சிறு வயதில் இருந்தே அக்கறை மற்றும் கண்டிப்போடு பிள்ளைகளை வளர்க்கும்போது கட்டாயமாக எதிர்காலத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட விடாமல் தடுக்க முடியும்.
* ஆண், பெண் பிள்ளைகளின் செயல்பாடுகளை, சிறுவயது முதலே கவனித்து வளர்க்க வேண்டும். எல்லை மீறிய சுதந்திரமும், அளவுக்கு அதிகமான கண்டிப்பும் தவறானது. பிள்ளைகள் அன்றாட செயல்பாடுகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு அவர்களுடன் இணக்கமான நட்பும், வளர்ப்பு முறையும் நம்மிடமும், மற்ற குடும்ப உறுப்பினர்களிடமும் இருக்க வேண்டும்.
* பிள்ளைகளின் பிறந்த நாள் விழாவிற்கு செலவழிக்கும் நேரத்தைவிட, பிள்ளை தேர்வில் தோல்வியடைந்த தருணம் அல்லது ஏதாவது பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் நேரங்களில்தான் அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவழித்து ஆறுதலாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பேசி பிரச்சனையைச் சரிசெய்ய வேண்டும்.
* பிள்ளைகள் கூறும் பிரச்சனையை எடுத்த எடுப்பிலேயே தவறாக கருதி கோபம் காட்டுவதைத் தவிர்த்து, அந்தப் பிரச்சனையைச் சரிசெய்வதற்கான வழிமுறைகளையும், இனி அத்தவறை மீண்டும் செய்யாமல் இருக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள்.
* தன் பிள்ளை தவறான வழியில் சென்றால் அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நல்வழிபடுத்த வேண்டியது பெற்றோரின் முதல் கடமை. பிள்ளை தவறு செய்யும் பட்சத்தில் அவரைத் திருத்தி நல்வழிபடுத்துங்கள். மாறாக காப்பாற்ற நினைத்தால், ஒவ்வொரு முறையும் நம்மை காப்பாற்ற பெற்றோர் வருவார்கள் என்ற எண்ணம் வருவதுடன், தொடர்ந்து தீய வழிக்குதான் செல்வார்கள்.
* பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும், சமூகத்தில் நடைபெறும் ஒவ்வொரு பிரச்சனைகளையும், விஷயங்களையும் தங்கள் ஆண், பெண் பிள்ளைகளுக்கும் ஒரு பாடமாக எடுத்துக்கூற வேண்டும். இதுபோன்ற பிரச்சனை எதனால் நடந்தது என்பதை விளக்கி, அவற்றை எல்லாம் நாம் செய்யாமல் இருப்பதன் மூலம் நாம் தைரியமாகவும், நிம்மதியாகவும் வாழமுடியும் என்ற ஆலோசனைகளைக் கூறுங்கள்.
* ஆண்பிள்ளை ஏதாவது பிரச்சனையில் சிக்கித்தவிக்கும் சூழலிலும், அழும் சூழலிலும், ‘பொம்பள பிள்ளைமாதிரி அழாதே’, ‘நீ ஆம்பளடா’; ‘ஆம்பளத்தனம்’ எனக்கூறி ஆண் பிள்ளைகளிடம் சின்ன வயதிலிருந்தே பெண்களை மட்டம்தட்டி பேசி, ஆணாதிக்க உணர்வை நேரடியாகவும், மறைமுகமாகவும் வளர்க்க வேண்டாம்.
* ஆண், பெண் இருவரும் சரிசமமானவர்கள் என்பதை உங்கள் பிள்ளைகளிடம் சிறுவயதில் இருந்தே அழுத்தமாக கூறுங்கள். ஒரு பெண்ணை எப்படி அம்மாவாக, சகோதரியாக, தோழியாக நினைத்து பழக வேண்டும் என்பதை மகனிடமும், ஓர் ஆணை எப்படி அப்பாவாக, சகோதரனாக, தோழனாக நினைத்து பழக வேண்டும் என்பதை மகளிடமும் சொல்லி வளர்க்கவேண்டும். ஒரு பெண்ணின் ஒப்புதலோடு ஆணும், ஓர் ஆணின் ஒப்புதலோடு பெண்ணும் காதலிக்க உரிமை இருக்கிறது; அதேப்போல உன் காதலை மற்றொருவர் நிராகரிக்கவும் உரிமை இருக்கிறது. அதை நீயும் பக்குவமாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி வளர்க்க வேண்டும்.
இனி வரும்காலங்களில் நம் பிள்ளைகளை நல்ல மனிதர்களாக வளர்த்து, சமூகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நிகழாமலும், அச்ச உணர்வில்லாமலும் வாழ்வோம்.