Home இரகசியகேள்வி-பதில் பெண்களின் மார்பக அளவுக் குறைப்பு அறுவை சிகிச்சை

பெண்களின் மார்பக அளவுக் குறைப்பு அறுவை சிகிச்சை

46

பெண்களின் மார்பகங்களின் அளவானது மரபியல், உடல் எடை, ஹார்மோன் தாக்கங்கள் மற்றும் பிற பல காரணிகளைச் சார்ந்திருக்கிறது. மார்பகங்கள் மிகப் பெரிதாக இருப்பது அல்லது இரண்டும் வெவ்வேறு அளவில் இருப்பது போன்ற பிரச்சனைகள் பெண்களுக்கு மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கலாம். இந்தப் பிரச்சனை இருக்கும் பெண்கள் விளையாட்டுகளில் ஈடுபடத் தயங்குவார்கள், வெட்கப்படுவார்கள், பெரும்பாலும் அதைக் குறித்தே அதிக விழிப்புணர்வுடன் இருப்பார்கள்.

மார்பக அளவுக் குறைப்பு என்றால் என்ன?

மார்பகங்களின் அளவைக் குறைப்பதற்காக, மார்பகங்களில் இருக்கும் கூடுதல் கொழுப்பு, சுரப்பித் திசு மற்றும் தோலை அகற்றுவதற்காக செய்யப்படும் அழகுக்கான அறுவை சிகிச்சையே மார்பக அளவுக் குறைப்பு அறுவை சிகிச்சை எனப்படுகிறது. இதனை ரிடக்ஷன் மம்மோபிளாஸ்டி என்றும் குறிப்பிடுவார்கள்.

மார்பக அளவுக் குறைப்பு சிகிச்சை ஏன் செய்யப்படுகிறது?

மிகப் பெரிதான மார்பகங்களுடன் தொடர்புடைய பிரச்சனைகளைச் சரிசெய்வதற்காக மார்பக அளவுக் குறைப்பு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது:

கழுத்து வலி
முதுகுவலி
ப்ரா பட்டைகளின் காரணமாக தோள்களில் பள்ளம் விழுதல்
மார்பகங்களின் அடிப்பகுதியில் தோல் தடிப்புகள் ஏற்படுதல்
மார்பகம் பெரிதாக இருப்பதைப் பற்றிய உணர்வு
தன்னைப் பற்றிய தாழ்வான மதிப்பீடு
மார்பக அளவுக் குறைப்பு சிகிச்சை எப்படிச் செய்யப்படுகிறது?

மார்பக அளவுக் குறைப்பு அறுவை சிகிச்சை பொது மயக்க மருந்து கொடுத்து செய்யப்படுகிறது. விரும்பும் பலன்களை அடைவதற்கு பல வழிமுறைகள் உள்ளன. எனினும், அறுவை சிகிச்சையில் பின்வருபவை செய்யப்படும்:

முலைக்காம்பை வேறு இடத்தில் பொருத்துதல்: இரத்த நாளங்கள் இணைக்கப்பட்டபடியே முலைக்காம்பு வேறு இடத்தில் பொருத்தப்படுதல்
கூடுதலாக உள்ள கொழுப்பு, சுரப்பித் திசு, தோல் ஆகியவற்றை மார்பகங்களில் இருந்து அகற்றுதல்
மீதமுள்ள திசுக்களை சரியான வடிவம் வரும் வகையில் வடிவம் மாற்றுதல்
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சிகிச்சை செய்த இடத்தில் கட்டு போடப்படும், இரத்தம் வடிய குழாய்கள் பொருத்தப்படும். ஓரிரு நாட்களில் இந்தக் குழாய்கள் அகற்றப்படும். வலியைச் சமாளிக்க வலி நிவாரண மருந்துகளும், நோய்த்தொற்று எதுவும் ஏற்படாமல் தடுக்க ஆன்டிபயாட்டிக் மருந்துகளும் பரிந்துரைக்கப்படும்.

இந்த அறுவை சிகிச்சை செய்ய, எந்த அளவுக்கு மார்பகக் குறைப்பு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து, 90 நிமிடங்கள் முதல் 4 மணிநேரம் வரை ஆகலாம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும். பொதுவாக 2-6 வாரங்களில் பழையபடி உடல்நிலை தேறிவிடும். கடினமான உடற்பயிற்சிகள், அதிக பளு தூக்குதல், ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள் போன்றவற்றைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு முலைக்காம்பைச் சுற்றி தழும்பு ஏற்படலாம்.

இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் என்ன?

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படக்கூடிய பொதுவான பக்க விளைவுகள் பின்வருமாறு:

இரண்டு வாரங்களுக்கு மார்பகங்களில் வலி
தழும்புகள்: ஆறு வாரங்கள் வரை சில (1-3) தழும்புகள் இருக்கலாம், அவை சிவப்பு நிறத்தில் இருக்கும், சில மாதங்களில் மறைந்துவிடும்.
இந்தியாவில் மார்பக அளவுக் குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்ள ஆகும் செலவு என்ன?

மார்பக அளவுக் குறைப்பு அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவானது ஒவ்வொரு மருத்துவமனைக்கும் வேறுபடும். ஒரு மதிப்பீட்டின்படி, சுமார் ரூ.85, 000 முதல் ஒரு இலட்சம் வரை ஆகலாம் அல்லது இன்னும் அதிகமாகவும் ஆகலாம். உங்கள் உடல் நிலையைப் பற்றிய ஆய்வு மற்றும் தேவைப்படும் சிகிச்சை முறை ஆகியவற்றைப் பொறுத்து செலவு மாறுபடும்.

மார்பக அளவுக் குறைப்பு அறுவை சிகிச்சையில் உள்ள ஆபத்துகள் என்ன?

பிற அறுவை சிகிச்சைகளைப் போலவே, இந்த அறுவை சிகிச்சையிலும் சில அபாயங்கள் உள்ளன, அவற்றில் சில:

இரத்தப்போக்கு
இரத்தம் உறைதல்
நோய்த்தொற்றுகள்
சில சமயம், வேறு சில பிரச்சனைகளும் ஏற்படலாம்.

நன்றாகத் தெரியும் தழும்பு
மார்பகங்கள் அல்லது முலைக்காம்புகள் இரண்டும் ஒரே அளவிலும் வடிவத்திலும் இல்லாமல் போவது
முலைக்காம்பில் உணர்வு இழப்பு
நிரந்தரமாக தாய்ப்பாலூட்ட முடியாமல் போவது
கொழுப்பு சிதைதல் நடக்கும்போது, மார்பகங்கள் இன்னும் பருமனாகலாம் அல்லது சிவந்துவிடலாம்.
இரத்தக்கட்டு: மார்பகத் திசுவில் இரத்தப்போக்கு ஏற்படுதல் (வழக்கமாக அறுவை சிகிச்சை செய்த 24 மணி நேரத்திற்குள் நடக்கலாம்).
அடுத்து செய்ய வேண்டியவை

மார்பக அளவுக் குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்திற்கு உரியது. அதன் பலன்கள் மற்றும் அதிலுள்ள பிரச்சனைகள் பற்றி நன்கு அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். கர்ப்பமடையத் திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், நிரந்தரமாக தாய்ப்பாலூட்ட முடியாமல் போகும் அபாயமும் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். மேலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடை கூடினால், அது சிகிச்சையின் பலன்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதையும் நினைவில் கொள்ளவும்.