பொதுவாக, பெண்கள் 8-14 வயது காலகட்டத்திலும் ஆண்கள் 9-15 வயது காலகட்டத்திலும் பருவமடைவார்கள். பெண்கள் பருவமடையப் போகிறார்கள் என்பதைக் குறிக்கும் முதல் அடையாளம், மார்பகங்கள் பெரிதாவது, இது 8-14 வயதுவாக்கில் நடக்கும், பொதுவாக 11 வயதில் நடக்கும். அதற்குப் பிறகு சிறிது காலத்தில், இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் ரோமங்கள் வளரத் தொடங்கும். மார்பகம் பெரிதாகத் தொடங்கி, சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் முதல் மாதவிடாய் வரும், அதாவது கிட்டத்தட்ட 13 வயதில். பெண்களின் திடீர் துரித உடல் வளர்ச்சி சுமார் 12 வயதில் தொடங்கும், வளர்ச்சியின் பெரும்பகுதி 15 வயதிற்குள் நிறைவடைந்திருக்கும்.
பருவமடைவதில் தாமதம் என்பதன் வரையறை (Definition of delayed puberty)
பெண்கள் பருவமடையும் வயது என்பது, உலகளவில் மிகவும் வேறுபடுவதாக உள்ளதால், பருவமடைவதில் தாமதம் என்பதன் வரையறையானது, மொத்த பெண்களில் 95% பேர் பருவமடையும் வயதின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. பெண்களுக்கு 13 வயது வரை, ஆண்களுக்கு 14 வயது வரை, பருவமடைவதன் அறிகுறிகள், மாற்றங்கள் எதுவும் ஏற்படாமல் இருந்தால், அதனை பருவமடைவதில் தாமதம் என்று வரையறுக்கின்றனர். வாழ்க்கை முறை மாற்றங்களின் காரணமாக, பருவமடையும் வயதானது உலகளவில் குறைந்துகொண்டே வருகிறது.
பின்வரும் நிலைகளில், பெண்கள் பருவமடைவது தாமதமாகியுள்ளது எனலாம்:
13 வயது வரை மார்பக வளர்ச்சி இல்லை
16 வயது வரை மாதவிடாய் தொடங்கவில்லை
மார்பக வளர்ச்சி தொடங்கியதில் இருந்து, 5 ஆண்டுகள் ஆகியும் மாதவிடாய் வரவில்லை.
பருவமடைவது தாமதமாகக் காரணங்கள் (What are the causes for delayed puberty?)
பெரும்பாலும் பருவமடைவது தாமதமாவதற்கு, உடல் வாகே காரணமாக உள்ளது. அதாவது, பருவமடையும் செயல் இயல்பாக இருக்கும், ஆனால் மிக மெதுவாக நிகழும். பலருக்கு, இது மரபியல் சார்ந்த ஒன்று, தாய்க்கு அல்லது தந்தைக்கு இதே போல் இருந்திருந்தால், மகன், மகளுக்கும் இதே போன்று நடக்கலாம்.
நாள்பட்ட நோய்கள் (நாள்பட்ட சிறுநீரக நோய், மலக்குடல் அழற்சி நோய்கள் போன்ற), ஊட்டச்சத்துக் குறைபாடு, சாப்பிடுவது தொடர்பான கோளாறுகள் (அனரெக்சியா நெர்வோசா), அளவுக்கு அதிகமான உடல் செயல்பாடு (விளையாட்டுப் பயிற்சிகள், ஜிம்), உடலில் கொழுப்பு குறைவது, மன அழுத்தம் போன்றவையும் பருவமடைதல் தாமதமாகக் காரணமாகலாம்.
சில சமயம்,மூளையில், ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி அல்லது பிற பருவமடைவதைத் தூண்டும் நரம்பியல் அமைப்புகள் போன்றவை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாலும் தாமதமாகலாம். இந்தப் பெண்களுக்கு, பருவமடைவது தொடர்பான மாற்றங்களைத் தூண்டக் காரணமாக இருக்கின்ற FSH மற்றும் LH ஆகிய பிட்யூட்டரி ஹார்மோன்கள் (இவை கொனொடோட்ரோஃபின்கள் என்றும் அழைக்கப்படும்) போதிய அளவு சுரக்காது. மூளையில் ஏதேனும் கட்டிகள் இருப்பது, பிறவிக் குறைபாடுகள், அடிபடுவது, தலையில் காயம்படுவது, கதிர்வீச்சால் பாதிக்கப்படுவது போன்ற காரணங்களால் இந்த ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படலாம்.
சில பெண்களுக்கு, முதன்மை சினைப்பை செயல்திறனின்மை எனப்படும் சினைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம். சிலருக்கு பிறக்கும்போதே சினைப்பை சரியாக உருவாகி வளராமல் இருக்கலாம் (டர்னர் சின்ட்ரோம், ப்ரேடர்-வில்லி சின்ட்ரோம் போன்றவை) அல்லது கதிர்வீச்சு, மருந்துகள் அல்லது வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளால் (தாலாஸ்சேமியா, கிளாக்டோசேமியா போன்றவை) சினைப்பைகளில் சேதம் உண்டாகியிருக்கலாம்.
டர்னர் சின்ட்ரோம்: இது பிறவிக் குறைபாடாகும், இந்தக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பிறக்கும்போதே ஒரு X குரோமோசோமின் பகுதியோ, முழுவதுமோ இல்லாமல் இருக்கும். இந்த நோயுள்ள பெண்கள், அவர்கள் வயதிற்கு உயரம் குறைவாக இருப்பார்கள், கழுத்தெலும்பு புடைத்துக்கொண்டிருக்கும், வாயின் மேல் அன்னம் அதிகம் மேல்நோக்கி குழிந்திருக்கும், கைகளை நீட்டும்போது வெளிநோக்கி வளைந்திருக்கும்.
ப்ரேடர்-வில்லி சின்ட்ரோம்: இது பிறவியிலேயே இருக்கும் ஒரு மரபியல் குறைபாடாகும். இந்தப் பிரச்சனை உள்ள பெண்கள் உயரம் மிகக் குறைவாக இருப்பார்கள், கைகளும் கால்களும் சிறியதாக இருக்கும், கண்கள் பாதாம் வடிவல் இருக்கும், நெற்றி குறுகலாக இருக்கும், வாய் முக்கோண வடிவில் இருக்கும்.
கிளாக்டோசேமியா: இது வளர்சிதைமாற்றம் தொடர்பான பிரச்சனையாகும், இது பொதுவாக பரம்பரை பரம்பரையாகத் தொடர்வது. இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு உடலால் கிளாக்டோசைப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் இருக்கும். எந்த வடிவில் எடுத்துக்கொண்டாலும், பாலை இவர்களால் செரிக்க முடியாது.
தாலாஸ்சேமியா: இதுவும் மரபியல்ரீதியாகத் தொடரும் ஒரு குறைபாடாகும். இந்த நோய் உள்ளவர்களுக்கு வழக்கத்திற்கு மாறான ஹிமோகுளோபின் உற்பத்தி இருக்கும்.
பெண்களின் பருவமடைதல் தாமதமாவது எப்படிக் கண்டறியப்படுகிறது? (How is delayed puberty in girls diagnosed?)
பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இருக்கின்ற, இருந்த கடந்தகால உடல்நலப் பிரச்சனைகள் பற்றி விரிவாகக் கேட்டறியப்படும்.
உயரம், எடை, உடல் அம்சங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து, ஏதேனும் உடல் பிரச்சனையால் பருவமடைவது தாமதமாகிறதா என்பதற்கான அடையாளங்கள் ஏதேனும் புலப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்படும்.
LH, FSH மற்றும் எஸ்ட்ராடியோல் ஆகியவற்றை அளவிடுவதற்காக இரத்தப் பரிசோதனை செய்யப்படலாம். FSH மற்றும் LH அளவு மிக அதிகமாக இருந்து, எஸ்ட்ராடியோல் அளவு குறைவாக இருந்தால், சினைப்பைகள் சரியாக செயல்படவில்லை, அதனால் சினைப்பைகளைச் செயல்படத் தூண்டுவதற்காக பிட்யூட்டரி கடுமையாகச் செயல்படுகிறது என்று பொருள். FSH, LH மற்றும் எஸ்ட்ராடியோல் ஆகியவை குறைவாக இருந்தால், மூளையில் நரம்பியல் அமைப்புகளில் பிரச்சனை இருக்கலாம் அல்லது உடலில் கொழுப்பு குறைவதால் இருக்கலாம் அல்லது வேறு நோய்களின் பக்கவிளைவாக இருக்கலாம்.
சில சமயம், சினைப்பைகளின் செயல்பாடு குறைவதற்கான காரணம் தெளிவாகத் தெரியாவிட்டால், ஏதேனும் மரபியல் பிரச்சனைகள் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக மேலும் சில சோதனைகள் செய்யப் பரிந்துரைக்கப்படலாம்.
பருவமடைதல் தாமதமாவதற்கு, எலும்பின் வயது ஒரு முக்கியக் காரணி என்பதால், கை எக்ஸ்ரே எடுக்கப்படலாம்.
சில சமயம், மூளையில் ஏதேனும் கட்டி இருப்பதால், ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படுகிறதா என்பsதைக் கண்டறிவதற்காக மூளை MRI ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைக்கப்படலாம்.
பெண்கள் பருவமடைவது தாமதமாவதற்கு எப்படி சிகிச்சையளிக்கப்படுகிறது? (How is delayed puberty in girl treated?)
உடல் வாகின் காரணமாக பருவமடைவது தாமதித்தால், காத்திருப்பதே தீர்வு. பருவமடையாமல் இருப்பதால் உடல்ரீதியாக அல்லது சமூகரீதியாக ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், நாளமில்லா சுரப்பி நிபுணர்கள், குறைந்த காலத்திற்கு பெண் ஹார்மோன் (எஸ்ட்ராடியோல்) சிகிச்சை அளிக்கலாம். இந்த குறுகியகால ஹார்மோன் சிகிச்சைக்குப் பிறகு, சிகிச்சையை நிறுத்தினாலும் இயல்பாக பெண்கள் பருவமடைவார்கள்.
gynecologist
வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு, சாப்பிடுவது தொடர்பான பிரச்சனைகள், உடல் கொழுப்பு குறைவாக இருப்பது போன்ற பிற காரணங்களால் தாமதமானால், அந்தக் காரணமான பிரச்சனையைத் தீர்க்கும் சிகிச்சை அளிக்கப்படும். மிகவும் தாமதமானால், குறுகிய காலத்திற்கு செக்ஸ் ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்படலாம். பருவமடைதல் சம்பந்தப்பட்ட மாறுதல்கள் தொடங்கும் வரை இந்த சிகிச்சை தொடரப்படும்.
நிரந்தரமாக ஹார்மோன் இல்லாமலே இருக்கும் பெண்களுக்கு, வாழ்நாள் முழுவதும் செக்ஸ் ஹார்மோன் மாற்று சிகிச்சை தேவைப்படும். முதலில் படிப்படியாக அதிகரிக்கப்படும் அளவுகளில் ஈஸ்ட்ரோஜென் அளிக்கப்படும், பிறகு மாதவிடாய் தொடங்குவதற்கு புரோஜெஸ்டிரோன் அளிக்கப்படும். இந்த ஹார்மோன் மாற்று சிகிச்சை 50 வயது வரை தொடரப்படும். ஹார்மோன் சிகிச்சையானது வாய்வழி மாத்திரையாகவோ, சருமத்தின் மீது பயன்படுத்தும் பட்டைகள் மூலமோ அளிக்கப்படலாம்.