தாம்பத்திய நாட்டம்:அதிக ஆர்வம் கொண்ட ஒரு நபருக்கு மறுப்புத் தெரிவிக்கப்படும் போது உறவில் தேவையற்ற வெறுப்பு உண்டாகும் வாய்ப்புகள் உள்ளன
கணவன், மனைவிக்கு இடையேயான அன்பிறகு தாம்பத்ய உறவும் முக்கிய காரணம். தாம்பத்ய உறவில் கணவன், மனைவிக்கு இடையேயான தேவைகள் மாறுபடலாம். அதனால், உறவில் சிக்கல் ஏற்படாதவாறு தம்பதியர் தங்களுக்குள்ளே ஒரு புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும்.
வேறுபாடுகளுக்கான காரணங்கள்:
1. தொடர்ச்சியான உறவு:
ஒரு நாளைக்கு எத்தனை முறை தாம்பத்ய உறவில் ஈடுபடலாம் என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபட்டதாக இருக்கும். கணவன், மனைவிக்குள்ளும் இந்த மாறுபாடுகள் இருக்கும். உறவின் ஆழம் பொறுத்து இதன் நடைமுறை மாறும். புதிதாகத் திருமணம் ஆனவர்கள் தாம்பத்ய உறவில் தினமும் ஈடுபடுவார்கள். சில நேரம் இதுவும் மாறுபடலாம். ஆனால், தம்பதிகளில் யாரேனும் ஒருவர் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பது உறவில் விரிசல் விழ வழிவகுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
2. ஆர்வம்
தாம்பத்ய வாழ்வில் ஆர்வம் என்பதும் கூட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபடும். அதிக ஆர்வம் கொண்ட ஒரு நபருக்கு மறுப்புத் தெரிவிக்கப்படும் போது உறவில் தேவையற்ற வெறுப்பு உண்டாகும் வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் விருப்பமே இல்லாமல் இருக்கும் இணையை வற்புறுத்துவது என்பது கூடுதல் அழுத்தத்தையும், மனச்சுமையையும் அளிக்கும்.
3. புதிய முயற்சிகள்
தாம்பத்ய உறவில், தம்பதிகள் எடுக்கும் புதிய முயற்சிகள் எல்லா நேரமும் இருவருக்கும் பிடித்த வகையில் அமைவதில்லை. யாரேனும் ஒருவருக்கு இந்தப் புதிய முயற்சியில் மாற்றுக்கருத்து ஏற்பட்டால்கூட அது உறவில் நம்பிக்கையின்மையையும், நிராகரிப்பையும் ஏற்படுத்திவிடும்.
எப்படி சரி செய்யலாம்?
4. புரிந்து செயல்படுங்கள்
தாம்பத்ய உறவைப் பொறுத்தவரையில் தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் இருக்க வேண்டும். ஒருவருடைய தேவையை மற்றவர் புரிந்துகொள்ள வேண்டும். மற்றவருக்கான தேவை நம்மிலிருந்து மாறுபட்டு இருக்கும் என்ற புரிதலும் இருத்தல் அவசியம். தேவையை உணரத் தொடங்கும் போது விரிசல்கள் குறைகிறது.
5. நிறைய பேசுங்கள்:
இணையருடன் தொடர்ந்து பேசுவது உறவை வலுப்படுத்தும். ஒருவருக்கு ஒருவர் சுயமரியாதையை சீண்டுவது போல் பேசுவது கூடாது. அதேபோல், அதிகாரம் செலுத்துவது, கட்டளையிடுதல் போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். இருவருக்கும் குழப்பங்களும், தேவைகளும் இருக்கும் சூழ்நிலையில் ஒருவருக்கு ஒருவர் மனம்விட்டு பேசிக்கொள்வது உறவுக்கு பலம் தரும்.
6. கட்டாயப்படுத்துதல் கூடாது:
தாம்பத்ய உறவில் கட்டாயப்படுத்துதல் என்ற ஒன்றே இருக்கக்கூடாது. உங்களுக்குள் உடல் அளவிலான புரிதலும் மனதளவிலான ஒன்றுதலும்தான் உறவை சிறப்பாக்கும். தவிர, கட்டாயப்படுத்துதல் என்பது கணவன் – மனைவி உறவையே சீர்குலைக்கும்.