Home பெண்கள் தாய்மை நலம் முத்துப்பிள்ளை கர்ப்பம் – அதற்கான காரணம்

முத்துப்பிள்ளை கர்ப்பம் – அதற்கான காரணம்

40

மாதவிலக்கு தள்ளிப் போவது முதல் வாந்தி மயக்கம் வரை கர்ப்பம் தரித்திருப்பதற்கான அத்தனை அறிகுறிகளும் இருக்கும்… ஆனால், அது ஆரோக்கியமான கர்ப்பமே இல்லை என ஒருநாள் அந்தக் கர்ப்பிணியின் கனவுகள் கருகிப் போனால்..? முத்துப்பிள்ளை கர்ப்பம் எனப்படுகிற பிரச்னையில் இப்படியொரு சோகம் நிகழும். அதென்ன முத்துப்பிள்ளை கர்ப்பம்? அதற்கான காரணங்கள்… அதன் பின்னணியில் உள்ள பயங்கரங்கள்…

பெண்ணின் கருமுட்டையும், ஆணின் உயிரணுவும் சேர்ந்து கருத்தரித்ததும், அது சாதாரண கர்ப்பமாக உருவாவதுதான் இயல்பு.

அப்படிக் கருத்தரித்த கருவானது சாதாரணமாக வளராமல், நஞ்சு மட்டும் அசாதாரணமாக, குட்டிக் குட்டி நீர்க்குமிழிகள் வடிவில் வளர்ந்து திராட்சைக் கொத்து மாதிரி கர்ப்பப்பையை நிறைத்தாலோ, அதை முத்துப்பிள்ளை கர்ப்பம் என்கிறோம். அதாவது, கட்டி மாதிரியான ஒரு தோற்றம்… ஆனாலும், புற்று நோயில்லாத கட்டி.

முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் 2 வகைகள் உள்ளன. ஒன்று முழுமையானது. இன்னொன்று பார்ஷியல் [partial] எனப்படுகிற பகுதி முத்துப்பிள்ளை கர்ப்பம்.

முழுமையான முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் கருவே இருக்காது, நஞ்சு மட்டும் அசாதாரணமாக இருக்கும். பகுதி முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் ஒரு அசாதாரண கரு உருவாகியிருக்கும். ஆனால், அது பிழைக்காது. நஞ்சிலும் கொஞ்சம் சாதாரணமானதும், கொஞ்சம் அசாதாரணமானதுமான திசுக்கள் காணப்படும். 1,200 அல்லது 1,500 கர்ப்பங்களில் ஒன்று இப்படி முத்துப்பிள்ளை கர்ப்பமாக வாய்ப்பு உண்டு.

காரணங்கள்…

மரபணுக் கோளாறு முதல் காரணம். சாதாரண மனித செல்களில் அம்மாவிடமிருந்து ஒன்றும், அப்பாவிடமிருந்து ஒன்றுமாக 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கும்.

முழுமையான முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் 23 ஜோடிகளுமே அப்பாவிடமிருந்து வந்ததாகவும், அம்மாவுடைய குரோமோசோம்கள் செயலிழந்தவையாகவும் இருக்கும். அதுவே பகுதி முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் அப்பாவிடமிருந்து 46 குரோமோசோம்களும், அம்மாவிடமிருந்து
23 குரோமோசோம்களுமாக மொத்தம் 69 குரோமோசோம்கள் இருக்கும்.

35 வயதுக்கு மேல் கருத்தரிப்பவர்களுக்கு முத்துப்பிள்ளை கர்ப்பமாக 2 மடங்கு வாய்ப்புகள் அதிகம். 40 வயதுக்கு மேல் அது 5 மடங்கு அதிகம். முதலில் ஒரு முத்துப்பிள்ளை கர்ப்பம் தரித்திருந்தால், அடுத்த கர்ப்பமும் அப்படியே உருவாக 1.2 முதல் 1.4 சதவிகிதம் வரை வாய்ப்பு உண்டு.

அதுவே 2 முறைகள் முத்துப்பிள்ளை கர்ப்பம் தரித்திருந்தால் மூன்றாவது கர்ப்பமும் அப்படியே நிகழ 20 சதவிகிதம் வாய்ப்பு உண்டு.