பெரும்பாலான பெண்களுக்கு 30 வயதை நெருங்குவதற்குள், வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் அதிகத் தசையும் கொழுப்பும் சேர்ந்து, உடல் எடை கூடிவிடுகிறது. எனவே, சரிவிகித உணவுடன் சில எளிய பயிற்சிகளைச் செய்தால், வயிற்றுப் பகுதியில் தசைகள் வலுவாகும்; உடல் ஃபிட்டாகும்.
ஆனால், பணிச்சூழல், நேரமின்மை போன்ற காரணங்களால் ஜிம்முக்குச் சென்று பயிற்சி செய்ய முடியவில்லை என்று பலரும் அலுத்துக்கொள்கிறார்கள். ஜிம்முக்குச் சென்றுதான் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள முடியும் என்பதில்லை. வீட்டிலேயே சில எளிய பயிற்சிகளின் மூலம் உடலை உறுதியாக்கலாம்.
பெல்விக் ப்ரிட்ஜ் (Pelvic Bridge)
தரையில் நேராகப் படுக்க வேண்டும். கால்களை மடக்கி, சற்று அகட்டித் தரையில் பதிக்க வேண்டும். கைகள் உடலின் பக்கவாட்டில், குப்புறவாக்கில் இருக்கட்டும். இப்போது இடுப்பையும் மேல் உடலையும் உயர்த்தி, 10 முதல் 15 விநாடிகள் நிலைநிறுத்த வேண்டும். இந்த நிலையில் மூச்சை சீராக இழுத்துவிட வேண்டும்.
பலன்கள்: இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் தசைப்பிடிப்பு நீங்கும். உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் பரவும். நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
பேக் எக்ஸ்டென்ஷன் ஸ்ட்ரெச் (Back Extension Stretch)
தரையில் குப்புறப் படுக்க வேண்டும். கைகளை முன்புறம் தரையில் பதிக்க வேண்டும். கால்களை `எல்’ வடிவில் பின்புறமாக மடக்க வேண்டும். இப்போது, கைகளை ஊன்றியபடித் தலை மற்றும் மேல் உடலை உயர்த்தி, மெதுவாக மூச்சை இழுத்துவிட வேண்டும். பின்னர் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இதை மூன்று முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: முதுகுத்தண்டு நேராகும். கை, நெஞ்சு, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் ஃபிட்டாகும். உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் பரவும்.
ஸ்டேண்டிங் சிசர்ஸ் (Standing Scissors)
கால்களுக்கிடையே இரண்டு அடி இடைவெளிவிட்டு நிற்கவும். பின்னர் கைகளைத் தோள்பட்டைகளுக்கு இணையாகப் பக்கவாட்டில் நீட்டிக்கொள்ளவும். பிறகு, மெதுவாக முன்புறமாகக் குனிந்து வலது கையால் இடது பாதத்தைத் தொடவும். அப்போது வலது கை மேல்நோக்கி செங்குத்தாக (90 டிகிரி) தூக்கிய நிலையில் இருக்கட்டும். அதேபோல, இடது கையால் வலது கால் பாதத்தைத் தொட வேண்டும். இந்தப் பயிற்சியை 20 முறை செய்யலாம்.
பலன்கள்: வயிற்றில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறையும். தொப்பை வராமல் தடுக்கும். வயிற்றுத் தசைகள் வலுவாகும்.