ஒரு குழந்தைக்கு தாயாவதென்பது பெண்கள் மறுபிறப்பு எடுப்பதற்கு சமம் என்பார்கள். இறந்து பிழைப்பதைப் போலத்தான் இந்த பிரசவம் என்பதை உணர்த்துவதற்காகவே மறுபிறப்பு எனக் கூறினார்கள். அந்த அளவிற்கு ஒரு தாயின் உடல் பல்வேறுமாற்றங்கள், வேதனைகள் மற்றும் வலிகளை அனுபவிக்கிறது.
கருவுற்ற நாள் முதல் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் பிறப்பை கருத்திற் கொண்டு இதுவரை உண்ணாத மற்றும் விருப்பமற்ற உணவுப் பொருட்களையும் உண்டு வந்த தாய்க்கு குழந்தையின் முதல் அழுகையை கேட்டதுமே பசி மற்றும் வலி என்பன பறந்து விடும்.
குழந்தை பிறந்த பிறகும் கூட தாய்மார்கள் குழந்தையின் மீதே அதிக அக்கறை செலுத்துவார்கள்.
இருப்பினும், குழந்தையின் ஆரோக்கியத்தை கவனிப்பதைப் போன்றே தாய்மார்களின் ஆரோக்கியத்தை கவனிப்பதும் மிக மிக அவசியம். இந்த கவனிப்பு இல்லாததால் தான் சில தாய்மார்கள் குழந்தை பிறந்து சழல நாட்களிலேயே இறந்து விடுகின்றனர்.
இவ்வாறிருக்க, புதிதாக தாயானவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் விரிவாகப் பார்ப்போம்.
01. தூக்கம்
தூக்கம் என்பது அவசியமான ஒன்று. ஆனால் இரவில் உறங்குவதன்பது புதிதாக தாயானவர்களுக்கு இயலாத காரியம். குழந்தையின் அழுகுரல் மற்றும் அதன் மழலைச் சத்தம் என்பன தாயை உறங்க விடாது என்பது தான் அதன் காரணம். ஆனால், அது விரைவில் பழகி விடும். எனினும் தூக்கம் என்பது தாய்க்கு அவசியமான தொன்று. அதனால் குழந்தை உறங்கும் போது, தாயும் உறங்கி ஓய்வெடுக்க வேண்டும்.
02. அமைதி
பச்சிளம் குழந்தை ஒன்றை கையாள்வதென்பது புதிய அனுபவமாக இருப்பதால் குழந்தைகளின் சில செயல்கள் அல்லது அவர்களுக்கு ஏற்படும் ஒரு சில நிலைமைகள் என்பன தாய்க்கு பதற்றத்தை ஏற்படுத்தும். இந்த பதற்றம் குழந்தைக்கு ஆபத்தாகவும் மாறலாம். அதனால் பதட்டமான சூழலை உணரும் போது மூச்சை இழுத்து விட்டு அமைதிப்படுத்தி கொள்ள வேண்டும். இயன்றவரை பதற்றத்தை போக்கிக் கொள்ள வேண்டும். முடியாத சமயத்தில் மற்றவரின் உதவியை நாடலாம். பதற்றமடையாது தீர்வு காண பழகிக் கொள்ளுங்கள்.
03. தண்ணீர்
புதிததாக தாயானவர் ஒருவர் கட்டாயம் இயன்ற அளவு தண்ணீர் அருந்த வேண்டும். ஏனெனில் குழந்தைக்கு பாலூட்டும் போது தாயின் உடலில் உள்ள நீர் உறிஞ்சப்படுகின்றது. எனவே உடலின் ஈரப்பதத்தை தக்க வைக்க தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம்.
04. மருத்துவ உதவி
தாயின் உடல் நலனில் அல்லது குழந்தையின் உடல் நலனில் வழமைக்கு மாறான மாற்றங்கள் ஏதேனும் ஏற்படின், தயங்காது மருத்துவரை நாட வேண்டும். நேரம் காலம் என்பதை விடுத்து உடனடியாக செயற்படவேண்டும்.
05. உள்ளுணர்வு
குழந்தையை எப்படி கவனிக்க வேண்டும், தாய் தனது உடலை எப்படி கவனிக்க வேண்டும் என்பதைப் பற்றி பாட்டிமார்கள் அல்லது ஏற்கனவே பல குழந்தைகளுக்குத் தாயானவர்கள் எடுத்துரைப்பார்கள். அதே சமயம் தாயான ஒருவரின் உள்ளுணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும். ஒரு குழந்தையை கர்ப்பத்திலேயே நுட்பமாக தொட்டு இரசிக்க முடிந்த தாயால் அதன் பிறப்புக்கு பின்னரும் குழந்தையை புரிந்து கொள்ள முடியும். எனவே தாயின் உள்ளுணர்வில் நம்பிக்கை வேண்டும்.