பாலியல் தகவல்:மனிதர்களைப் பொறுத்தவரை, வாழ்நாள் முழுதும் அவர்களின் பாலியல் ஆசை மறைந்துவிடுவதில்லை. பெண்களின் வாழ்வில் மாதவிடாய் நிறுத்தம் என்ற நிலை வந்ததும் அவர்களின் மாதவிடாய் சுழற்சி நின்றுவிடும். ஆனால் உடலுறவுக்கான ஆசை நின்றுவிடுவதில்லை! ஆகவே, மாதவிடாய் நிற்பது என்பது பாலுறவுக்குத் தடையில்லை. இந்த நிகழ்வின்போது என்ன நடக்கிறது என்பதைக் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்!
பாலியல் வாழ்க்கையில் மாதவிடாய் நிறுத்தத்தின் தாக்கம்:
பெண்களின் வாழ்வில் குறிப்பிட்ட வயதில் சினைப்பைகள் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஆகிய செக்ஸ் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடும். அதன் பிறகு சினைப்பை கருமுட்டைகளை வெளியிடாது. திடீரென்று பரவும் வெப்பம், களைப்பு, பெண்ணுறுப்பில் வறட்சி, பாலியல் விருப்பம் குறைதல், உடலுறவின்போது வலி போன்ற பல்வேறு அறிகுறிகளால் உடலுறவிலான விருப்பம் குறையலாம் அல்லது உங்கள் கணவருடன் உடலுறவில் ஈடுபடுவதைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி வயதும், மாதவிடாய் நிறுத்தத்துடன் சம்பந்தப்பட்ட எடை கூடுதல், சோர்வு, எலும்புகள் நொறுங்கும் தன்மை அதிகரித்தல் (ஆஸ்டியோபோரோசிஸ்) மற்றும் உணர்வுரீதியான மாற்றங்கள் (மனநிலை திடீரென்று மாறுதல், எரிச்சல், மன இறுக்கம் போன்றவை) போன்ற அறிகுறிகளும் பாலுறவில் ஈடுபடுவது தொடர்பான உங்கள் நம்பிக்கையையே குறைத்துவிடக்கூடும்.
கவலை வேண்டாம்! மாதவிடாய் நின்ற பிறகு பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த சில குறிப்புகளை இந்தக் கட்டுரை வழங்குகிறது:
# உடலுறவு கொள்ளத் தயங்க வேண்டாம்
மாதவிடாய் நிறுத்தம் என்பது பெண்களின் குழந்தை பெரும் திறனுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது என்பது உண்மையே, ஆனாலும் அது பாலியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி அல்ல. எனவே, முன்பைப் போலவே எப்போதெல்லாம் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஈடுபடுங்கள். எந்தத் தயக்கமும் வேண்டாம். உடலுறவு கீழ் இடுப்புப் பகுதித் தசைகளை வலிமைப்படுத்துகிறது, மன அழுத்தத்தைக் குறைக்கிறது, நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது, உயிருக்கே ஆபத்தாகின்ர மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது. ஆகவே, எவ்வளவு காலம் வரை முடிகிறதோ, அதுவரை நீங்கள் தாராளமாக உடலுறவில் ஈடுபடலாம்.
# கணவருடன் மனம்விட்டுப் பேசுங்கள், நெருக்கமாக இருங்கள் (Communicate and stay connected with your husband)
மாதவிடாய் நிற்கும்போது, மன இறுக்கம் ஏற்படுவது சகஜமே. இது பாலியல் விருப்பத்தைக் குறைத்துவிடக்கூடும். உங்கள் கணவருக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது, ஆனால் நீங்கள் அவரை நிராகரிப்பதுபோல் அவருக்குத் தோன்றும். இதனால் உறவில் விரிசல்களும் பிரச்சனைகளும் ஏற்படலாம். ஆகவே உங்கள் கணவருடன் மனம் விட்டுப் பேசுங்கள். உங்கள் மனநிலை மாற்றங்கள், பாலியல் விருப்பம் குறைதல் போன்றவற்றுக்கான காரணங்களைக் குறித்து அவருக்குப் புரியவையுங்கள். முழு உடலுறவில் ஈடுபடாவிட்டாலும் சிறு சிறு பாலுறவு செயல்களில் ஈடுபடலாம். உதாரணமாக உணர்ச்சியைத் தூண்டும் மசாஜ், நடனம், ஸ்பரிசம், சீண்டல்கள், கட்டியணைத்தல், முத்தமிடுதல், திருமணமான புதிதில் உங்கள் காதல் வாழ்க்கையும் பாலியல் வாழ்க்கையும் எப்படி இருந்தது என்பது பற்றிப் பேசுதல் போன்றவற்றைச் செய்யலாம். இதனால் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் உள்ள நெருக்கம் மேம்படும்.
# மருத்துவரிடம் ஆலோசித்து தீர்வு காணுங்கள்
உங்கள் கணவருடன் உளவியல் ஆலோசனை நிபுணரிடம் அல்லது மகளிர் நலவியல் மருத்துவரிடம் (கைனக்காலஜிஸ்ட்) சென்று ஆலோசனை பெறுங்கள். இதனால் உங்கள் மனநிலை மாறுவதற்கும் உடலுறவிலான விருப்பம் குறைவதற்கும் என்னென்ன காரணங்கள் உள்ளன என்பதும் இயல்பான பாலியல் வாழ்க்கையில் குறுக்கிடும் பிற பிரச்சனைகள் பற்றியும் அவருக்குப் புரியும். பெண்ணுறுப்பில் வறட்சியைக் குறைக்க வழவழப்புக் கூட்டும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம் அல்லது திடீர் வெப்ப அலைகளைக் (ஹாட் ஃபிளாஷ்) குறைக்க ஈஸ்ட்ரோஜென் மாத்திரைகளைப் பரிந்துரைக்கலாம். சிலசமயம், மூளையைத் தூண்டி பாலியல் தூண்டுதல்களுக்கு அதிக எதிர்வினை புரியும் வகையில் உங்களை மாற்றுவதற்காக டெஸ்டோஸ்டிரோன் பேட்ச் அல்லது ஜெல் பரிந்துரைக்கப்படலாம் அல்லது மனநிலை மாற்றங்கள், மன இறுக்கம் போன்றவற்றைச் சமாளிக்க ஆன்டி-டிப்ரசன்ட் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். இந்த நடவடிக்கைகள் மாதவிடாய் நிறுத்தக் காலத்தில் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கவும் பாலியல் வாழ்க்கையை சிறப்பாக்கவும் உதவும்.
# ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை
ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை வாழ்வதால் ‘நல்ல உணர்வைக் கொடுக்கும்’ ஹார்மோன்கள் உடலில் சுரக்கும். இவை நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கவும் உடலை வலிமையாக வைத்திருக்கவும் உதவும். ஊட்டச்சத்துள்ள உணவுப் பழக்கம், போதிய உறக்கம், மது, புகை, போதைப் பொருள் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் போன்ற வழிமுறைகளின் மூலம் இன்னும் உங்கள் உடல் வலிமையை அதிகப்படுத்தலாம். உணர்வுரீதியான வலிமை பெற, ஆழ்ந்து சுவாசித்தல், யோகா, ஓவியம் வரைதல், நடனம் போன்ற ஏதேனும் செயல்பாடுகளில் ஈடுபடுதல் போன்றவற்றைச் செய்யலாம். இவற்றால் பலன் கிடைக்காவிட்டால் மருத்துவ ஆலோசகரிடம் சென்று ஆலோசனை பெறத் தயங்க வேண்டாம்.
# நீங்களே செய்துபாருங்கள்
அப்போதும் உங்கள் கணவருடன் உடலுறவில் ஈடுபட உங்களுக்குத் தயக்கமாக இருந்தால், ஓரிரு முறை சுய இன்பம் செய்துகொள்ளலாம். இதனால் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் கணவருடன் உடலுறவில் ஈடுபட அது உங்களைத் தயார்ப்படுத்தவும் உதவும்.
சுய இன்பம் செய்துகொண்டால் கணவருடனான நெருக்கம் குறைந்துவிடும் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் இந்தக் கருத்து எப்போதும் உண்மையாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை. உங்கள் இணையருடன் உடலுறவுகொள்ளும் ஆசையை அதிகரிக்கவும், உறவை இன்னும் மேம்படுத்தவும் சுய இன்பம் உதவுகிறது என்று கூறப்படுகிறது.