கேள்விகள் கேட்பது என்பது குழந்தைகளின் பழக்கம். அதற்கு தெளிவாக புரியும்படியான விளக்கத்தை அளிக்க வேண்டியதை பெற்றோர்கள் வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல், பின்னாட்களில் நீங்கள் சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். சிறு குழந்தையாக இருக்கும் போது, சாலையில் காண்பது பற்றி நான்கைந்து கேள்விகள் கேட்கும் போதே அதட்டி, அதட்டி, காலப்போக்கில் அவர்கள் மனதில் எழும், முக்கியமான கேள்விகள் கூட தயக்கத்தின் காரணத்தால் கேட்க முடியாமல் போய்விடுகிறது என்பது தான் உண்மை! பருவ வயதில் தான் பிள்ளைகள் திசை மாறி போக நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த காலத்தில் அவர்கள் வெளியே கேட்க தயங்கும் சில முக்கியமான கேள்விகள் இவை…
பூப்படைதல்! வயதுக்கு வருவது (அ) பூப்படைவது என்பது மிகவும் இயல்பான ஒன்று. இந்த மாற்றம் ஒவ்வொரு பெண் மத்தியிலும் அவரகளது 13 – 18 வயதுக்குள் உண்டாகிறது. ஆனால், இதைப்பற்றி நம் ஊர்களில் குழந்தைகள் வெளிப்படையாக கேட்க முடியுமா என்பது கேள்விக்குறி தான். இதுப்போன்ற கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டுமே தவிர, இப்படி மீண்டும் பேசினால் விளக்கமாறு கொண்டு அடிப்பேன் என அதட்டக் கூடாது.
மாதவிடாய்! பூப்படைந்த பிறகு பெண்களுக்கு மாதமாதம் ஏற்படும் ஒன்று மாதவிடாய். மாதவிடாய் காலத்தில் பெண்கள் நாப்கின் பயன்படுத்துவது இயல்பு. இன்றளவும் நாப்கின் பற்றிய தெளிவு பெறாமல், அதைப்பற்றி அறிந்துக் கொள்ள தட்டிதடுமாறும் இளைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த கேள்வி கேட்பதில் அவர்களுக்கு ஏன் இவ்வளவு தயக்கம். இது அசிங்கமான விஷயம் அல்ல. ஆனால், தெரிந்தோ, தெரியாமலோ நமது சமூகம் அது அசிங்கமானது, ஆண்கள் அதைப்பற்றி பேசக்கூடாது என அழுத்தமாக பதித்து வைத்திருக்கிறது.
உடலுறவு! பருவ வயதை எட்டிய பிறகு தான் குழந்தைகளின் ஹார்மோனில் பல மாற்றங்கள் உண்டாகும். இதில், உடலுறவு சார்ந்த ஹார்மோன் மாற்றங்கள் அதிகம். அந்த மாற்றத்தை பற்றி அவர்களுக்கு உண்டாகும் குழப்பங்களை சரியாக தெளிவுப்படுத்திவிட்டால் அவர்கள் தவறான பாதைக்கு செல்வதை ஆரம்பத்திலேயே தடுத்துவிடலாம். ஆனால், நாம் உடலுறவு என்றாலே தவறு, அதைப்பற்றி பேசுவது தேசத்துரோக குற்றம் என்பது போன்ற பிம்பத்தை உண்டாக்கி வைத்துள்ளோம். உடலுறவு குற்றம் என்றால், திருமணமே பாவச்செயல் தானே!
பார்ன்! பருவ வயதின் நடுவில் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஏற்படும் ஆர்வம் பார்ன். பார்ன் என்பது தவறா? அதை பார்ப்பதில் அப்படி என்ன இருக்கிறது? இதுப் போன்ற கேள்விகளுக்கு பெற்றோரே தெளிவான பதிலை அளித்தால். அவர்கள் அதில் செலுத்தும் நாட்டத்தை, படிப்பில் அல்லது அவர்களது திறமையில் செலுத்தி முன்னேறுவார்கள்.
எதிர்பாலின நட்பு! நமது ஊர்களில் பெற்றோர் மத்தியில் ஒரு வழக்கம் இருக்கிறது, சிறு வயது முதல் ஒன்றாக விளையாடி வரும் ஆண், பெண் குழந்தைகளை, பெண் குழந்தை பருவமடைந்த பிறகு விளையாட வேண்டாம், அவனுடன் பழக வேண்டாம் என கூறி அதட்டுவார்கள். இது ஏன்? எதற்கு இப்படி கூறுகிறீர்கள் போன்ற கேள்வி கேட்கவும் அவர்கள் மத்தியில் தயக்கம் இருக்கும். இந்த தயக்கம், அவர்களாக அறிந்துக் கொள்ள முயற்சி செய்து, சில சமயத்தில் தவறான உறவில் இணையவும் காரணியாக அமைந்துவிடுகிறது.
முதலிரவு! நம் குழந்தைகளுக்கு முதன் முதலில் முதலிரவு என்றால் என்ன என்ற சந்தேகத்தை அதிகம் தோன்ற வைப்பது சினிமா காட்சிகள் தான். முதலிரவு என்பது திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் நடக்கும் ஒரு சாதாரண விஷயம். எட்டாம் வகுப்பு புத்தகத்திலேயே உடலுறவு என்றால் என்ன, எப்படி கருத்தரிப்பு நிகழ்வு நடக்கிறது என விளக்கமாக படம் போட்டு காண்பித்து விடுகிறார்கள். எனவே, இது போன்ற சந்தேகம் எழும் போது, அவர்களுக்கு புரியும்படி கூறிவிடுவது நல்லது. தயக்கத்திலேயே அவர்களை மூழ்கடித்துவிட வேண்டாம்.