பிறந்த குழந்தைக்கும், தாய்க்கும் இடையேயான தீண்டல், காதலிக்கும், காதலனுக்கும் இடையே உருவாகும் தீண்டல், கோபத்தில் மனைவியின் கன்னத்தை பதம் பார்த்த பின்னர் கணவன் அவளை அரவணைக்க முயலும் தீண்டல், தோழியும், தோழனும் அள்ளி நகையாடும் தீண்டல் என தீண்டலில் பல வகை இருக்கின்றன.
தீண்டல் இல்லாத உறவே இல்லை. ஆனால், அது தீய செயலுக்கானதாக இருக்க கூடாது. நமது சமூகத்தில் பெண் பருவமடைந்த பிறகு தீண்டல் ஒரு தீண்டாமை செயலாகிவிடும்.
கட்டிக்கொடுக்கும் வரைக்கும், வயித்துல நெருப்ப கட்டிட்டு இருக்க வேண்டியதா இருக்கு என பெற்றோரே கூறுவதை நாம் கேட்டிருப்போம்.
முத்தம், அரவணைப்பு, சமாதான வார்த்தைகள் போல, தீண்டலும் அன்பின் ஒரு வெளிப்பாடு தான். ஓர் ஆண்மகனின் தீண்டல் பெண்ணின் வாழ்வில் எத்தகைய பங்கு கொண்டிருக்கிறது….?
அழுகை!
மனரீதியாக, உடல் ரீதியாக காயப்பட்டு கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் வேளையில், விழியோரம் வழியும் நீரை துடைத்து, அவளது கன்னங்களை கரங்களால் ஏந்தும் போதிலான தீண்டல் அவளது கண்ணீரை மட்டுமல்ல, கவலை, காயத்தையும் சேர்த்து போக்கும் அருமருந்து. இத்தகைய தீண்டல் உண்மையான அன்புடன் பழகும் நபர்களிடம் இருந்து மட்டுமே கிடைக்கும்.
பாதுகாப்பு!
நட்பாகே இருந்தாலுமே கூட, பெண்கள் தங்கள் தோள் மீது ஆண்கள் கைபோட்டு பேச அனுமதிக்க மாட்டார்கள். இது, நம் ஊர்கள் எங்கிலும் காண முடியும். ஒரு ஆணை, ஒரு பெண் தன்னை தீண்ட அனுமதிக்கிறாள், அவனது தீண்டலை ஏற்றுக் கொள்கிறாள் என்றால், அவனை, அவனுடன் இருப்பதை பாதுகாப்பாக உணர்கிறாள் என்பதன் பொருளாகும். அத்தகைய பாதுகாப்பு உணர்வை ஆண்கள் கேடுத்துவிடவும் கூடாது, அதை பயன்படுத்தி தவறாக அணுகுதலும் கூடாது.
இச்சை மட்டுமல்ல…
பலரும் தீண்டல் என்றாலே அது உடல் கூடுதலின் முதல் அடி என எண்ணுவது தவறு. குழந்தையின் கன்னம் தடவி மகிழ்தல் கலவுவதற்கு அல்லவே! தீண்டல் என்பது சோகம் போக்கும் கருவி, இன்பத்தை அதிகரிக்கும் அருவி. எனவே, தீண்டல் எனும் அன்பின் வெளிப்பாட்டை வெறும் இச்சையின் படிக்கட்டாக மட்டும் காணவேண்டாம்.
உரசிக் கொள்வதற்கல்ல…
இருதேகம் உரசி விறைப்பு அடைவது அல்ல தீண்டல், அது மோகம்! ஓர் பெண்ணின் தேகத்தை உரசி மகிழும் கீழ்தர ஆசை ஓர் ஆணின் குணாதிசயம், பாத்திரத்தை ஆணிவேர் வரை பாதிக்கும் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். பெண் தேகத்தை வெறும் சதை பிண்டமாக கருதுவோர், அவள் குருதியிலிருந்து வெளிவந்து உயிர் பிண்டம் தான் நாம் அனைவரும் என்பதையும் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
அம்மா, தங்கை, மனைவி, மகள் என ஆண், பெண் மத்தியிலான எல்லா உறவிலும் தீண்டல் அன்பின் வெளிப்பாடாக பயன்படுத்தும் ஆண், அதுவே உறவுமுறையற்ற மூன்றாம் நபராக ஒரு பெண் தன் வாழ்வில் கடந்து செல்கையில் மட்டும் அதே தீண்டலை ஒரு இச்சை கருவியாக உபயோகப்படுத்துகிறான்.
அந்த மூன்றாம் நபரான பெண்ணும், வேறு ஒருவரின் அம்மா, தங்கை, மனைவி, மகளாக இருக்கலாம். உங்களின் அம்மா, தங்கை, மனைவி, மகள் வேறொரு ஆணுக்கு மூன்றாம் நபராகவும் இருக்கலாம்.
சமூகத்தை திருத்தும் முன்னர், நாம் திருந்த வேண்டும் அல்லவா.
முத்தம், அரவணைப்பு போல தீண்டலும் ஒரு அன்பின் வெளிபாடு தான். அதை சரியாக உணருங்கள். உங்களை ஒரு பெண் தீண்ட அனுமதிக்கிறாள் என்றால் அது அவள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, மற்றும் உங்களிடம் அவள் உணரும் பாதுகாப்பின் வெளிப்பாடு என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.