Home குழந்தை நலம் குழந்தை வளர்ப்பு முறைகள் (Parenting Styles)

குழந்தை வளர்ப்பு முறைகள் (Parenting Styles)

44

ஒருவரின் வாழ்க்கையில் பெற்றோரின் பங்கு மிக முக்கியம். பெற்றோர் ஒருவரை வளர்க்கும் முறை, அவருடைய உணர்ச்சி சார்ந்த மற்றும் சமூகம் சார்ந்த குணங்களை பெரிதும் பாதிக்கிறது. உளவியல் துறையில் குழந்தைகள் வளர்ப்பு பற்றிய ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் எப்போதும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்துவருகின்றன. குழந்தையின் வளர்ச்சியில் குழந்தை வளர்ப்பின் தாக்கத்தைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கான முயற்சியாகவே இந்த ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் இருந்துவந்துள்ளன. உளவியல் நிபுணரான டயானா பாம்ரின்ட் என்பவர் குழந்தை வளர்ப்பு முறைகள் குறித்த விரிவான ஆய்வுகளின் மூலம், நான்கு விதமான வளர்ப்பு முறைகள் உள்ளன என்று கண்டறிந்துள்ளார். இப்போது அவற்றை பாம்ரின்ட் வளர்ப்பு முறைகள் என்று கூறுகிறோம்.குழந்தை வளர்ப்பின் நான்கு வகைகளைப் பற்றி விரிவாக விவரிக்கும் பாம்ரின்ட் குழந்தை வளர்ப்பு முறையினை அடிப்படையாகக் கொண்டே, இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இந்த வகைப்படுத்தலானது, கட்டுப்பாடு மற்றும் அரவணைப்பு என்ற குழந்தை வளர்ப்பு நடத்தையின் இரண்டு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது என்று பாம்ரின்ட் கூறுகிறார்.

பெற்றோர் கட்டுப்பாடு: இது குழந்தையின் நடத்தையில் பெற்றோர் எந்த அளவுக்குக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது.

பெற்றோர் அரவணைப்பு: இது குழந்தைகளின் நடத்தைக்கு பெற்றோர் எந்த அளவுக்கு (புறக்கணிக்காமல், எதிர்வினை புரியாமல், நிராகரிப்புக் குணம் இல்லாமல்) எதிர்வினை புரியும் தன்மையைக் கொண்டுள்ளனர், எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டுள்ளனர் என்பதைக் குறிக்கிறது. குழந்தை வளர்ப்பின் இந்த இரண்டு அம்சங்களை வெவ்வேறு வழிகளில் பொருத்திப் பார்க்கும்போது, குழந்தை வளர்ப்பின் நான்கு முறைகள் தென்படுகின்றன. அவை பின்வருமாறு:

அதிகாரமிக்க பெற்றோர்: அரவணைப்புள்ளவர்கள் ஆனால் கண்டிப்பானவர்கள்

இவர்கள் குழந்தைகள் எவரையும் சாராதவர்களாக இருக்க வேண்டும் என்று ஊக்குவிப்பார்கள். அதே சமயம் அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து சில வரையறைகளை அமைப்பார்கள், அவற்றை குழந்தைகள் மீறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை காரணங்களுடன் விளக்குவார்கள்.
இவர்கள் தண்டிக்கும் ஒழுக்க முறைகளுக்கு பதிலாக ஆதரவளித்து ஊக்குவிக்கும் ஒழுக்க முறைகளைப் பின்பற்றுவார்கள்.
பாராட்டுவார்கள், நேர்மறையான கவனிப்பைக் கொண்டிருப்பார்கள், குழந்தைகள் ஒழுக்கமாக நடந்துகொண்டால் வெகுமதிகளை வழங்குவார்கள்.
இவர்கள் எப்போதும் குழந்தைகளைப் புரிந்துகொள்ளவும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்களுக்குக் கற்றுத்தர பல்வேறு வழிகளைக் கண்டறியவும் முயற்சி செய்வார்கள்.
தங்கள் குழந்தைகள் சுய ஒழுக்கம், சமூகப் பொறுப்புகள், நம்பிக்கை ஆகிய குணங்களைக் கொண்டவர்களாக்க இவர்கள் முயற்சி செய்வார்கள்.
அதிகாரமிக்க வளர்ப்பு முறையால் குழந்தைகளின் மீது ஏற்படும் தாக்கம்:

விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் கீழ்படிந்து நடப்பது தங்களுக்கு நேர்மறையான விதத்தில் நல்ல குணங்களை விதைக்கும், கற்றுத்தரும் என்று இந்தக் குழந்தைகள் நம்புகின்றனர்.
இவர்களின் சமூகரீதியான திறன்களும் உணர்வுசார்ந்த ஒழுக்கமும் சிறப்பாக வளர்ந்திருக்கும்.
இவர்கள் பொறுப்புள்ளவர்களாகவும், நம்பிக்கையுள்ளவர்களாகவும், குறிக்கோள்களை நோக்கிய உந்துதல் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.
சர்வாதிகாரப் பெற்றோர்: சிறிதளவு அரவணைப்பு, அதிகக் கட்டுப்பாடு

இவர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள், மரபை மீறக்கூடாது என்று எதிர்பார்ப்பவர்கள்.
குழந்தைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு மிகவும் கண்டிப்பான விதிமுறைகளை வைத்திருப்பார்கள்.இந்த விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால், அது மிகப் பெரிய தவறாகக் கருதப்படும்.
இவர்கள் விதிகள் ஏன் எதற்கு என்று விவரிக்கமாட்டார்கள், ஆனால் குழந்தைகள் கேள்வி கேட்காமல் அவற்றுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எந்த விஷயம் பற்றியும் கலந்து பேசுவது, விவாதிப்பது போன்றவற்றுக்கே இடமில்லை.
சர்வாதிகாரப் பெற்றோரின் பேச்சு பொதுவாக இப்படி இருக்கும்: “நான் சொல்லிவிட்டேன், ஆகவே இதை நீ செய்தே ஆக வேண்டும்.”, “நான் சொல்வதை நீ செய்தே ஆக வேண்டும், ஏனென்றால் நான் தான் தாய்/தந்தை நீயில்லை.”.
குழந்தைகளைப் பாராட்டுவது வெகுமதி வழங்குவது போன்றவை அவர்களைக் கெடுத்துவிடும் என்று இவர்கள் நம்புவதால், அவற்றைப் பயன்படுத்தமாட்டார்கள்.பெரும்பாலும் குழந்தைகள் எதைச் செய்தாலும் அதை விமர்சிக்கும் கண்ணோட்டமே கொண்டிருப்பார்கள்.
சர்வாதிகார வளர்ப்பு முறையால் குழந்தைகளின் மீது ஏற்படும் தாக்கம்:

சர்வாதிகார பெற்றோரின் குழந்தைகள் பயத்தில் பெற்றோரின் விதிகளை அப்படியே எடுத்துக்கொண்டு பின்பற்றுவார்கள்.
இவர்கள் பரவலாக புழக்கத்திலிருக்கும் விதிமுறைகளையும் மதிப்பு முறைகளையும் தனக்குள் உள்வாங்கி பதியவைத்துக்கொள்வார்கள், தண்டிக்கத்தக்க நடத்தை எதையும் தவிர்ப்பார்கள்.
சுயமாக எதுவும் முடிவெடுக்க முடியாதவர்களாக இருப்பார்கள். பொதுவாக சிந்திப்பதிலும் மாற்று வழிகள் குறித்தும் புதிய பரிசோதனை முயற்சிகள் எதையும் செய்யமாட்டார்கள்.
ஆராய்ச்சியின்படி,
இவர்கள் அதிகாரமிக்க மற்றும் அரவணைப்புமிக்க குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுடன் ஒப்பிடும்போது சமூகரீதியாக குறைவான திறன்களையே கொண்டிருப்பார்கள்.
இவர்களுக்கு மன உளைச்சலைக் கையாள்வது கடினமாக இருக்கும்:இவர்கள் கலகக்குணம் உள்ளவர்களாகவோ முரட்டுத்தனமாகவோ மாறலாம் அல்லது மிகவும் பணிந்துபோகக்கூடியவர்களாகவும் பிறரைச் சார்ந்தே இருப்பவர்களாகவும் வாழக்கூடும்.
தாழ்வான சுய மதிப்பீடு, மனக் கலக்கம், மன இறுக்கம் போன்றவற்றால் எளிதில் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள்.

அரவணைக்கும் பெற்றோர்: மிகவும் அரவணைப்பு, குறைவான கண்டிப்பு

இந்த வகைப் பெற்றோர் ஆசைகளை நிறைவேற்றும் பெற்றோராகவும் குழந்தைகளை வளர்ப்பதில் அதிக முனைப்பின்றியும் இருப்பார்கள். குழந்தைகளின் விருப்பப்படி விட்டுவிடுவதே அவர்கள் மீது அன்பு செலுத்தும் வழி என்று நம்புபவர்கள்.
குழந்தைகளுக்கு முழுமையான சுதந்திரம் வழங்குவது நல்லது என்று நம்புவார்கள், பழமையான குழந்தை ஒழுக்கத்தையும் கண்டிப்பான நடத்தை விதிமுறைகளையும் விரும்பமாட்டார்கள்.
குழந்தைகள் தம்முடன் பேசுவதையும் விவாதிப்பதையும் ஊக்குவிப்பார்கள், எந்த முடிவையும் எடுத்துவிட்டு குழந்தைகள் அவற்றுக்குக் கீழ்படிய வேண்டும் என்று எதிர்பார்க்காமல், முடிவெடுக்கும் செயலில் குழந்தைகளையும் ஈடுபடுத்துவார்கள்.
குழந்தைகளின் ஆசைகளைப் புரிந்துகொண்டு அவற்றுக்கு உடனடியாக பதிலளிப்பார்கள். குழந்தைகளின் ஆசைகளுக்கு மறுப்பு கூறுவதும் அவர்கள் மன வருத்தப்படும்படி செய்வதும் இவர்களுக்குக் கடினமாக இருக்கும். இதனால், குழந்தைகளுடன் பிரச்சனைகள் ஏற்படுத்திக்கொள்வதைக் குறித்து அதிகம் பயப்படுவார்கள்.
அரவணைப்புமிக்க வளர்ப்பு முறையால் குழந்தைகளின் மீது ஏற்படும் தாக்கம்:

அரவணைப்புமிக்க பெற்றோரின் குழந்தைகள் சிறந்த சமூகத் திறன்களும் மிகுந்த சுயமதிப்பீடும் கொண்டிருப்பார்கள். முடிவெடுக்கும் செயலில் இவர்களையும் கலந்துகொள்ளச் செய்வதால் இவர்களுக்கு மன இறுக்கமும் குறைவாக இருக்கும். இவர்கள் பெரியவர்களையும் சமமாக மதித்து நடப்பார்கள்.
குழந்தைகளுடன் எதிர்ப்பு வருவதைக் குறித்து பயப்படும் பெற்றோரிடம் வளர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் ஆதிக்க குணம் நிறைந்தவர்களாக இருக்க வாய்ப்புள்ளது.
இவர்கள் திடீரென்று எதையும் செய்யும்/பேசும் குணம் கொண்டவர்களாகவும், போதைப் பழக்கம், மதுப் பழக்கம் போன்ற பிரச்சனைக்குரிய விஷயங்களில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. அதிகாரமிக்க மற்றும் சர்வாதிகாரமான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுடன் ஒப்பிடும்போது இவர்கள் கல்வியில் அவ்வளவு சிறப்பாகச் செயல்படாமல் போகக்கூடும்.
பிறருடனான உறவுகளை அழிக்கக்கூடிய ஈகோ பிரச்சனைகள் உள்ளவர்களாக இவர்கள் இருக்க வாய்ப்புள்ளது.
ஈடுபாடற்ற பெற்றோர்: அரவணைப்பும் இல்லை கண்டிப்பும் இல்லை

இவர்கள் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிவிடுவார்கள், ஆனால் உணர்வளவில் அவர்களுடன் பிணைப்பு இருக்காது. குழந்தைகளின் வாழ்க்கையிலிருந்து இவர்கள் சற்று விலகி, பிணைப்பின்றி, ஈடுபாடின்றி இருப்பார்கள்.
இவர்கள் மிகவும் குறைவாகவே குழந்தைகளுடன் பேசுவார்கள், மிகச் சில கட்டுப்பாடுகள், எதிர்பார்ப்புகளே வைத்திருப்பார்கள். குழந்தைகளின் கருத்துகளுக்கும் ஆசைகளுக்கும் குறைவாகவே பதில்வினை புரிவார்கள்.
முடிவெடுக்கும் போது குழந்தைகளின் கருத்தைக் கேட்கமாட்டார்கள், குழந்தைகள் தங்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று இருப்பார்கள்.
சூழ்நிலை காரணமாக இந்தப் பெற்றோர் இப்படி இருக்கலாம் அல்லது அவர்கள் தங்களையே மையமாகக் கொண்டு வாழும் போக்கு கொண்டவர்களாக இருக்கலாம். இந்தப் பெற்றோர் குழந்தைகளிடம் கண்டிப்பைக் காட்டி மிகவும் களைத்திருந்தால், மன உளைச்சல் அடைந்திருந்தால் அல்லது விரக்தியடைந்து இருந்தால் இப்படி மாறிவிடக்கூடும்.
ஈடுபாடற்ற வளர்ப்பு முறையால் குழந்தைகளின் மீது ஏற்படும் தாக்கம்:

ஈடுபாடற்ற பெற்றோரிடம் வளர்ந்த குழந்தைகளும் திடீரென்று எதையும் செய்யும்/பேசும் குணம் கொண்டவர்களாக இருக்கலாம். அரவணைப்புமிக்க பெற்றோரிடம் வளர்ந்த குழந்தைகளுக்கு உள்ளதைப் போலவே இவர்களுக்கும் சுய ஒழுக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பதால் இப்படி நடக்கலாம்.
இவர்கள் தாழ்வான சுய மதிப்பீட்டைக் கொண்டிருப்பார், பிற வகை வளர்ப்பில் வளர்ந்த குழந்தைகளை விட, சமூகரீதியாக குறைவான திறன்களே கொண்டிருப்பார்கள்.
பெரும்பாலும் எல்லாவற்றிலும் இவர்களின் செயல்திறன் மோசமாகவே இருக்கும்.
பிற முறைகளுடன் ஒப்பிடும்போது அதிகாரமிக்க வளர்ப்புமுறையே சிறந்தது என்று கருதப்படுகிறது. ஏனெனில் அதில்தான் பெற்றோருக்கு குழந்தைகள் மீது அதிக கட்டுப்பாடு உள்ளது. அதே சமயம், நியாயமான காரண விளக்கங்களை அளித்து அவர்களுக்கு விதிமுறைகளும் வழங்கப்படுகின்றன. பெற்றோர் குழந்தைகளுக்கு சிறப்பான முறையில் பதில்வினை புரியும் தன்மை கொண்டுள்ளனர். குழந்தைகளின் நல்லொழுக்கம், நம்பிக்கை, நல்ல ஆளுமை வளர்ச்சி ஆகியவற்றைப் பண்படுத்துவதில் அதிகாரமிக்க வளர்ப்பு முறை முக்கியப் பங்கு வகிக்கிறது. எனினும், இந்த வளர்ப்பு முறை வகைகள் கோட்பாடுகளைக் கொண்டே வரையறுக்கப்பட்டுள்ளன. பெற்றோர் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு முறையைப் பின்பற்றலாம், ஆனாலும் பெரும்பாலான சூழ்நிலைகளில் அவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு முறையை அதிகமாகப் பின்பற்றக்கூடும். வேறு சூழ்நிலைகளில் பிற முறையும் வெளிப்படக்கூடும்.

பெற்றோர் என்ற முறையில் தனது செயல்பாடுகளை ஆய்வு செய்து, குழந்தைகளுடனான தகவல்பரிமாற்றத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் பெற்றோர் வளர்க்கும் முறையானது, குழந்தையின் ஆளுமை ஆரோக்கியமான முறையில் வளர்ச்சி அடைதல், குடும்பத்துடனான நெருக்கம் போன்ற தேவைகளை நிறைவு செய்கிறதா என்றும் ஆய்வு செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் பெற்றோர் என்ற முறையில் உங்கள் குழந்தைகளை சிறப்பான முறையில் வளர்த்தீர்கள் என்ற நிறைவும் கிடைக்கும், குழந்தைகளும் இனிமையான குடும்பத்தில் இருக்கிறோம் என்ற உணர்வைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்!