மார்பகத் திசு ஆண்களுக்கும் உள்ளது பெண்களுக்கும் உள்ளது. பெண்களுக்கு, மார்பகங்கள் பால் சுரக்கும் உறுப்பாகவும் இரண்டாம் பாலியல் உறுப்பாகவும் செயல்படுகிறது, ஆகவே பெண்களுக்கு மார்பகங்கள் முக்கியமான அங்கங்களாக உள்ளன.
பெண்ணின் நெஞ்சுப் பகுதியில், கண்ணீர்த்துளியின் வடிவத்தில் அமைந்துள்ள சுரப்பிகளே மார்பகங்கள், இவை நெஞ்சுப் பகுதியின் பெரும் பரப்பை எடுத்துக்கொள்கின்றன. இவை கழுத்துப் பட்டை எலும்புக்கு (க்ளாவக்கல்) சற்று கீழே தொடங்கி விலா எலும்புகளின் மேல் படிந்து உள்ளன (இரண்டாவது விலா முதல் ஆறாவது அல்லது ஏழாவது விலா எலும்பு வரை). கிடைமட்டத்தில், முன் மார்பெலும்பின் விளிம்பில் தொடங்கி அக்குள் (ஆக்சில்லா) வரை அமைந்துள்ளது. மார்பகத்தின் அடிப்பாகம் வட்டவடிவமானது, சுமார் 10-12 சென்டிமீட்டர் விட்டம் உடையது, ஆனால் மார்பகங்களின் வடிவமும் அளவும் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.
கர்ப்பத்தின் 6வது வாரத்திலிருந்து, நமது உடல் வளர்ச்சி தொடங்குகிறது. பிறக்கும்போது, ஆண் மற்றும் பெண் இருபாலரின் மார்பகங்களும் ஒரே மாதிரியே இருக்கும். பெண்கள் பூப்படையும்போது, அவர்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்களே அவர்களின் மார்பகங்கள் வளர்வதற்குக் காரணமாக உள்ளன.
பொதுவாக பெண்களின் இரண்டு மார்பகங்களும் ஒரே சீரான வடிவம் கொண்டவையல்ல. ஒரு மார்பகம் பெரிதாக/சிறியதாக இருக்கலாம், அல்லது மேலே/கீழே அமைந்திருக்கலாம்.
குழந்தை பெறாத இளம் பெண்களுக்கு, மார்பகங்கள் பொதுவாக அரைக்கோள வடிவத்தில் இருக்கும்; குழந்தை பெற்றவர்களுக்கு சற்று அகலமாகவும் தொங்கியும் காணப்படும்; வயதானவர்களுக்கு, மார்பகங்களின் பருமன் குறைந்து, உறுதி குறைந்து, தட்டையாகி தொங்கியபடி இருக்கும். ஒரு மார்பகத்தின் எடை 150 முதல் 225 கிராம் வரை வேறுபடலாம், பால் சுரக்கும் மார்பகத்தின் (பால் நிரம்பிய நிலையில்) எடை 500 கிராமுக்கும் அதிகமாக இருக்கலாம். முலைக்காம்பின் அளவும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
மார்பகத்தின் அமைப்பு (Structure of the Breast)
மார்பகத்தில் சுரப்பிகள், அவற்றுக்குத் துணையாக இருக்கும் இணைப்புத் திசு மற்றும் கொழுப்பு, தசை நாண்கள் (லிகமென்ட்), இரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் லிம்பாட்டிக் நிணநீர் அமைப்பு ஆகியவை உள்ளன.
மார்பகத்தைச் சுற்றிலும் ஒரு கொழுப்பு அடுக்கு (கொழுப்பு நிறைந்த திசு) சூழ்ந்துள்ளது, இதுவே மார்பகத்தின் மிருதுவான தன்மைக்குக் காரணமாக உள்ளது.
மார்பகத்தின் மூன்று முக்கியப் பகுதிகள்:
பால் சுரப்பிகள் (கிலாண்டுலாமம்மாரியா))
முலைக்காம்புத் தோல் (எரோலா மம்மா)
முலைக் காம்பு (பாப்பில்லா மம்மாரியா)
பால் சுரப்பிகள் (லோபுலஸ்) அல்லது லோபி கிலாண்டுலாமம்மாரியா: பதினைந்து முதல் இருபது வரையிலான பால் சுரப்பிகள் வட்ட வடிவில் அமைந்துள்ளன. அவை இணைப்புத் திசு மற்றும் கொழுப்புத் திசுவாலான (அடிப்போஸ் திசு) தனித்தனிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சுரப்பியின் வேலை, பால் சுரப்பதாகும்.
ஒவ்வொரு பால் சுரப்பியின் குழலும் லாக்டிஃபெரோஸ் குழல் என்று அழைக்கப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக முலைக் காம்பில் வந்து திறக்கின்றன. இந்தக் குழல்களே பால் சுரப்பிகளில் இருந்து பாலை முலைக் காம்பிற்குக் கொண்டு வருகின்றன.
முலைக்காம்புத் தோல் : என்பது முலைக் காம்பைச் சுற்றியுள்ள பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறப் பகுதியாகும். இப்பகுதியில் பல எண்ணெய் சுரப்பிகள் உள்ளன. முலைக்காம்புத் தோலும் முலைக்காம்பும் வழவழப்புத் தன்மையுடன் இருக்க இவை உதவுகின்றன.
முலைக்காம்பு : மார்பின் மையப் பகுதியில் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பகுதி முலைக்காம்பு ஆகும், இதன் வழியாகவே பால் வெளிவருகிறது.
கொழுப்பு நிறைந்த இணைப்புத் திசு: இந்தத் திசுக்கள் மார்பகச் சுரப்பிகளையும் குழல்களையும் மூடுகின்றன. இவை மார்பகங்களைப் பாதுகாக்கின்றன, மார்பகங்களுக்கு வடிவம் கொடுக்கின்றன.
தசை நாண்கள்: இவை தோலில் இருந்து மார்பகங்கள் வழியாக, நெஞ்சுப் பகுதியின் தசை வரை செல்கின்றன, இவை மார்பகத்தைத் தாங்கிப் பிடிக்கும் வேலையையும் செய்கின்றன.
நரம்புகள்: மார்பகப் குதியில் பெரும்பாலானவர்களுக்கு அதே மருந்து மற்றும் அப்பகுதியில் உள்ள மார்பு மற்றும் கை பகுதியில் நரம்புகள் இதில் மார்பக பகுதியில், பல முக்கிய நரம்புகள் உள்ளன. நெஞ்சுப் பகுதியின் தோல் மற்றும் அக்குள் பகுதிகளில் உள்ள எளிதில் உணர்ச்சி பெறக்கூடிய உணர் நரம்புகளும் உள்ளன. தன்னிச்சையாக உணரப்படும் உணர்வுகளுக்கு இவையே காரணமாக உள்ளன.
இரத்தக் குழாய்கள்: பல இரத்தக் குழாய்கள் உள்ளதால், மார்பகத்திற்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கிறது.
மார்பகத்தின் நிணநீர் மண்டலம்: இரத்த நாளங்களைப் போன்றே தோற்றமளிக்கும் மெலிதான நிணநீர் நாளங்கள் உள்ளன. நிணநீர் என்பது உடல் திசுக்களை சுத்தம் செய்து உடல் முழுவதும் சுற்றிவரும் திரவமாகும், இவற்றில் இரத்த வெள்ளை அணுக்கள், ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டிபாடி (நோய் எதிர்ப்புப் புரதம்) ஆகியவை உள்ளன. நிணநீர் கணுக்கள் என அழைக்கப்படும் சிறிய அவரை வடிவ அமைப்புகள் வழியாக, நிணநீரானது மார்பகங்களில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படுகிறது. நிணநீர் கணுக்களில், பல இரத்த லிம்போசைட்டுகள் உள்ளன (ஒரு வகை இரத்த வெள்ளை அணுக்கள்), இவை உடலில் நுழையும் அன்னியப் பொருள்கள் மற்றும் நுண்ணுயிர்களை வடிகட்டும் வேலையைச் செய்கின்றன, இவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக உள்ளன.
மார்பகத்தில் நான்கு நிணநீர் கணுக் குழுக்கள் உள்ளன:
1.சுப்ராகிளாவிக்குளார் கணுக்கள் – கழுத்துப்பட்டை எலும்புக்கு மேல்பகுதியில் அமைந்துள்ளவை
2.இன்ட்ராகிளாவிக்குளார் (அல்லது சப்-கிளாவிக்குளார்) கணுக்கள் – கழுத்துப்பட்டை எலும்புக்குக் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ளவை
3.அக்குள் பகுதி கணுக்கள் – அக்குள் பகுதியில் அமைந்துள்ளவை
4.இன்டெர்னல் மம்மரி கணுக்கள் – மார்பகத்தின் உட்புறம் நெஞ்செலும்புக்குப் (ஸ்டெர்னம்) பின்புறம் அமைந்துள்ளவை
மார்பகத்தின் பணிகள் (Functions of the breast)
மார்பகத்தின் முதன்மையான பணி, குழந்தைக்கு ஊட்டமளிப்பதற்குத் தேவையான பாலை உற்பத்தி செய்து, சேகரித்து வைத்து, வெளியிடுவதாகும். கர்ப்ப காலத்தின்போது, கர்ப்பகால ஹார்மோன்கள் மார்பகங்களைத் தூண்டி, பாலை உற்பத்தி செய்யத் தயார்படுத்துகின்றன. குழந்தைப் பேறுக்குப் பிறகு, பெண்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் பால் சுரப்பிகளைத் தூண்டி பால் உற்பத்தி செய்ய வைக்கின்றன. சுரப்பிகளில் இருந்து பால் குழல்களின் மூலம் முலைக்காம்பிற்குக் கொண்டு வரப்படுகிறது. குழந்தை முலைக்காம்பை உறிஞ்சும்போது, பால் சுரக்கிறது.
மார்பகம் இரண்டாம் நிலை பாலியல் உறுப்பாகவும் செயல்பட்டு, ஆண்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு பெண் அம்சமகாவும் விளங்குகிறது.