குழந்தைகளுக்கு போதிய அளவு தூக்கமில்லாமல் இருந்தால் அவர்கள் மனப்பதட்டத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாவர்கள் என்று ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. குழந்தைகளுக்கு குறைந்தது 10 வயது வரை 12 மணி நேர தூக்கம் அவசியம்.
தொடர்ந்து தூக்கமின்மை அல்லது போதிய தூக்கமில்லாமல் இருக்கும்போது, குழந்தைகள் உணர்வு சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என்று ஹூஸ்டன் பல்க்லைக் கழகம் ஆய்வினை சமர்ப்பித்திருக்கிறது.
இந்த ஆய்விற்காக தூக்கமின்மையால் அவதிப்படும் 7-11 வயது வரை உள்ள குழந்தைகளிடம் பரிசோதித்தபோது, இந்த பிரச்சனையால் அவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக காணப்படுகிறது. மேலும் நேர்மறை எண்ணங்கள் வரவிடாமல் தடுக்கிறது. இரண்டு நாள் தூக்கமில்லாமல் இருப்பதால் அவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகமானதோடு, நினைவுத் திறனும் மிகவும் பின்தங்கியிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
எப்படி உடற்பயிற்சி, நல்ல ஆரோக்கியமான உணவு, பற்கள் பாதுகாப்பு முக்கியமோ, அதே அளவிற்கு தூக்கமும் குழந்தைகளுக்கு அவசியம் என்று கூறுகின்றனர். உங்கள் குழந்தைகள் காலையில் எழுவது மிக தாமதமாக இருந்தால், அல்லது பகல் முழுவதும் தூங்கி வழிந்தால், அவர்களுக்கு இரவில் போதுமான தூக்கம் இல்லை என்று அர்த்தம்.
தூக்கமில்லாமல் இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். தாமதமாக படுக்கைக்கு செல்வது, அல்லது தூக்கத்தில் இடையூறுகள் இருப்பது என பல காரணங்கள் இருக்கலாம். இவற்றை என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை சரி செய்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.