தாய் நலம்:கர்ப்பகாலத்தில் வயிற்றில் வளரும் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருப்பதென்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இது போன்ற சமயங்களில் சில உணவு வகைகளை அளவுக்கு அதிகம் உண்பதும் ஆபத்து மிகக் குறைவாக உண்பதும் ஆபத்து.
அந்த வகையில் பப்பாளிப்பழம் உண்பது மற்றும் முட்டைகள் உண்பது குழந்தைக்கு சிறந்ததல்ல எனும் கருத்தொன்று நிலவி வருகின்றது. அது எப்படி எனக் கேட்கின்றீர்களா?
பொதுவாக நீரிழிவு, இதயம் தொடர்புபட்ட நோய்கள் மற்றும் புற்றுநோய் என்பவற்றை தடுக்கும் சக்தி இந்த பப்பாளிக்கு உண்டு. மேலும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் இந்த பப்பாளி பயன்படுத்தப்படுகின்றது. எனினும், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் கருவுற எதிர்பார்த்திருக்கும் பெண்கள் ஆகியோர் பப்பாளியை உட்கொள்ளக் கூடாது என்று தான் கூற வேண்டும்.
பழுக்காத பப்பாளி மற்றும் பச்சை முட்டை என்பவற்றை கர்ப்பிணிகள் உட்கொள்ளக் கூடாது. ஆனால் நன்கு பழுத்த பப்பாளி மற்றும் சமைத்த முட்டை ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
பச்சைப் பப்பாளியில் பப்பெய்ன் எனும் நொதியம் ஒன்றுள்ளது. இந்த நொதியமானது புரொஸ்டகிளான்டின் மற்றும் ஒக்ஸிடோசின் நொதியங்களைப் போல் செயற்படும் தன்மை கொண்டது. அதாவது குறித்த நொதியங்கள் பிரசவத்தை தூண்டும் வல்லமை கொண்டன.
இதனால் கர்ப்பிணி ஒருவர் பப்பாளிப் பழத்தை உட்கொள்ளும் போது வயிற்றில் உள்ள குழந்தை வெளியே வர எத்தணிக்கும். இது சில சமயங்களில் குறை மாதப் பிரசவம் மற்றும் கருக்கலைப்பு போன்றன ஏற்படக் காரணமாக அமைகின்றது.
கருத்தரித்து ஒரு சில மாதங்களில் பச்சைப் பப்பாளியை உட்கொள்வதனால் கருக்கலைப்பு ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உண்டு எனவும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
எனினும், வயிற்றில் உள்ள குழந்தை பூரணமாக உருவாகியவுடன் பழுத்த பப்பாளிப் பழங்களை உட்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
ஏனெனில் குறித்த பழுத்த பப்பாளிப் பழங்களில் விட்டமின்-சி அதிகளவில் உள்ளதோடு பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள் இதனால் சீர்செய்யப்படுகின்றன.
மாறாக பச்சை பப்பாளிப் பழத்தை குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் நிமித்தம் பண்டைய காலத்தில் இருந்து உபயோகித்து வந்துள்ளார்கள். எனவே கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளிப் பழத்தை முற்றிலுமாக உட்கொள்வதை தவிர்க்காது பழுத்த பப்பாளிப் பழங்கள் மற்றும் சமைத்த முட்டை ஆகியவற்றை உட்கொள்வது சிறந்தது.