ஃப்ளூ, சளி தொல்லை இவற்றிலிருந்து தப்பிக்க வைட்டமின் ‘சி’ அதிகம் சிபாரிசு செய்யப்படுவதனை பார்க்கின்றோம். நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் ‘சி’ மிகவும் முக்கியமானது. இவ்வரிசையில் ஆய்வுகளின்படி வைட்டமின் ‘டி’ நோய் எதிர்ப்பு சக்தியாக நன்கு செயல்படுகின்றது என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வைட்டமின் ‘டி’ வீக்கத்தினை வெகுவாய் குறைக்க வல்லது. புற்று நோய் செல்களை அழிக்க வல்லது. மூளை செயல் திறனுக்கு வெகுவாய் உதவுவது. வைரஸ் கிருமிகளை குறிப்பாக சுவாச மண்டலத்தினை தாக்கும் வைரஸ் கிருமிகளை வெகுவாய் எதிர்க்கக்கூடியது. எனவே தான் ஃப்ளூ, சளித்தொல்லை இவை நன்கு தவிர்க்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனை சூரிய ஒளி வைட்டமின் என்றே குறிப்பிடுவார்கள். சூரிய ஒளி சருமத்தின் மீது வரும்பொழுது ரசாயன மாற்றங்களால் வைட்டமின் ‘டி’ உருவாகின்றது. இதனால் தான் கோடை காலங்களில் ஃப்ளூ, சளி கம்மியாக இருக்கும். ஏனெனில் அதிக சூரிய ஒளி இருக்கும். உலக அளவிலேயே வைட்டமின் ‘டி’ குறைபாடு அநேகருக்கு இருப்பதால் மருத்துவ ஆலோசனைபடி சத்து மருந்தாக சிபாரிசு செய்யப்படுகின்றது. பொதுவில் வைட்டமின் ‘டி’ சத்து குறைபாடு இருந்தால்
* தலைவலி, * சோர்வு, * நீண்ட கால்வலி, * சுவாச உறுப்புகளில் பிரச்சினை, * எலும்பு தேய்மானம், * உயர் ரத்த அழுத்தம், * கவனிப்பதில் குறைபாடு, * இருதய பாதிப்பு, * மன அழுத்தம், * புற்றுநோய் ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.
அன்றாடம் காலை இளம் வெயில் கை, கால்களில் படும்படி 10 நிமிடங்கள் இருப்பது நிறைந்த நன்மை அளிக்கும்.