பொதுவாக வெயில் அதிகம் இருந்தாலே, அதிக வியர்வையின் காரணமாக முகத்தில் எண்ணெய் வழிவது போன்று இருக்கும்.
அதிலும் எண்ணெய் பசை சருமத்தினருக்கு என்றால் சொல்லவே வேண்டாம், நிலைமை மிகவும் படு மோசமாக இருக்கும்.
எண்ணெய் பசை சருமத்தினர் மட்டுமின்றி, அனைத்து வகை சருமத்தினரும் வெளியே சுற்றினால், பல்வேறு சரும பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும்.
எனவே சருமத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தி, சருமத்தை அழகாகவும், பிரச்சனைகளின்றியும் வைத்துக் கொள்ள உதவும் சில ஆயுர்வேத டிப்ஸ்களைக் கொடுத்துள்ளது.
தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்
1/2 கப் தயிருடன், 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்பட்டு, ப்ளீச்சிங் செய்த தோற்றத்தைக் கொடுக்கும்.
பப்பாளி
பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனால் பப்பாளி சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்வதோடு, எண்ணெய் சுரப்பையும் சரிசெய்ய உதவும்.
துளசி ஃபேஸ் மாஸ்க்
துளசி, எண்ணெய் பசை சருமத்தினருக்கு மட்டுமின்றி, பருக்களைப் போக்கவும், இதர சரும பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவும். அதற்கு சிறிது துளசி இலைகளை எடுத்து, நீரில் கழுவி, அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
வேப்பிலை
வேப்பிலையில் உள்ள மருத்துவ குணத்தால், ஆரோக்கிய பிரச்சனைகள் மட்டுமின்றி, சரும பிரச்சனைகளும் மாயமாய் மறையும். குறிப்பாக எண்ணெய் பசை சருமத்தினருக்கு இது மிகவும் சிறப்பான பொருள். அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் கோடையில் பருக்கள் வருவதைத் தடுக்கும்.
முல்தானி மெட்டி
ஆயுர்வேதத்தின் படி, முல்தானி மெட்டி சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சிவிடும். ஆகவே முல்தானி மெட்டி பொடியை, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், முகத்தில் வழியும் எண்ணெய் பசை நீங்கி, பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் கனிமச்சத்துக்கள், சருமத்தில் உள்ள எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். அதற்கு ஆரஞ்சு பழத்தை பாதியாக வெட்டி, சாறு எடுத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.
சந்தன பவுடர் சந்தன பவுடரும் சருமத்தில் சுரக்கும் அதிகளவு எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்தும். அதற்கு 2 ஸ்பூன் சந்தன பொடியுடன், சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும்.
பால்
பாலும் சருமத்தில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவும். ஆகவே தினமும் பாலை பஞ்சுருண்டையில் நனைத்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதும் தடுக்கப்பட்டு, சருமம் பிரகாசமாக இருக்கும்.