இன்றைய சமூக சூழல் பாதிக்கப்படும் பெண்ணுக்கு ஆதரவானதாக மாறிக் கொண்டு வருவது ஆரோக்கியமானது. இதைப் பற்றிய விழிப்புணர்வு இன்றைக்கு அதிகரித்திருக்கிறது என்றாலும் அது இன்னமும் பரவலாக்கப்பட வேண்டும். இன்றைக்கும் இது போன்ற துன்புறுத்தலை, அத்துமீறலை வெளியில் சொல்ல முடியாமல் தனக்குள்ளாகவே வைத்துக் கொள்ளும் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். இது போன்ற வன்முறைகளுக்கு ஆட்படுகிறவர்கள் மன அழுத்தத்துக்கும், குழப்பத்துக்கும் ஆளாவார்கள்.
இந்த வன்முறையை சகித்துக் கொள்வதா அல்லது எதிர்ப்பைத் தெரிவிப்பதா என்கிற குழப்பம் அவர்களுக்கு இருக்கும். முதலில் இது வன்முறைதானா என்பதை அவர்கள் உணரவே சில காலம் தேவைப்படும். இந்த வன்முறையை எதிர்கொள்ள முடியாமல் நிறைய பேர் பணியிலிருந்து விலகி விடுவார்கள். சிலருக்குத் தற்கொலை எண்ணம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. Post Traumatic Stress Disorder என்று சொல்லப்படும் பேரழிவிலிருந்து மீண்டு வந்தவர்களின் மனப் பிரச்னைக்கு நிகராகவும் ஆளாகலாம்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்தே இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் இது குறித்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அனைவரிடமும் சரியான முறையில் கம்யூனிகேட் செய்ய வேண்டும். வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்தால் அதனை துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும்.
தன்னிடம் ஒருவர் இப்படியாக நடந்து கொள்வதைத் தான் விரும்பவில்லையென்றால் அதை அவரிடம் வெளிப்படுத்தி விட வேண்டும். தனி மனிதராக மட்டும் இதனை எதிர்கொள்ள முடியாது. அதற்கு சட்டம் மற்றும் அமைப்புகளின் உதவியும் தேவை. அதற்கான சாத்தியங்கள் இப்போது அதிகரித்திருக்கின்றன. என்பதால் பிரச்னையை வெளிப்படுத்தும் மன நிலைக்கு அனைவரும் தயாராக வேண்டும். தவிர பெண்கள் இச்சட்டத்தை தனிப்பட்ட காழ்ப்புக்காக தவறாக பயன்படுத்தி விடக்கூடாது.