுய இன்பம் செய்தால், அது வாழ்வின் சில அம்சங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம், அதுவே கவலையாக மாறலாம். மாற்றிக்கொள்ள முடியாத வழக்கமான பிற பழக்கங்களைப் (கம்பல்சிவ் பிஹேவியர்) போலவே மீண்டும் மீண்டும் சுய இன்பம் செய்வது உங்கள் வாழ்வில் குறுக்கிடலாம். இது போன்ற சூழ்நிலைகளில் அது வேறு ஏதோ பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். உதாரணமாக, அதிக மனக்கலக்கம் உள்ளவர் அதிலிருந்து விடுபடுவதற்காக சுய இன்பத்தை ஒரு வடிகாலாகப் பயன்படுத்தலாம். இந்தச் சூழ்நிலையில் இதற்குக் காரணமாக இருக்கும் மனக்கலக்கத்தை சரி செய்ய வேண்டும்.
சுய இன்பத்தின் போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கிளிட்டோரிஸ் அல்லது பெண்ணுறுப்புப் பகுதிகளை கடுமையாகத் தேய்க்கவோ அடிக்கவோ கூடாது. அப்படிச் செய்வதால் ஏதேனும் தீங்கு ஏற்படலாம். லேசாகத் தேய்ப்பதால் அல்லது தூண்டுவதால் இப்பகுதிகளில் காயம் ஏதும் ஏற்படாது.
விரல்கள் அல்லது ஏதேனும் பொருள்களை பிறப்புறுப்பில் நுழைக்கும்போது, நோய்த்தொற்று எதுவும் வராமல் தடுக்க, தகுந்த சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். தீங்கு விளைவிக்கும் கிருமிகள் எதுவும் வராமல் தடுப்பதற்கு, கைகளையும் பாலியல் சாதனங்களையும் (செக்ஸ் டாய்ஸ்) சோப்பைப் பயன்படுத்தி வெந்நீரில் கழுவுவது முக்கியம்.
தூண்டுதலை ஏற்படுத்தவோ அல்லது பிறப்புறுப்பில் செருகவோ கூரான அல்லது குத்தக்கூடிய பொருள் எதனையும் ஒருபோதும் நுழைக்கக்கூடாது. அப்படிச் செய்வதால் காயம் ஏற்படலாம். கழன்று விழக்கூடிய சிறு பகுதிகளைக் கொண்ட பொருள் எதனையும் பயன்படுத்த வேண்டாம், அவை கழன்று விழுந்து பிறப்புறுப்பில் சிக்கிக்கொள்ளலாம். பிறப்புறுப்பில் காய்கள் கனிகள் எதனையும் செருக வேண்டாம், இவற்றால் நோய்த்தொற்று (இன்ஃபெக்ஷன்) ஏற்படலாம் அல்லது அவை உள்ளேயே உடைந்து சிக்கிக்கொள்ளலாம்.