முழு தாம்பத்ய சுகம் கிடைக்காததால் தம்பதிகள் டைவர்ஸ் பெறும் போக்கு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. சராசரியாக 20 முதல் 30 சதவீத திருமணங்கள், ஆண்மை குறைபாடு காரணமாக விவாகரத்தில் முடிகின்றன என்கிறது லேட்டஸ்ட் சர்வே. செக்ஸ் தொடர்பான பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் அமைப்பான ‘ஆல்பா ஒன் ஆண்ட்ராலஜி குரூப்’ டெல்லியில் செயல்படுகிறது.
இந்த அமைப்பு சமீபத்தில் ஒரு சர்வே நடத்தியது. ஆண்மை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 2,500 பேரிடம் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை குறித்து கேள்விகள் கேட்டு பதில் பெறப்பட்டது. சர்வேயில் தெரியவந்த தகவல்கள் குறித்து ஆல்பா அமைப்பின் தலைவரும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணருமான அனூப் திர் மற்றும் எண்டோகிரைனாலஜிஸ்ட் சி.எம்.பத்ரா ஆகியோர் கூறியதாவது:
40 வயதை கடந்தவர்களில் 50% பேரும், 40 வயதுக்கு கீழ் 10% பேரும் ஆண்மை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2500 பேரில் சராசரியாக 5 -ல் ஒருவர் விவாகரத்து ஆனவர். 10 பேரில் ஒருவர் பொதுவான உடல்நிலை பாதிப்பு காரணமாக டைவர்ஸ் பெற்றவராக உள்ளார். ஆண், பெண் இருவருக்கும் அதிக பொறுமை, முயற்சி, விட்டுக் கொடுத்தல் ஆகியவை இருந்தால்தான் மணவாழ்க்கை, தாம்பத்ய வாழ்க்கை சந்தோஷமாக அமையும்.
‘என் மண வாழ்க்கை திருப்தியாக இல்லை’ என்று ஆணோ, பெண்ணோ அல்லது இருவருமே கூறுகிறார்கள் என்றால் அவர்கள் இடையே தகவல் பரிமாற்றம் மோசமாக இருந்திருக்கிறது. அவர்கள் வெளிப்படையாக, மனம்விட்டு பேசுவதில்லை என்று அர்த்தம். முக்கியமாக செக்ஸ் உள்ளிட்ட விஷயங்களில் அவர்களது எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாததும் முக்கிய காரணம். இத்தகைய திருமணங்கள்தான் முறிகின்றன. சராசரியாக 20 முதல் 30 சதவீத திருமணங்கள், ஆண்மை குறைபாடு காரணமாக விவாகரத்தில் முடிகின்றன.
திருமணமான தம்பதியர் சராசரியாக ஆண்டுக்கு 58 முறை (அதாவது, வாரம் ஒருமுறை என்பதைவிட கொஞ்சம் அதிகம்) செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒரேயடியாக குறைந்தால் உங்களிடமோ, பார்ட்னரிடமோ ஏதோ பிராப்ளம் என்று உறுதியாக சொல்லலாம். ஆண்மை குறைபாடு ஒரு உடலியல் பாதிப்பு. ஒரு நோயாக கருதி, மருந்து எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, மனம் ஒடிந்து போக கூடாது.
தனக்கு ஆண்மை குறைபாடு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள ஆணின் ஈகோ தடுக்கிறது. மற்றவர்களை ஏமாற்றுவதோடு தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, சிகிச்சையை ஒத்திப்போடுகிறான். கடைசியில் வேறு வழியின்றி மணவாழ்க்கை முறிந்துபோகிறது. உழைப்பு மற்றும் உடற்பயிற்சிக்கு அதிக வாய்ப்பு இல்லாத சூழல், எல்லாவற்றுக்கும் டென்ஷன் ஆகும் போக்கு, பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருப்பது என நம் வாழ்க்கை முறை பெரிதாக மாறிவிட்டது.
இதுதவிர சிகரெட், மது, உடல் பருமன் அதிகரிப்பு ஆகியவற்றாலும் ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. மருத்துவ ரீதியாக சர்க்கரை நோயும் ஹைப்பர் டென்ஷனும் ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்துகின்றன. சர்க்கரை நோய் இல்லாதவர்களைவிட சர்க்கரை நோயாளிகள் 10-15 ஆண்டுகள் முன்னதாகவே ஆண்மை குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். ரத்த அழுத்தத்தை குறைக்க சாப்பிடும் மருந்து, மாத்திரைகளால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.