Home உறவு-காதல் மனம் விட்டு பேசுங்கள் தம்பதிகள் உறவு நெருக்கமாகும்

மனம் விட்டு பேசுங்கள் தம்பதிகள் உறவு நெருக்கமாகும்

146

காதல் உறவு:உரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்’ என்கின்றனர் உலகளாவிய மனநல மருத்துவர்கள். பலருக்கும் தங்கள் மனம்விட்டு உரையாடாத காரணத்தால்தான் மனஅழுத்தம் ஏற்படுவதாகக் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடிதம் மட்டுமே உரையாடுவதற்கான கருவியாக முன்னர் இருந்தது. அதன் பிறகு தொலைபேசியின் வருகை ப்ரியமானவர்களின் குரலை எவ்வளவு தொலைவில் இருந்தாலும் கேட்டு ஆசுவாசம் கொள்ளச்செய்தது. ஆனால், தற்போது உரையாடுவதற்கும் உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இருந்தும் உறவுகளின் ஆயுள்காலம் குறுகியகால அளவிலேயே முடிவடைகிறது. முன்பைவிட ஆண்-பெண் நட்பு குறித்த புரிதல்கள் அதிகரித்திருந்தும் இந்தச் சிக்கல் உலவுகிறது.

வேலைபார்க்கும் இடங்களில், பேருந்துகளில், ரயில்களில் என எல்லா இடங்களிலும் இணையம் நம்முடனேயே பயணிக்கிறது. சக மனிதர்களுடன் பேசுவதைத் தவிர்த்து இணையத்திலேயே மூழ்கிக்கிடக்கிறோம் என்பதே இந்தத் தலைமுறை மீதான குற்றச்சாட்டு. உண்மையில் இணையமும் அலைபேசியும் மனிதர்களை இணைப்பதைத்தான் முழுநேரப் பணியாகச் செய்துகொண்டிருக்கின்றன. தினம் தினம் புதுப்புது அப்ளிகேஷன்களை ஆண்ட்ராய்டு நமக்குத் தருவித்துக்கொண்டே இருக்கிறது. அவற்றில் பல ஆப்-கள் புதிய மனிதர்களைத் தேடிக் கண்டடைவதற்கும் உரையாடுவதற்கும் பயன்படுகின்றன. இருப்பினும் நம் உறவுநிலைகளில் விரிசல் ஏற்படுவதும், அதைச் சரிசெய்ய இயலாமல் தவிப்பதும் தொடர்கின்றன.

பெரும்பாலும் இன்றைய தலைமுறையினர் இந்த உறவுச்சிக்கல்களை இரண்டுவிதமாகக் கையாள்கிறார்கள்.

1) முரண்பாடான கருத்துகள் ஏற்படும்போதும் சுமுகமாகப் பேசிப் பிரிவது.

2) பேசினால் சச்சரவு அதிகமாகும் என எண்ணி, பேசாமலேயே கடந்து போதல்.

முதல் பாயின்ட்டில் உரையாடல் ஏற்படுவதால், அதில் சிக்கல் தீர வாய்ப்புள்ளது. உதாரணமாக, சின்ன விஷயத்துக்காக ஏற்படும் சண்டை, உடனே பேசித் தீர்த்துக்கொள்ளப்படும். அந்த உரையாடல் உடனே நிகழ்வதன் மூலம் உறவின் ஆழம் இருதரப்பினருக்கும் உணர வாய்ப்பு ஏற்படும். இதன்மூலம் இயல்பாகவே உறவுகளில் ஏற்படும் வெற்றிடத்தைத் தவிர்க்க இயலும். மேலும், ஒருவருக்கு மட்டும் அந்த உறவில் மனக்கசப்பும், மற்றவருக்கு உறவைத் தொடர வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும்பட்சத்தில் சரியான புரிதலைக் கொடுக்கும்.

இரண்டாவதாக, பேசாமலேயே கடந்து போவதில் ஏற்படும் சிக்கல் மோசமானது. `இனிமேல் பேசி என்ன இருக்கு!’ என நினைத்துப் பேசாமலேயே உறவைத் துண்டித்தல். இது மனதில் நாம் அறியாமலேயே ஒருவித வெறுமையை மெள்ள ஏற்படுத்தும். அந்த வெறுமையைப் போக்குவதற்காகவே புதிய செயல்களில் ஈடுபடத் தொடங்குவோம்.

புதிதாக வேறு ஏதாவது ஒரு நபருடன் பேசத் தொடங்குவோம். அதன் பிறகான எல்லா உறவுகளிலும் நாம் பேசாமல் போனவர்களின் சாயலை நாம் அறியாமலேயே தேட ஆரம்பிப்போம். தங்கள் நண்பர்களுடன் சண்டைபோட்டுவிட்டு `ஒரு வருஷமா பேசலை’ எனச் சொல்லிக்கொள்ளும் நிறையபேரைச் சந்தித்திருப்போம். அவர்கள் உண்மையில் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது ஒரு வருடமாகப் பேசாத அந்த உறவை நினைத்தபடியே இருப்பர்.

எல்லா உறவுகளுக்கும் தினசரி உரையாடல் அவசியம். அன்றைய பொழுதின் அத்தனை சுக, துக்கங்களையும் பகிர்ந்துகொள்ள இந்த உரையாடல் இன்றியமையாத ஒன்று. மழைநாளின் தேநீரைப்போல பிடித்தமானவர்களின் உரையாடலும் ஏகாந்தமானது.