பிரபல பாடகியும் நடிகையுமான மடோனா, தான் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடுமை அனுபவித்ததாக பரபரப்பு தகவல் கூறியுள்ளார்.
நியூயார்க்கில் நடந்த இசைக்கான விருது வழங்கும் விழாவில் பிரபல பாப் இசை பாடகியும், ஹாலிவுட் நடிகையுமான மடோனா, தான் தனது தொழில் சார்ந்த வாழ்க்கையில் இடைவிடாத பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு ஆளானதாக கூறியுள்ளார். இசை உலகில் 34 வருடங்களாக பணியாற்றி வருபவர் மடோனா. பாடகியாக மட்டுமின்றி, நடிகையாகவும், மாடலாகவும் இவர் பணியாற்றியுள்ளார். 58 வயதான மடோனா இவ்வாறு கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபலங்கள் மட்டுமல்ல, சாதாரண பெண்களும் கூட தங்கள் தொழில் சார்ந்த வாழ்க்கையில் இதுபோன்ற பல இன்னல்களை அனுதினமும் சந்திக்கின்றனர்…
பெண்! ஓர் ஆண் தனது வாழ்க்கையில் சாதரணமாக செய்யும் விஷயங்களை கூட ஒரு பெண்ணாக பார்த்து, பார்த்து கவனமாக, சமூகத்தில் போராடி செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு ஆண் இரவு வேலை சென்று வருவது சாதாரணம். அதுவே ஒரு பெண் என்றால் அசாதாரணம். அவர் மீது கரும்புள்ளி குத்தும் வகையில் பேச பலர் காத்திருப்பார்கள்.
தொழில்! என்னதான் இன்றைய உலகம் நாகரீகம் வளர்ந்த நிலையில் உள்ளது என நாம் மார்தட்டி கொண்டாலும் கூட, ஒரு பெண் நான்கு ஆண்களுக்கு தலைமை வகிக்கிறார் என்றால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், போட்டி, பொறாமைகளும் பல மடங்கு அதிகமாக இருக்கும்.
பாலியல் தொல்லைகள்! சினிமா, பொழுதுபோக்கு, ஊடகம், ஐ.டி என பாகுபாடு இல்லாமல், ஒரு பெண் தன்னிலையை நிலைநாட்ட, தனக்கான இடத்தை பிடிக்க ஆங்காங்க இன்றளவும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதை எதிர்த்து சாதிப்பவர்கள் சிலரே, இதனால் மனமுடைந்து ஒதுங்கி செல்பவர்கள் தான் பலர்.
என்று தணியும் இந்த இச்சை தாகம்! பெண்ணை வெறும் உடலாக மட்டும் பார்த்து, அவரது இறைச்சியாய் ருசிக்க விரும்பும் இச்சை மிருகங்களின் தாகத்தால் தங்கள் பிறப்பிற்கான பயனை அடியாமல், தங்கள் திறமையை தீயினில் இட்டு பொசுக்கிக் கொண்டு, இந்த சமுதாயத்தில் சகித்துக் கொண்டு தான் பெண்கள் இனிவரும் நாட்களிலும் வாழ வேண்டுமா?
மனிதத்தன்மை அற்ற செயல்! ஒருவரது சொத்தை அழிப்பதை காட்டிலும், ஒருவருடைய உணவை அழிப்பதை காட்டிலும், ஒருவருடைய கனவை, திறமையை அழிப்பது மிகவும் கொடுமையானது. இந்த மனிதத்தன்மையற்ற செயலில் பெரும்பாலும் சிக்குபவர்கள் பெண்கள் தான்.
முற்று?! நேற்றும், இன்றும் நடந்த, நடந்துக் கொண்டிருக்கும் இந்த சம்பவங்கள், நாளையும் தொடர்கதையாக தொடர்ச்சி அடையாமல் முற்றுப்பெற வேண்டும். அதற்கு ஆண்களாகிய நாம் தான் வழிவகுக்க வேண்டும்.