ஒருவருக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம், இப்போது “மாரடைப்பு வந்துவிட்டதே, இதற்குப் பிறகு நான் எப்போது மீண்டும் உடலுறவில் ஈடுபடலாம்?” என்பது அவருக்கு ஒரு கவலையளிக்கும் கேள்வியாக இருக்கலாம். இந்த சந்தேகத்தைப் போக்கவே இந்தக் கட்டுரை! ஒருவர் இப்போது தான் மாரடைப்பில் இருந்து குணமாகி வந்துள்ளார் என்ற நிலையில் மீண்டும் எப்போது நான் உடலுறவில் ஈடுபடலாம் என்று உடனே மருத்துவரிடம் கேட்பது சங்கடமான விஷயம் தானில்லையா! அதுமட்டுமின்றி, மீண்டும் உடலுறவில் ஈடுபடத் தொடங்குவது குறித்த பதற்றமும் அவருக்கு இருக்கலாம்.
மாரடைப்பு வந்த பிறகு உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா?
ஒருவர் மாரடைப்பிலிருந்து மீண்டு குணமாகிய பிறகு, அல்லது இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு குணமாகிய பிறகு, அவரது வழக்கமான உடல் உழைப்புச் செயல்களைச் செய்ய முடிகின்ற நிலை வந்ததும், மருத்துவரிடம் ஆலோசனை செய்து அவர் சம்மதம் கூறினால், வழக்கம் போல் உடலுறவில் ஈடுபடலாம்.
ஒருவருக்கு மாரடைப்பு வந்து குணமாகிய 4 முதல் 6 வாரங்களுக்குப் பிறகு, அல்லது இருதய அறுவை சிகிச்சை செய்து குணமாகிய 6 முதல் 8 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் உடலுறவில் ஈடுபடத் தொடங்கலாம் என்பது மருத்துவர்களின் பொதுவான பரிந்துரை. மற்ற உடல் செயல்பாடுகளைப் போலவே, உடலுறவு சார்ந்த செயல்களைச் செய்யும்போதும், இதயம் கடினமாக வேலை செய்யும், இதயத் துடிப்பும் இரத்த அழுத்தமும் அதிகமாகும். இருப்பினும், உங்கள் அறிகுறிகள் கடுமையாக இருந்தால், அல்லது இதயம் சம்பந்தப்பட்ட நிலைத் தன்மையற்ற நோய் இருந்தால், மீண்டும் உடலுறவில் ஈடுபடத் தொடங்கும் முன்பு, உங்கள் உடல்நலம் நிலைத்தன்மையுடன் இருக்கும் வகையில் அதற்கு தகுந்த சிகிச்சை பெற வேண்டியது கட்டாயம்.
உடலுறவு என்பது மிகக் குறுகிய காலமே நீடிக்கும் ஒன்று என்பதால், ஒருவருக்கு உடலுறவின் போது இதய நோய் சம்பந்தப்பட்ட நெஞ்சுவலியோ மாரடைப்போ ஏற்படுவது அரிதான ஒன்று என்று அமெரிக்க இதய நலச்சங்கம் கூறுகிறது.
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை
மாரடைப்பு அல்லது இருதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் உடலுறவைத் தொடங்குவது குறித்த உங்கள் கவலையைக் குறைக்க, பிரிட்டிஷ் இதயநல அமைப்பு பரிந்துரைக்கும் இந்த அடிப்படை வழிகாட்டுதல்களை நீங்கள் பின்பற்றலாம்:
மனதிற்கு பதற்றம் இல்லாத சாந்தமான சூழல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்
முதலில் பாலியல் ரீதியான ஸ்பரிசம், தூண்டல் போன்றவற்றில் ஈடுபட்டால் உங்களுக்கு இன்னும் ஊக்கமும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.
அதிகம் சாப்பிட்ட பிறகு உடலுறவில் ஈடுபட வேண்டாம்
உடலுறவிற்கு முன் அதிக மது அருந்தக்கூடாது
சரியான உடல் திசையமைப்பைத் (பொசிஷன்) தேர்வுசெய்து கொள்ளுங்கள்
உங்கள் துணைவர் உடலுறவில் முனைப்புடன் செயல்பட அனுமதியுங்கள்
தேவைப்பட்டால் உடனடியாகக் கிடைக்கும் வகையில் அவசர மருந்துகளை அருகிலேயே வைத்துக்கொள்ளவும்
மாரடைப்புக்குப் பிறகு பாலியல் ஆர்வம் ஏன் குறைகிறது?
மாரடைப்புக்குப் பிறகு பாலியல் ஆர்வம் குறைவது சகஜம்தான். ஆனால் இந்த நிலை கொஞ்ச காலமே நீடிக்கும். இப்படி பாலியல் ஆர்வம் குறைவதற்கு, நோய்க்காகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளும் உணர்வுரீதியான அழுத்தமும் காரணமாக இருக்கலாம். உங்களுக்கு நீரிழிவுநோய் இருந்தால், அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆண்களுக்கு ஆண்குறி விறைப்பதிலோ அல்லது விறைப்பைத் தக்கவைப்பதிலோ பிரச்சனைகள் இருக்கலாம் அல்லது பிற பிரச்சனைகளும் இருக்கலாம். பெண்களுக்கு, பாலியல் கிளர்ச்சி அடைவதில் சிக்கல் ஏற்படலாம்.
உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்
ஒவ்வொருவரின் சூழ்நிலையும் வித்தியாசமானதாக இருக்கும். இங்கு வழங்கப்படும் ஆலோசனைகள் எல்லோருக்கும் பொருந்தக்கூடியவை. உங்கள் சூழ்நிலைக்குத் தகுந்த தனிப்பட்ட அறிவுரைக்கு உங்கள் மருத்துவரிடம் பேசுவதே சிறந்த தீர்வாக இருக்க முடியும்.
பின்வரும் சூழ்நிலைகளில் உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ளுங்கள்:
உங்களுக்கோ உங்கள் துணைவருக்கோ உங்கள் உடல்நலம் குறித்த கவலை இருந்தால்..
நீங்கள் பெண் எனில், கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்த விரும்பினால்…
பாலியல்ரீதியாக குறைபாடு இருப்பதாக நீங்கள் கவலைப்பட்டால்
எச்சரிக்கை
உடலுறவின்போது அல்லது அதன் பிறகு, பின்வரும் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், அல்லது புதிய அறிகுறிகள் வந்தால், உடனடியாக பாலியல் செயல்பாட்டை நிறுத்திவிடவும்:
மார்பில் அழுத்தம் அல்லது வலி
தலைச்சுற்றல், மயக்கம் அல்லது கிறுகிறுப்பு
சுவாசிப்பத்தில் சிரமம்
வேகமான அல்லது சீரற்ற நாடித் துடிப்பு
இந்த அறிகுறிகளில் எதேனும் ஏற்பட்டால் உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொண்டு உங்கள் அறிகுறிகள் பற்றிக் கூறவும்.