Home ஆண்கள் இளம் பெண்களிடம் அதிகரிக்கும் ஆண்மைத் தன்மை

இளம் பெண்களிடம் அதிகரிக்கும் ஆண்மைத் தன்மை

45

hirsutism1சமீப காலமாக இளம் பெண்களிடம் ஆண்மைத் தன்மை அதிகரித்து வருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. அதிலும் 20 முதல் 25 வயதில் இருக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை மிக அதிகமாக இருக்கிறதாம். முகம், கை, கால்கள் மட்டுமல்லாது, உடல் முழுவதும் முடி வளர்வது, ஆண்கள் போல் உடல் பெருத்து, தடித்து, கருத்து, சருமம், பரு, வழுக்கை என்று ஏராளமான ஆண்தன்மை தலை காட்டுகிறது.

இவற்றை மறைப்பதற்காக அழகு சிகிச்சை நிலையங்களின் உதவியை நாடுகிறார்கள் பெண்கள். அங்கு இதற்கான சிகிச்சை இல்லை என்பதே உண்மை. இந்த ஆண் தன்மைக்கு ‘பிசிஓடி’ என்ற சினைப்பை நீர்க்கட்டிகள்தான் காரணம் என்கிறது மருத்துவத்துறை. இதுதான் பெண்களின் முகத்தில் மீசை முளைக்கச் செய்வதில் இருந்து மலட்டுத்தன்மை வரை பல பிரச்சினைகளுக்கு காரணம். குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்களில் பாதிப் பேருக்கு இந்த பிரச்சினை இருக்கிறது.

ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் எப்.எஸ்.ஹெச். என்கிற பெண்மைக்கான ஹார்மோனும், எல்.ஹெச். என்கிற ஆண்மைக்கான ஹார்மோனும் இருக்கும். இது சாதாரணமாக 2:1 என்ற விகிதத்தில் இருக்கும். அதாவது பெண் தன்மை இரண்டு பங்கும், ஆண் தன்மை ஒரு பங்கும் இருக்கும். அதுவே சினைப்பை நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு பெண்மைக்கு காரணமான எப்.எஸ்.ஹெச்.ஹார்மோன் குறைவாகவும், எல்.ஹெச். என்ற ஹார்மோன் அதிகமாகவும் சுரக்கத் தொடங்கும்.

இந்த மாற்றத்தின் விளைவாக பெண்களின் முகத்திலும், புருவங்களிலும், மார்பகங்கள் மீதும் அடர்த்தியான முடி வளரும். முடி வளர வேண்டிய தலைப்பகுதியில் வழுக்கை விழும். இன்சுலின் எதிர்ப்பு அதிகமாகும். இதனால் வளர்சிதை மாற்றங்கள் உண்டாகும். ஆண்கள் போல் உடல் எடை அதிகமாகும். அக்குள் மற்றும் கழுத்துப் பகுதி கருத்து, பருக்கள், கரும்புள்ளிகள் வரும். இந்த மாற்றம் அதிகமானால் சில பெண்களுக்கு குரல்கூட ஆண்களைப்போல் மாறக்கூடும்.

மேலும் மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதி பாதிப்பதால் சினைமுட்டை வளர்ச்சி சரியில்லாமல் போகும். மாதவிலக்கு தள்ளிப்போகும், கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும். மீறி கரு உருவானாலும் குழந்தையின் முழுவளர்ச்சி பாதிக்கப்படும். குறைப்பிரசவம் ஏற்படும் என்று எச்சரிக்கிறது, மருத்துவத்துறை.

இந்த சினைப்பை நீர்க்கட்டிகள் வர உடற்பருமனும் வாழ்க்கை முறை மாற்றமும் மிக முக்கிய காரணம். மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு ஹார்மோன் சமநிலை மாறுவதால் நீர்க்கட்டிகள் தோன்றலாம். மாதவிலக்கு சுழற்சி சரியில்லாத பெண்களுக்கும், மன உளைச்சலுக்கு ஆளான பெண்களுக்கும் இது வருவதற்கான வாய்ப்பு அதிகம். மருத்துவர்களிடம் சென்று முறையான ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்டால் 90 சதவீதம் குணமாக்கிவிடலாம் என்பது ஆறுதலான செய்தி.