டிஜிட்டல் மயமாகி வச்ரும் நம் இந்திய மக்களின் கலாச்சாரத்தோடு இன்றளவும் ஒன்றிய ஒரு விளைவாக இந்தக் கன்னி கழிதல், கன்னித் திரை தொடர்பான நம்பிக்கைகள் அதிகமான ஊர்களில் நடை முறையில் அல்லது வழக்கத்தில் உள்ளன. திருமணத்திற்கு முந்தைய உடலுறவு தான் இதற்கான காரணம் என்றும், திருமணத்திற்கு முந்திய உடலுறவில் ஈடுபட்டவளை, நான் எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும் எனும் கேள்விகளும், ஆணாதிக்கம் எனும் அடக்கு முறையின் வெளிப்பாடாய் எமது சமூகங்களில் இன்றும் காணப்படுகின்றன.ஒரு சில இடங்களில் இன்னமும் பெண் கன்னி கழியாமல் இருக்கிறாள் என்பதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் கொடுத்தே திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் குஜராத், மற்றும் பஞ்சாப் முதலிய மாநிலங்களில் திருமணத்தின் பின் இடம் பெறும் முதலிரவின் போது மணமகன், மணமகள் முதலியோரைத் தனியறையில் விட்டு, கட்டிலில் வெள்ளைத் துணியை விரித்து விடுவார்கள். மறு நாள் காலை கட்டிலில் இரத்தம் இருந்தால் தான் பெண் கன்னி கழியாமல் இருக்கிறாள் எனும் நம்பிக்கையில் திருமணத்தின் முக்கிய அம்சமான மாமியார் வீட்டவர்களின் வரவேற்பு, உபசாரம் இடம் பெறும், இல்லை என்றால் எல்லோரும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு விஜய் படம் பார்த்த ரசிகர்கள் போல சோகத்துடன் தான் இருப்பார்கள். இதனை ஒரு பெரிய பண்டிகை போன்று மணமகளைப் பல்லக்கில் ஏற்றி வீதியுலாவாக அழைத்து வந்து கொண்டாடி மகிழ்வார்கள். இதே நிலமை எமது இலங்கையில் உள்ள சகோதர இனத்தவர்களான சிங்களவர்களிடமும் இன்று வரை நடை முறையில் இருக்கிறது. இஸ்லாமிய உறவுகளிடமும் இந்தப் பண்பாடு இன்றும், காணப்படுகின்றது.
ஆசியாவிலுள்ள ஏனைய இன மக்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழர்களிடம் இப்படியொரு பண்பு இல்லை என்றே கூறலாம். இந்நிலையில் இழந்த கன்னித்திரையை திரும்பப் பெறுவதற்கான அறுவை சிகிச்சை தற்போது பிரபலமாகி வருகிறது.பெண்கள் பலரும் தற்போது கடுமையான விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். ஆவ்வாறு ஈடுபடும்போதும் அவர்களது கன்னித்திரை சவ்வு கிழிவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. திருமணம் ஆகும்போது, இவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இவர்களது கன்னித்தன்மை சோதிக்கப்படுகிறது. இதனால் தம்பதிகளுக்குள் சிக்கல் ஏற்படுகிறது.
இதையெல்லாம் தவிர்க்க தற்போது கன்னித்திரை சவ்வு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அதாவது கிழிந்த சவ்வுக்கு பதிலாக வேறு சவ்வு வைத்து அறுவை சிகிச்சை செய்கின்றனர். கன்னித்தன்மையை மீண்டும் ஒரு பெண்ணால் பெற முடியும் என்பதை இந்த அறுவை சிகிச்சை உறுதி செய்கிறது..ஹைதராபாத்தில் பஞ்சரா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் பெண் பேட்மிண்டன் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார். இவரது மகளுக்கு திருமணம் ஆக இருந்ததை முன்னிட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த அறுவை சிகிச்சையை அவரது மகளுக்கு மேற்கொண்டுள்ளார். இவர் மட்டுமில்லை. 20-30 வயதுக்குட்பட்ட ஏராளமான பெண்கள் இதுபோன்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறுவை செய்து கொள்ள 40 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
இதுகுறித்து ஹைதராபாத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் பவானி பிரசாத் கூறுகையில், ”முன்பு இருவர், மூவர் மட்டுமே இந்த அறுவை சிகிச்சை செய்ய வந்து கொண்டு இருந்தனர். தற்போது ஒரு ஆண்டுக்கு 50 பேர் வருகின்றனர். நல்ல சந்தோஷமான வாழ்க்கையை துவக்க இந்த அறுவை சிகிச்சை தேவை என்று பெண்கள் நினைக்கின்றனர். இந்த மாடல் உலகிலும் தன்னுடைய மனைவி கன்னித்தன்மையுடன் இருப்பதைத்தான் ஆண்கள் விரும்புவர்” என்றார்.
இந்த அறுவை சிகிச்சை விளையாட்டுக்களில் ஈடுபட்டு கன்னித்தன்மை இழப்பவர்களுக்கு மட்டுமே செய்யப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மை இழப்பவர்களுக்கு அல்ல என்பதையும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பரதநாட்டியம், விளையாட்டு பயிற்ச்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கன்னித்தன்மை உறுதி செய்யும் சவ்வு கிழிய வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தை பிறந்த பின்னர் பெண்ணுறுப்பு விரிந்து விடுகிறது. இதை இறுக்கமாக்கவும் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.