பெண்கள் பலரையும் பாடாய்ப் படுத்தும் ஒரு விஷயம் மாதவிலக்கு. சிலருக்கு எளிதாய் கடந்து போய்விடும் அந்த மூன்று நாட்கள். பலருக்கு ஒரு யுகமாக கடக்கிறது. இந்த மாதவிலக்கு இன்னும் சிலருக்கு கூடுதலாக மேலும் சில பிரச்சினைகளை தருகிறது. இதனை ஆங்கிலத்தில் ‘ப்ரீ மென்ஸ்சுரல் சிண்ட்ரோம்‘ என்று அழைக்கிறார்கள். அதாவது மாதவிலக்கு வருவதற்கு முன் பெண்களுக்கு ஏற்படுகிற உடல்நல பிரச்சினைகள்.
பல பெண்களுக்கு மாதவிலக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் படபடப்பு, எரிச்சல், காரணமற்ற கோபம், உடல் எடை அதிகரித்து வயிறு உப்பியது போன்ற எண்ணம், மார்பகம் கனமாக இருப்பது போன்ற உணர்வு, எரிச்சல், உணவு பிடிக்காமல் இருப்பது, தூக்கமின்மை, அழுகை வருவது போன்ற பலவகையான உணர்வுகளுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். இந்த உணர்வுகள் எல்லாம் ‘ப்ரீ மென்ஸ்சுரல் சிண்ட்ரோம்‘ பாதிப்பு என்கிறது மருத்துவம். சிலருக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் மாதவிலக்கு சமயத்திலும் தொடர்கின்றன.
இந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணம் பற்றிய ஆராய்ச்சி இன்றுவரை தொடர்கிறது. இது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகளும் திணறுகிறார்கள். இதில் என்னவொரு வேடிக்கை என்றால் இந்த பிரச்சினையைப்பற்றி அந்தப் பெண்ணின் தாய் மற்றும் சகோதரிகள் கூட புரிந்துகொள்வதில்லை என்பதுதான். ஏன் ஒவ்வொரு மாசமும் இப்படி பிரச்சினை பண்ற என்பதுதான் அவர்களின் பார்வையாக இருக்கிறது.
அந்தப் பெண்கள் ‘பி.எம்.எஸ்.’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மாதவிலக்குக்கு முந்தைய பிரச்சினையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இது நோயல்ல மாதவிலக்குக்கு முந்தைய சமயத்திலும் சிலருக்கு மாதவிலக்கு சமயத்திலும் ஏற்படுகிற சிறிய அளவிலான மன அழுத்தம் என்பதை புரிந்து கொண்டாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.
பொதுவாக மாதவிலக்கு ஏற்படுவதற்கு சில நாட்கள் முன்பாக சாப்பாட்டில் உப்பின் அளவை குறைக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். டென்சன் காரணமாக ரத்த அழுத்தம் உயராமல் இருக்கத்தான் இந்த உப்புக் கட்டுப்பாடு. இதோடு கூட யோகா, தியானம் போன்றவற்றைச் செய்தால் மன அமைதி கிடைக்கும். அந்த சமயத்தில் மன இறுக்கத்தால் தூங்க முடியாமல் அவதிப்படுபவர்கள் மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.
வைட்டமின் குறைபாடு இருந்தால் மட்டும் மருத்துவரின் அறிவுரைப்படி மாதவிலக்கு நாட்களில் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடலாம். நன்றாக சாப்பிடுவது, தூங்குவது என்று மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டாலே மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்களை தவிர்க்கலாம். மாதவிலக்கு முடியும் போது இந்தப் பிரச்சினையும் தானாக மறைந்துவிடும்.