வெகுளித்தனமான வயது
பதின்பருவமும் இளமைப் பருவத்தின் ஆரம்பகட்டமும் ஒரு புதிரான காலகட்டம் என்றே சொல்லலாம், இந்தக் காலகட்டத்தில் எதுவுமே சரியாகப் புரியாததுபோல் இருக்கும். இந்த அனுபவமே அவர்களின் வாழ்விலும் அவர்களின் சுயத்தின் மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் சூழ்நிலையிலும் பல்வேறு மாற்றங்கள் துரிதமாக நிகழ்கின்றன.இளம் பருவத்தினர் அவர்களைச் சுற்றியுள்ள நபர்கள் அல்லது சுற்றியுள்ள விஷயங்களால் பாதிக்கப்படுகின்றனர்.
சமூக அழுத்தத்தைப் புரிந்துகொள்ளுதல்
வளரும் குழந்தைகள், தங்கள் வயதில் உள்ள பிறரைப் பார்த்து, அவர்களைப் போலவே செய்ய, வாழ ஆசைப் படுவார்கள். அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் கற்றுக்கொள்வார்கள், அவர்களின் நண்பர்களைப் போலவே உடை உடுத்துவார்கள், ஒரே விதமான இசையை விரும்புவார்கள், ஒரே மாதிரியான பிரபலங்களையும் விளையாட்டுகளையும் ஆர்வமாக ரசிப்பார்கள். ஒரே வயதுடைய குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற உந்துதலே இப்படி அவர்கள் நடந்துகொள்ள அடிப்படைக் காரணமாகும். குழுவுடன் ஒத்துப்போகிறோம் என்ற உணர்வு அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது.
சமூக அழுத்தம் என்பது நல்ல விஷயமா அல்லது கெடுதலானதா?
பெரும்பாலும் இத்தகைய உந்துதல் மிகுந்த எதிர்மறையான தாக்கம் என்று கருதப்படுகிறது. ஆனால் இதனால் சில நன்மைகளும் உள்ளன என்பதை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். கல்வியில் சிறப்பாகச் சாதிக்க வேண்டிய நிலையில் இருக்கும் மாணவர்கள் அதிக நேரம் பெற்றோரின் மேற்பார்வையின்றி தங்கள் வயதுடைய நண்பர்களுடன் இருக்க வேண்டியுள்ளது.இளம் வயதினர் ஒருவரை ஒருவர் உணர்வால் தூண்டுவதும், பாதிப்பதும் அவர்களுக்கு ஒரு சுதந்திர உணர்வைக் கொடுக்கிறது.
இந்தச் சமூக அழுத்தம் என்பதைத் தடுப்பது கடினம். ஆனால், இதில் சில நன்மைகளும் உள்ளன. ஒருவரை ஒருவர் எதிர்மறையாகப் பாதிப்பது போலவே நல்லவிதமாகவும் பாதிக்கவும் வாய்ப்புள்ளது. வளரும் இளைஞர்கள் இவ்விதமாக சமூக நலன் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு கட்டலாம், போட்டி போட்டுக்கொண்டு நன்றாகப் படிக்கலாம், பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொள்ளலாம். தன் வயதுக் குழுவில் உள்ளவர்களிடம் பரஸ்பரம் நல்ல பெயர் வாங்க விரும்புவதே, அதாவது சமூக அழுத்தமே இதுபோன்ற நல்ல விஷயங்களையும் தூண்டுகிறது.
சில சமயம், சில இளைஞர்கள் தங்கள் குழுக்களில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திலேயே ஒரு குறிபிட்ட விதத்தில் நடந்துகொள்வார்கள், செயல்படுவார்கள், உடை உடுத்துவார்கள். இதுபோன்ற போக்கு அவர்களுக்கு அசௌகரியத்தைக் கொடுத்து அவர்களுக்குள் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.
பதின் பருவத்தினரும் இளைஞர்களும்
இளைஞர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் விளைவுகளைப் பற்றி எண்ணிப்பார்க்காமல் எதிர்வினைபுரிகிரார்கள், இப்படிச் செய்வதன் மூலம் உடனடியாக ஒரு திருப்தி உணர்வையும் அடைகிறார்கள். “செய்துதான் பார்ப்போமே” என்ற ஒரு உணர்வு அதிக போதையானது, பல சமயங்களில் இளைஞர்கள் இதில் சிக்கிக்கொள்வதுண்டு. புகைபிடித்தல், மதுப்பழக்கம், போதைப்பழக்கம் போன்றவையும் பாலியல் உறவுக்குத் தயாராகும் முன்பே குறைந்த வயதில் பாலியல் செயல்களில் ஈடுபடுதல் போன்ற பல்வேறு பழக்கங்களுக்கு இத்தகைய அழுத்தமே பெரும்பாலும் காரணமாக உள்ளது. நம்முடன் இருக்கும் எல்லோரும் இதையெல்லாம் செய்கிறார்கள், அப்படியானால் அது நன்றாக இருக்கும் என்கிற ஒரு தவறான எண்ணமே இச்செயல்களுக்கு அடிப்படையாக உள்ளது. ஒரே வயதுடைய சகாக்கள் சொல்வதைக் கேட்பதும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதும் மனித இயல்பு.
இளைஞர்கள் எப்போதும், சமீபத்திய எலக்ட்ரானிக் சாதனங்களை (கேட்ஜெட்டுகள்) வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள், விளம்பரத் துறையோ, எது புதியது என்று அவர்களுக்குத் தொடர்ந்து கூறிவரும்.
சமூக அழுத்தத்திற்கு எதிர்வினையாற்றுதல்
பெற்றோர் தாக்கத்தை ஏற்படுத்தி குழந்தைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழாவிட்டால், அதைச் சமூகம் செய்யும். ஆகவே இளைஞர்கள் வளரும் காலகட்டத்தில், அவர்களின் பெற்றோரின் ஈடுபாடு இருந்தால் தான், இந்தச் சமூக அழுத்தத்தை அவர்கள் நல்லவிதத்தில் கையாள முடியும்.
இளைஞர்கள் தங்களைச் சுற்றிலும் உள்ளவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் இறுதியில் அதன் அடிப்படையில் செயல்படுவதா இல்லையா என்பது அவர்களின் முடிவே ஆகும்.
இந்த அழுத்தத்தை அணுக ஒரு குறிப்பிட்ட உத்தி என்று எதுவும் இல்லை, ஆனால் இதைக் கையாள ஒரு முதிர்ச்சி தேவைப்படும்.
நீங்கள் நீங்களாக இருங்கள் – உங்கள் நண்பர்களிடம் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, உங்களுக்கு சௌகரியமாக இல்லாததைச் செய்ய வேண்டாம்.
மறுக்கக் கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்கள் கூறும் எல்லாவற்றையும் நீங்கள் சம்மதித்து ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதில்லை.உங்களை நீங்களாகவே ஏற்றுக்கொள்ள பிறர் கற்றுக்கொள்ளட்டும்.