தாயின் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு முகவரி கிடையாது. யாருடைய முகவரியும் அதற்கு தெரியவும் செய்யாது. ஆயினும், அதற்குத் தெரிந்த ஒரே முகவரி தாய்தான் என்றும், தாயின் குரல் வாயிலாக அது தனக்கு என்று ஒரு பந்தத்தைக் கருவிலேயே உருவாக்கிக்கொள்கிறது என்றும் புதிய மருத்துவ ஆய்வு ஒன்று சோதனை ரீதியாக கண்டுபிடித்துள்ளது.
கருவில் உள்ள குழந்தையால் பார்க்க முடியாது. கேட்க முடியாது. எந்த ஒரு மொழியையும் விளங்கிக்கொள்ளவும் முடியாது. ஆனால் அதற்கு, கருவில் இருக்கும்போதே தன்னைச் சுமந்துகொண்டிருக்கும் அம்மாவின் குரல் மட்டும் தெரியும். மற்ற மனிதர்களின் குரலில் இருந்து தனியாய் பிரித்து தனது அம்மாவின் குரலை மட்டும் அதனால் விளங்கிக்கொள்ள முடியும்.
‘குரல் முகவரி’ என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இந்த மருத்துவ ஆய்வறிக்கை ஆச்சரியமூட்டுகிறது.
ஆய்வின் போக்கு :
குழந்தையின் இதயத் துடிப்பின் கால அளவு முக்கியமாய் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
கருவைச் சுமக்கும் தாய் பேசுகிறாள். அப்போது குழந்தையின் இதயத்துடிப்பின் அளவு மளமளவென்று அதிகரிக்கிறது. அதாவது படபடப்பு கூடுகிறது. ஆறு மாத கருக் குழந்தைக்கு இந்த அனுபவம் ஆரம்பமாகிறது. இதற்கு முந்தைய இளைய சிசுவுக்கு இந்த அனுபவம் இருக்காது. ஆறு மாதத்தில் இருந்துதான் சிசு தன்னுடைய அம்மாவின் குரலைக் கிரகிக்க ஆரம்பிக்கிறது.
சிசுவால் தாயின் குரல் அடையாளம் காணப்படுகிறது. கருவின் சிசுவுக்கு வெளியுலகத்தில் இருந்து முதன் முதலில் அறிமுகமாவது தாயின் குரல்தான். ஒரு சிறந்த கிரியா ஊக்கியாய் இதுவே அமைகிறது.
இக்காரணத்தால்தான், மனிதனுக்கு சோகமும் அழுகையும் ஏற்படும்போது அம்மாவின் அரவணைப்பு பெரிய பாதுகாப்பாய் அமைகிறது என்கிறது இந்த ஆய்வு. கருவிலேயே ஒரே ஒரு பாதுகாப்பாய் அமைவது அம்மாவின் குரல்தான்.
அது சரி, அம்மாவின் குரல்தானே ஊக்கமருந்தாய் ஆகிறது? பிறகு எப்படி அம்மாவின் ஸ்பரிசம் ஒரு தெய்வீக மருந்தாய் அமைகிறது என்று கேட்கலாம். அதற்கும் சரியான பதில் கிடைத்துள்ளது.
குரல் அதிர்வுகளின் அரவணைப்பு :
மொழி தெரியாத சிசு, அம்மாவின் குரலை இனம் பிரித்து அறிந்து குதூகலம் அடைவது எப்படி? மனித மொழிகள் எதற்கும் இன்னமும் அறிமுகம் ஆகாத ஒரு கருக்குழந்தைக்கு இது எப்படிச் சாத்தியம் ஆகிறது?
எல்லாம் அதிர்வுகளின் விளைவுதான். அம்மாவாகப் போகிற பெண்மணி பேசும்போது, ஒலி அலைகள் எழுகின்றன. அதற்கு ஏற்றாற்போல அவள் உடம்பில் அசைவுகள் ஏற்படுகின்றன. இவை இரண்டும் அதிர்வலைகளாக மாறி, அவளது உடம்பின் வழியாக கருவைச் சென்று அடைகின்றன.
ஒலி அலைகள் மற்றும் அங்க அசைவுகள் ஆகிய இரண்டின் ஒருங்கிணைப்பு மட்டுமே, சிசு அடையாளம் கண்டுகொள்ளும் முதல் விஷயம் ஆகிறது. அதன் ஆத்மார்த்தமான, அந்தரங்கமான, அழிக்க முடியாத முதல் முகவரி ஆகிறது இது.
இப்படித்தான் சிசுவுக்கு தாயின் குரல் அடையாளமாகிறது, அதற்கு பேச்சும் தெரியாது, மொழியும் தெரியாது, ஆனால் தன் அம்மாவின் அதிர்வலைகளை மட்டும் உணர்ந்துகொள்கிறது.
வெளி மனிதர்கள், குறிப்பாக அன்னியப் பெண்கள் யார் பேசினாலும், அவர்களின் அங்க அசைவுகளின் அதிர்வுகள் சிசுவைச் சென்றடைய வாய்ப்புக் கிடையாது. தவிர, கைரேகைகளைப் போலவே குரலுக்கும் தளித் தன்மை உண்டு. அதன் லயம், அலைவரிசை, ஓசை இதெல்லாம் ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் ஒன்று போல அமைவதே கிடையாது.
எனவே, அம்மாவின் குரல்தான் அதன் முதல் வெளி முகவரி ஆகிறது.
ஆய்வு மாதிரிகள் :
இந்தப் புதிய ஆய்வில், 150 சிசுக்கள் சோதிக்கப்பட்டு உள்ளன. இவற்றிடம் ஒரு கதை இரண்டு நிமிடங்கள் வாசிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிசுவிடமும் பல பெண்கள் இதை வாசித்துள்ளனர். அப்போது கரு சிசுவின் இதயத் துடிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்போது, அனைத்துப் பெண்களின் குரல்களில் இருந்தும் தனது அம்மாவின் குரலை மட்டும் சிசுவால் பிரித்தறிந்து கொள்ள முடிகிறது என்ற உறுதியான கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
சிசுவின் அம்மா கதை படிக்கும்போது மட்டும், அந்தக் குறிப்பிட்ட சிசுவின் இதயத் துடிப்பு, இதய சமிக்ஞைகளின் வலிமை மற்றும் அதை ஒட்டிய மற்ற அறிகுறிகள் அனைத்தும், சிசுவால் தனித்துவமாய் பிரித்து அறியப்பட்டுள்ளன.
தனது அம்மாவின் குரல் ஒலிக்க ஆரம்பித்ததும், கதை கேட்ட வீர அபிமன்யுவைப் போல, சிசுவுக்குள் ஒரு குதூகலமும், பரபரப்பும், நம்பிக்கையும், அரவணைப்பு உணர்வும் துளிர்த்துள்ளன.
பிற உயிரினங்களில்? :
தற்போது கிடைத்துள்ள புதிய முடிவுகளை உறுதிப் படுத்திக்கொள்ள, குரங்குகளிலும் இதே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவற்றின் கர்ப்பத்தில் இருந்த குட்டிகளும், தமது தாயின் குரலைக் கேட்டவுடன் உற்சாகம் கொண்டுள்ளன. குரங்கு சிசுக்களின் இதயத் துடிப்பிலும், தமது தாயின் குரல் அலைகள் கிடைத்தபோது நல்ல தாக்கத்தைக் காண முடிந்திருக்கிறது.
ஆக, மொழி, உச்சரிப்பு, சமுதாயத் தாக்கம் போன்ற அனைத்தையும் கடந்து, பிள்ளைக்கும் அம்மாவுக்கும் இடையே ஓர் இறுக்கமான பிணைப்பு கருவிலேயே முடிவாகி விடுகிறது என்பதை, மிக நுணுக்கமாய் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு விளக்கிவிட்டது என்கிறார்கள், அமெரிக்காவின் இன்ஸ்லேயும், பிரான்சின் சேரியரும்.
இப்பிணைப்புக்கு எல்லையே இல்லை என்பது, குரங்கில் இவர்கள் நடத்திய ஆய்வில் வெளிவந்திருக்கும் குறிப்பிடத்தக்க அம்சம். ஒரு சில குரல்களுக்கு மத்தியில் தன் அம்மாவின் குரலை இனம் பிரித்து அறியும் பிரச்சினைதான் மனிதக் குழந்தைக்கு இருக்கும்.
ஆனால் குரங்குக் கூட்டமோ பெரிது. அதன் மத்தியில், தனது தாயின் குரலை மட்டும் அதன் சிசு படக்கென்று கண்டுபிடித்து விடுகிறது என்றால், இது ஓர் அபூர்வ பந்தம்தானே?
தவிர, இந்தத் திறன், சிசு பிறந்தபிறகும் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் வரை நீள்கிறது என்கிறது ஆய்வு. குழந்தை தனது மிகச் சிறிய வயதிலும் அம்மா முகம் பார்த்துச் சிரிக்கிறது என்றால் அதற்கு இதே திறமைதான் காரணம் என்பதும் ஒரு புத்தம்புது அறிதல்தான்.
வியக்க வைத்த சாதனை :
இத்தனை நாட்களாக துல்லியமாக நிரூபணம் ஆகாமல், தற்போது நவீன உபகரணங்களின் உதவியோடு மருத்துவம் கண்டுபிடித்துள்ள இந்த அபூர்வ உறவை, புராணக்கதைகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே புட்டுப் புட்டு வைத்திருப்பதை உணரும்போது வியப்பு அதிகமாகிறது.
சிசுவுக்குள் உருவாகும் உணர்வுப்பூர்வமான பதிவுகளுக்கும், சமுதாயத்தில் அதன் பங்களிப்புகளுக்கும், அதற்குள் பதியும் அம்மாவின் குரல் அலைகள்தான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இக்காரணத்தால்தான், கருவைச் சுமக்கும் தாய் கடுமையாகவும், தீவிரமாகவும், கீழான பேச்சுகளுடனும், தரமற்ற உணர்வுகளுடனும் நடந்துகொள்ளக் கூடாது என்று பெரியோர்கள் கண்டிப்பாய் வலியுறுத்துகிறார்கள்.
‘தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை’ என்பது எவ்வளவு பொருத்தமான வாசகம்!